பூக்களின் அழைப்பு...

.....................................................................................
பூக்களின் அழைப்பு...
.....................................................................................
உங்கள் அ. மணிகண்டன்
.....................................................................................
பறிக்கப்படாமல்
விடப்பட்டதற்காக
எந்தப் பூக்களும்
வேதனைபடுவதில்லை...

ஏனென்றால் -
பறிக்கப் படாதபோதுதான் - அவை
விதைகளை
விட்டுச்செல்கின்றன...

பூக்களின்
பெருமையே
வண்ணமும்
வாசமும்தானே!
வண்ணங்களை தரிசிக்க
கண்கள் உண்டு.....
வாசத்தை சுவாசிக்க
நாசியுண்டு...

இப்போது சொல்லுங்கள்-
பூக்களைப் பறிப்பதால்
இலாபமென்ன???

இறைவன் - இந்த
இயற்கையை
எழுதினான் - தான்
இன்பமாய் படிக்க...

நாமோ - அதில்
திருத்தங்கள் செய்தோம்...
விருத்தங்களென்று - நாம்
நினைத்த எல்லாம்
அவனுக்கு
வருத்தங்களே - என நாம்
உணரப்போவது எப்போது???

நீ பூக்களைக்கொய்தாய்
சூடிக்கொள்ள...
இல்லை இல்லை
சூடிக் கொல்ல....

ஒரு பூவின்
மரணத்தில்தானா - உன்
பக்தி மணக்கவேண்டும்???
அந்தப் பூக்கள்
மரித்துதானா - உன்
அழகு சிறக்கவேண்டும்??

தவிர்க்கப்படாத
பழமையும் -
சேர்க்கப்படாத
புதுமையும்-
முன்னேற்றத்தின்
முட்டுக்கட்டைகள்...

காதல் - என்னை
விட்டுச் சென்றது...
நல்லவேளை - கண்ணீர்
என்னோடு
ஒட்டிக்கொண்டது...

கண்ணீர்கூடச் -
சிலவேளை
காயத்தின்
மருந்தாகிறது...

வா!!!
அங்கே - நம்மைப்
பூக்கள் அழைக்கின்றன...
பூரிப்போடுதான்...

ஏனென்றால் -
நாம் இனி -
ஒரு பூவைக்கூட
பிரிக்கப்போவதில்லை
விதைகளின்
ஆதாரத்தை
அழிக்கப்போவதில்லை

இன்னொரு காதலையும்....

ஏனென்றால் - காதலும்
பூக்களைப்போலத்தான்
பூக்களும் -
காதல்போலத்தான்...

எழுதியவர் : நெல்லை மணி (29-Aug-12, 11:34 pm)
சேர்த்தது : நெல்லை மணி
பார்வை : 122

மேலே