தோழமை படைப்பாளிகளுக்காக - கே.எஸ்.கலை - iv

தோழமை படைப்பாளிகளுக்கு இந்த பதிவின் மூலம் ஏதாவது கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும் எனும் எண்ணத்தின் அடிப்படையில் நான் படித்த சில கட்டுரைகளை உங்களோடு பகிரும் நான்காவது பாகம் இது. இங்கு நான் சில வித்தியாசமான கருப் பொருள்களையும், விளக்கங்களையும் கொண்ட படைப்புக்களை தர முயற்சி செய்கின்றேன்.
கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் கட்டுரைகளில் ஒன்றான “நிலா நிலா இல்லை” எனும் பதிவை பிரசுரிக்கின்றேன்...இது முழுக்க முழுக்க “கவிக்கோ” எழுதிய படைப்பு என்பதும் இதில் உள்ள எல்லா சிந்தனைகளும் விளக்கங்களும் அவர்களையே சாரும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த படைப்பின் நோக்கம் தளத்தில் உள்ள படைப்பாளிகளின் கவித்திறனுக்கு வலுவூட்டும் எண்ணம் மட்டுமே. எனக்கும் என் தோழர்களுக்கும் ஒரு மூத்த படைப்பாளியின் அறிவுரை கிடைக்குமே என்ற ஆசை தான். இந்த கட்டுரைகளை நான் வாசித்து பயனடைகின்றேன். உங்கள் முன் சமர்பிக்க என்ன காரணம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கின்றேன்.
தளத்தில் காணப்படும் படைப்பாளிகளுக்கு இது போன்ற கட்டுரைகள் அவசியம் என்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
இது என் கடமை அல்ல...உங்களின் மீது வைத்திருக்கும் உரிமை !
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்”
அன்புடன்,
கே.எஸ்.கலை.
_______________________________________________
நிலா நிலா இல்லை.
``````````````````````````````````
ஜெர்மனியக் கவிஞர் ஹெய்ன்றிச் ஹெய்ன் ஒரு முறை காட்டில் சிக்கிக் கொண்டார். வழி தவறிவிட்டது.மூன்று நாள் சுற்றிச் சுற்றி வந்தும் வெளியேற முடியவில்லை.ஆளைத் தின்னும் பசி; களைப்பு. அவரால் உறங்கவும் முடியவில்லை. காட்டு விலங்குகளின் பயம்.
மூன்றாம் நாள் இரவு பௌர்ணமி. வானத்தில் வட்ட நிலா முழு அழகோடு முகம் காட்டியது. பசி வேதனையோடிருந்த ஹெய்ன் நிலாவைப் பார்த்தார்.
என்ன ஆச்சரியம் !
அவர் பார்வைக்கு நிலா ரொட்டியாகத் தெரிந்தது. அவராலேயே நம்ப முடியவில்லை. எல்லாக் கவிஞர்களையும் போலவே அவரும், நிலாவை வர்ணித்து எத்தனையோ கவிதைகள் எழுதியிருக்கிறார். எல்லாக் கவிஞர்களையும் போலவே அவரும் நிலாவைக் காதலியின் முகம் என்று சொல்லியிருக்கிறார்.
என்ன ஆயிற்று ?
கண்களைக் கசக்கி மீண்டும் மீண்டும் பார்த்தார்.
ம்ஹும்...நிலாத் தெரியவில்லை, காதலியின் முகமும் தெரியவில்லை. ரொட்டி தான் தெரிந்தது. பசி நிலாவை ரொட்டியாக்கிவிட்டது.
பார்ப்பவன் உணர்வுக்கேற்பப் பார்க்கும் காட்சி மாற்றம் அடைகிறது. ஹெய்ன் ரொட்டி சாப்பிடும் மேனாட்டுக்காரர். அதனால் அவருக்கு நிலா ரொட்டியாக தெரிந்தது.
பசித்த தமிழன் நிலாவைப் பார்த்தால் என்ன தெரியும்?
பாரதிதாசன் பாடுகிறார்...
“நித்தியா தரித்திரராய்
உழைத்து உழைத்து
தினைத் துணையும் பயனின்றிப்
பசித்த மக்கள்
சிறிது கூழ் தேடுங்கால்
பானை ஆரக்
கனத்திருந்த வெண் சோறு
காணும் இன்பம்
கவின் நிலவே உனைக் காணும்
இன்பம் தானோ ?”
தினமும் கூழ் சாப்பிட்டே அலுத்துப் போன நாட்டுப் புறத்தான் நிலாவைப் பார்த்தான் அது.
“சோளப் பொறி மத்தியிலே
சுட்டு வைத்த தோசை”
போலத் தோன்றுகிறது. பாவம்! அவனுக்கு தோசை சாப்பிட ஆசை போலிருக்கிறது.
அரசனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறச் செல்கிறார் சங்கப் புலவர். அவர் பார்வையில் நிலா அரசனின் வெண்கொற்றக் குடையாகத் தெரிகிறது.
சேக்கிழார் சிவா பக்தர்.அவர் நிலா ஒளியைப் பார்த்து விட்டு, பூமி திருநீறு பூசியிருக்கிறது என்கிறார்.
குடிகாரனைக் கேட்டால் இரவுப் பெண் நிலாக் குவளையிலிருந்து கள் வார்கிறாள் என்பான்.
நோயாளி பார்த்தால் “நிலாப் புண் உடைந்து சீழ் வடிகிறது" என்பான்.
அரசியல்வாதிகளுக்கு சொற்பொழிவாற்றும் தலைவராகத் தெரியும். நட்ச்சத்திரங்கள் மகா ஜனங்களாகத் தெரியும்.
ஆடு மேய்ப்பவனுக்கு நிலா, நட்சத்திர மந்தையை மேய்க்கும் இடையனாகத் தெரியும்.
பிச்சைகாரியைக் கேட்டால் நிலா “பிச்சைக்கு விரித்த துணியில் விழுந்த வெள்ளை நாணயம். நட்சத்திரங்கள் இறைந்து கிடக்கும் சில்லறை” என்பாள்.
ஒரே நிலா தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாகக் காட்சியளிக்கிறது. பார்ப்பவர் மன நிலை பார்க்கப்படும் பொருளை மாற்றிவிடுகிறது. மனிதன் எல்லாவற்றையும் இப்படித் தான் பார்க்கின்றான்.ஒன்று அவனுக்கு பிடித்தமானதைப் பார்க்கின்றான், இல்லையென்றால் எதைப் பார்த்தாலும் தனக்குப் பிடித்தமான பொருளாகப் பார்க்கின்றான்.
நிலாவை நிலாவாகப் பார்ப்பவர்கள் யாராவது உண்டா?
****
அடுத்த கட்டுரையில் சந்திப்போம்!