"அம்மா" என்னும் ஒரு சொல்...வேண்டி.
வெறுமையாய் இருக்கும்
என் பனிக்குடத்தில்
என் கனவுகளில் தளும்புகிறது...
உனது "அம்மா" என்னும் குரல்.
கடவுளுடனான ....
உனக்கான எனது பிரார்த்தனைகள்
இந்தக் கணம் வரை
கைவிடப்பட்டுவிட...
என் கனவுகளில்..என்னை நெகிழ்த்துகிறது
உன் சிறு பாதங்களின் உதை.
உனக்கென நான் சேர்த்துவைத்திருக்கும்
எனது முத்தங்களால்...
நிரம்பிச் சிவந்து
அன்பின் நிறமாகி இருக்கிறது
எனது உதடுகள்.
எனது ஒவ்வொரு அரிசியிலும்
உனக்கான பங்கை...
நானும் உணர இயலாப் பேரன்புடன்
ஒளித்து வைத்திருக்கிறேன்...
விதை ஒளித்திருக்கும் விருக்ஷமென
என் இதயத்தில்
நீ உறங்கும் பகுதியில்.
தீராமல் எரிந்து கொண்டிருக்கும்
என் தனிமையின்....
இருள் விலக்கி
நீ ஒளிரும் நாளில்
பெரும் கூச்சம் தவிர்த்த பறவையென
பறந்து செல்வேன்...
உன் சிறகுகளோடு நம் வானமெங்கும்.
நீ அற்று...
இன்னமும் முதிராப் பருவமாய்
இருக்கும் என்னை
கடவுளின் அந்தம் நோக்கி நகர்த்தும்...
உன் "அம்மா" என்னும் ஒரு சொல்.
விழித்திருக்கிறேன்
விடியும் நம்பிக்கைகளோடு
எல்லா இரவுகளிலும்....
நீர் கசியும் கண்களோடும்...
உனக்கே உனக்கேயான
என் தனிப் பெரும் கனவுகளோடும்.