சாரல் மழை...

எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.... மிகவும் சோர்ந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் பொழுது நான் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவேன். எனக்கு இரு சக்கர வாகனத்தில் யாருமில்லா சாலையில் வண்டியை ஓட்டிச் செல்வதென்றால் அவ்வளவு பிடிக்கும். அதுவும் மழைச் சாரல் வீச, உடல் புல்லரிக்க பயணிப்பதென்றால் சொர்க்கமே கிடைப்பது போல...

மேலும் எனக்கு மிகவும் பிடித்த சாலை மார்த்தாண்டம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்ச்சாலை. பழுதுகள் இல்லாத, சுற்றி மரங்கள் படர்ந்த அழகான சாலையது. பார்ப்பதற்கே அழகாக இருக்கும் அந்த சாலை. ஆக அந்த சாலைதான் என் பயண சொர்க்கம். பொழுது போகாத நேரங்களில் அந்த சாலை வழியாகத்தான் நான் செல்வேன். அதுவும் அந்த தாமரபரணி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலத்தை கடக்கும் பொழுது தண்ணீர் சத்தம் என் காதுகளில் கானமாக கேட்கும். அந்த பாலம் நடுவில் வண்டியை நிறுத்துவேன். என்ன அழகு தெரியுமா அந்த நதி!. சில நேரம் யோசித்திருக்கிறேன் ஏன் ஆறுகளுக்கு நதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உண்மையில் அதில் ஜூவன் ஓடுகிறது. சத்ததுடன் நீர் ஓடுகிறது, உயிர் ஓடுகிறது. மேலும் தாமிரபரணி ஆறு வற்றாத ஆறு... நான் அதன் உயிர் நின்று அதாவது தண்ணீர் வற்றிப் பார்த்ததில்லை. அந்த நதியை குறுக்கிடும் பொழுதெல்லாம் என்ன கவலைகள் இருந்தாலும் அது மறக்க வைக்கும் சக்தி அந்த ஈரக் காற்றுக்கு உண்டு. அதன் பிறகு மீண்டும் என் பயணம் அப்படியே தொடரும்...

அழகான சாலை... மரங்கள் நகரும் அழகு... பூக்கள் குதித்து விழும் நிறைவு... இவைகளை தாண்டி என் வண்டி நகரும் பொழுது என் வலிகள் பஞ்சாய் மாயும். அப்படியே மேலும் முன்னேறிச் செல்வேன். வழியில் ஒரு 'குழந்தை இயேசு' தேவாலயம் ஒன்று இருக்கிறது. பல ஆண்டுகள் பழமையான தேவாலயம். பொதுவாக தேவாலயங்களுக்கு இருக்கும் சிறப்புகளில் எனக்கு பிடித்து என்னவென்றால் அங்கு இருக்கும் அமைதி. எவ்வளவு நேரம் என்றாலும் அமைதியாக அமர்ந்து விட்டு வரலாம். அது கடவுள் முன்னாடி அமர்கிறோம் என்ற எண்ணமாலும் சரி, இல்லை எனக்கு இதைக் கொடு, அதை கொடு என்று கேட்கும் வேண்டுதலாக இருந்தாலும் சரி.

அந்த தேவாலயத்தினுள் சென்று குழந்தை இயேசுவின் முகத்தையே கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டிருப்பேன். மனதில் எந்த எண்ணைத்தையும் ஓடவிடாமல் அமைதியாக அமர்ந்திருந்து விட்டு வெளியே வருவேன். மனம் தெளிவாக இருப்பதை போல் உணர்வேன். அது ஒரு வேளை என் தோணலாக இருக்கலாம். பிறகு என் வண்டியின் வேகம் அதிகரிக்கும்.


நேராக நெய்யாற்றம்கரை என்ற ஊரில் அந்த பாட்டி கடை முன்னால் வண்டியை நிறுத்துவேன். பாட்டியிடம் நலம் விசாரித்து விட்டு ஒரு இளநீர் வாங்கி அருந்தி விட்டு வண்டியை நான் வீட்டிற்கு திருப்பும் பொழுது என் மனக் கவலைகள் கலைந்து போயிருக்கும்.


அன்று அப்படிதான் கோபம்... கோபம்... எல்லார் மேலும் கோபம்... அப்பா, அம்மா மேல் கோபம் அண்ணன், தம்பி மேல் கோபம்... கத்தினேன்... சண்டையிட்டேன்... இனி இந்த வீட்டினுள் வரவே மாட்டேன் என்று கத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன், மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.

"இந்த பாழாய் போன மழையும் என்னை நிம்மதியாக இருக்க விடாது..." என்று திட்டிவாறு வீட்டின் முன்னால கோபத்துடன் நின்று கொண்டிருந்தேன். மழை மாற காத்திருந்தேன். அரைமணி நேரம் பிடித்த மழை கொஞ்சம் கொஞ்சமாக மழை குறைய ஆரம்பித்தது. வேக வேகமாக வண்டியை எடுத்தேன், ஓடவிட்டேன்...

சாரல் என் கண்களில் வந்து விழுந்தது... கண்களை மூடித் திறந்தேன். உடல் அப்படியே புல்லரித்து நின்றது. குளிர் மூளைக்கு பாய்ந்தது. மழை நின்ற மண் வாசனை நாசி வழியாக இதயத்தில் ஏறியது. ஏன் இவ்வளவு கோபம் அப்படி என்ன நடந்து? எதற்கு இவ்வள்வு கோபப்பட்டேன்? நான் செய்த இந்த செயலால் என்ன அப்பா அம்மா என்ன பாடு பட்டிருப்பார்கள். இதனால் எனக்கு என்ன லாபம். யோசிக்க யோசிக்க என் மூளை கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்தது. இனி கோபப் படக்கூடாது. என் இந்த செயல் எல்லாரையும் பாதிக்கும். என்று முகத்தை மேலை திருப்பினேன். சாரல் என் முகத்தில் பொழிந்தது. அப்பொழுதுதான் நான் அந்த நெடுஞ்சாலையை அடைந்தேன். மழை பெய்து ஓய ஆரம்பித்ததால் சாலை கானல் நீர் மேல் மழை நீர் விழுந்து மின்னிக்கொண்டிருந்தது. என் வண்டியின் வேகம் சற்று அதிகமானதால் சாரலின் வேகமும் அதிகமானது.

கோபம் கரைய சோகம் மழுங்க கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கைக்குள் பயணப்பட தொடங்க்கினேன். என் கண் தூரத்தில் தாமிரபரணி பாலம் தெரிந்த பொழுது இன்னும் மனம் அமைதியானது. வண்டியை பாலத்தின் நடுவே சாலையின் ஓரத்தில் எப்பொழுதும் போல் நிறுத்தினேன். வண்டியை சாய்த்து நிறுத்திவிட்டு வண்டியில் சாய்ந்து நின்று கொண்டேன்.

மழையால் தண்ணீர் ஓடும் சத்தம் ஆரவாராமய் காதுகளில் வந்து விழுந்தது. ஏன் உனக்கும் இவ்வளவு கோபம்? உன்மேல் வானம் அதிமாக பாரத்தை கொட்டி விட்டதா? பார்... எவ்வளவு அழகாக இருப்பாய்? இன்று கலங்கி போய் நிறமாறி இன்று ஏன் இப்படி அலங்கோலமாய் காட்சி தருகிறாய்? என்று நதியைப் பார்த்துக் கேட்க தோன்றியது.


மக்கள் குளிக்குமிடத்தை பார்த்தேன் நீர் சீற்றத்தால் மக்கள் யாருமில்லை. அப்படியே சுற்றிப் பார்த்தப் பொழுதுதான் அந்த காட்சி தெரிந்தது.

" அந்த பெண் அங்கே என்ன செய்கிறாள்? சின்ன பெண் போல் தெரிகிறதே? ஏதோ விபரீதம் நடப்பது போல் தெரிகிறது..." என்று ஆற்றின் ஓரமாய் ஒரு திட்டில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப்பார்த்ததும் மனது பதறியது. வண்டியை திருப்பி ஆற்றின் ஓரமாக வேகமாக ஓட்டினேன். ஓரம் சென்றதும் வண்டியை கீழே விட்டு விட்டு அவள் அருகில் ஓடினேன்.

ஆற்றில் குதிப்பதற்கு தயராக இருந்த அளை தடுத்து நிறுத்த முயற்சித்தேன்.


"விடிங்க அண்ணா... நான் சாகணும்... எனக்கு இந்த வாழ்கை வேண்டாம்... நான் சாகணும்...."

"சாகலாம்..."

மீண்டும் மீண்டும் அழது கொண்டு என்னிடம் பலம் பிடித்துக் கொண்டிருந்தாள்.


நான் விடவில்லை... பேசிப் பேசி அவளை அந்த இடத்தில் அமரவைத்தேன். அரைமணி நேரம் அழுது கொண்டிருந்தாள். அவள் கண்ணீர் வற்றிய பிறகு நான் ஆரம்பித்தேன்.

"நீ சொல்வது சரிதான்... ஏமாந்த நீதான் தண்டனையை அனுபவிக்கணும்... நீ செத்து போய் உன்னை ஏமாத்தினவனை தண்டிக்கணும்னு ஆசை படுற. எல்லாம் நல்லதுதான். என்னை நீ அண்ணான்னு சொன்னல்ல... கொஞ்சம் தூரம் என் கூட வா... ஒரு 15 கிலோ மீட்டர் எங்கூட வண்டில வா... திருப்பி உன்னை இங்கேயே விட்டுறேன்... நீ குதிச்சு சாகலாம்..."

அவள் என்னை அப்படியே பார்த்தாள்....

"எப்படியும் சாகுறதுன்னு முடிவு பண்ணிட்ட... "

அவள் யோசித்தவாறே மெதுவாக எழுந்தாள். என்னால் சொல்ல முடியும் அவள் என்ன யோசித்திருப்பாள் என்று? "எப்படியும் சாக போற உயிர் இவன் அதிகமாக போனால் என்ன செய்துவிடுவான்... என்னதான் சொல்ல போகிறான்...பார்கலாமே..." என்று யோசித்திருக்கலாம்.

நடந்து வந்து சாய்ந்து கிடந்த வண்டியை கையால் தூக்கினேன். வண்டியை ஸ்டார்ட் செய்ய அவள் ஏறி அமர்ந்தாள். என் மேல் துளிக் கூட அவள் உடம்பு பட்டுவிடக் கூடாதென்று தெளிவாக இருந்தாள். மீண்டும் அந்த பாலத்தின் நடுவே வந்த பொழுது வண்டியை நிறுத்தினேன். தாமிரபரணியை பார்த்தவாறு சொன்னேன், "இந்த ஆறு மழைக்கு முன்னால் வரை எவ்வளாவு அழகாக இருந்தது தெரியுமா? ஏன் தெரியுமா? அதன் ஓட்டத்தில் அமைதி இருந்தது...? எந்த பொருளையும் கட்டாயப்படுத்தி அடித்துச் செல்லவில்லை. ஆனால் இப்பொழுது அதனுடன் ஓடும் பொருட்களைப் பார். ஒன்றுகூட தன் விருப்பத்தில் செல்வதுப் போல இல்லை. எல்லாம் ஆற்றால் அடித்து செல்வது போல்தான் இருக்கிறது. இதனால் எவ்வளவு சத்தம்... எவ்வளவு அலங்கோலம்.? என்றவாறு வண்டியை நகர்த்தினேன்.

ஒவ்வொரு இடத்தை தாண்டும் பொழுதும் இயற்கையின் அழகை சொல்லிச் சொல்லி ரசித்தவாறு அந்த குழந்தை இயேசு தேவாலயத்தின் முன்னால் வந்து நின்றேன்.


"இங்க பாருமா?... நீ என்ன மதம்ன்னு எனக்கு தெரியாது? ஆனா இது குழந்தை இயேசு சர்ச் . எதையும் யோசிக்காமா உள்ள வந்து கொஞ்ச நேரம் அமைதியா இரு...." எனக்கு தெரியும் அவளால எதையும் யோசிக்காம ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று. உள்ளே சென்று அமர்ந்தேன். என் முன்னால் அவளும் அமர்ந்தாள். பத்து நிமிடங்கள். நான் எப்பொழுதும் போல் இயேசு முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்தேன். பிறகு எழுந்து அவள் முன்னால் சென்றேன். அவள் கண்கள் கலங்கியிருந்தது. என்னைப்பார்த்தும் அவளும் எழுந்தாள்.


"பாரு... இது குழந்தை இயேசு... இவரு மக்களுக்கு நல்ல செஞ்சதெல்லாம் ஒரு வாலிபனா வளர்ந்த பிறகுதான். ஏன் சிலுவைல இறந்து போனதும் வாலிப வயசிலதான். அப்புறம் ஏன் குழந்தையா இருக்கிற இவரை கடவுளா கும்பிடணும்?"

"----"

"அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு, குழந்தை மனசு கள்ளம் கபடம் இல்லாதது... சூது வாது எதுமே இருக்காது. எவனாது ஏமாத்தினால். ஏன் அடிச்சாலும் எல்லாமே அடுத்த நிமிசம் மறந்திரும். சுத்தமான மனசு உள்ளது குழந்தை. அதே நேரம் அந்த குழந்தைக்கு உன்ன பிடிச்சிச்சினா, உன்னை பார்த்த உடனே வந்து ஒட்டிக்கும். சோ... அந்த மாதிரி மனிதன் வாழ வேண்டும். முப்பது வயசிலேயே அவர் இவ்வளவு நல்லவரா இருந்தாரே குழந்தையா இருக்கும்போது எவ்வளவு நல்லவரா வாழ்திருப்பாரு?!"


"----"

"அப்புறம்... சிலவங்க சொல்லுறது....குழந்தைட்ட என்ன கேட்டாலும் கிடைக்கும். கையில் இருந்திச்சின்னா எப்படியாவது வாங்கிரலாம். இல்ல புடிங்கிக்கலாம். அதனாலாதான் கடவுள் குழந்தையா கும்பிடுறோம்ன்னும் சொல்லுறாங்க..."

"----"

"நீ என்னவா எடுத்துக்க போற...? எப்படி வாழ போற... அதை யோசிச்சிட்டே எங்கூட வா...."


நேராகா அந்த பாட்டியின் கடைக்கு சென்றேன். . . சுடான பஜ்ஜி தயாராக இருந்தது, பாட்டியிடம் பேசி விட்டு அதில் இரண்டு எடுத்து அவளிடம் கொடுத்தேன். நானும் இரண்டு எடுத்துக் கொண்டேன். பாட்டியிடம் பேச்சை தொடர்தேன்...

"பாட்டி அவரு எப்படி இருக்காரு..."

"நல்லா இருக்கான்ப்பா..."

"சரி பாட்டி..." என்றவாறு அவளிடம் திரும்பினேன்.

'இவங்க... வெயில் காலம் வந்தா இளநீர் விப்பாங்க. குளிர் காலம் வந்தா வடை, பஜ்ஜி செஞ்சு விப்பாங்க. ஏன் தெரியுமா? எதுக்கு தெரியுமா? அவங்களோட முத்த பையன் பொறந்த உடனே படுக்கைல படுக்க வெச்சதுதான். இதுவரைக்கும் எந்திரிக்கவே இல்லை. உடம்பில எந்த உறுப்பும் வேலை செய்யாது. கண்ணு, மூக்கு, காது தவிர. பேசுறது கூட வாய் பேசாதவங்க பேசுறது மாதிரி பே..பே..தான். சாபிடுறதும் படுத்திட்டுதான். ஏன் டாய்லெட் போகணுனாலும் அங்கேயே படுத்திட்டுதான். உட்கார வைக்க முடியாது. இவரை பார்த்துக்க முடியாதுன்னு முதல புருசன் விட்டுட்டு பொயிட்டானாம். அப்புறம் மத்த பெத்த பசங்களும். தனியா தனி மரமா நின்னு அந்த பையனை வாழ வெச்சிட்டு வற்றாங்க. இப்ப அந்த பையனுக்கு 40 வயசு."

இன்னும் என் பேச்சில் அவள் கவனம் அதிகமாகியது என்னால் உணர முடிந்தது.

"அவரு ஏன் வாழணும். யாருக்கும் உதவாத அவரு ஏன் வாழணும். அம்மாவிற்கே பாரமா இருக்கிற அவரு ஏன் வாழணும்? கொஞ்சம் யோசிச்சு பாரு. இருந்தாலும் அவரும் வாழுறாரு. நான் இங்க வரும் பொழுதெல்லாம் இந்த பாட்டி சொல்லி அழுவாங்க. நான் செத்து போனா என் பையன் நிலைமை. சாப்பாடு கொடுக்க யாருமில்லாம பட்டினி கிடந்து சாவான்னேன்னு நெனச்சா... அப்படின்னு சொல்லிட்டு அவங்க அழுறது பார்த்தேனா எப்படி இருக்கும் தெரியுமா? அந்த கொடுமையை சொல்ல முடியல" உண்மையின் என் கண்கள கலங்கியது. கண்களை துடைத்து விட்டு,

"பாட்டி நீங்க எதுக்கும் கவலை படாதீங்க நாங்கெல்லாம் இருக்கோம்..."

இதற்கு மேல் எனக்கு அவளிடம் ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. கண்களை துடைத்து விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். இம்முறை என் தோள் மேல் கை வைத்து வண்டியின் பின்னால் ஏறினாள். எனக்கு புரிந்தது என் மேல் அவளுக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்று.

அவளிடம் எதுவும் பேசவில்லை. நேராக தாமிரபரணி பாலத்தில் நடுவில் வண்டியை நிறுத்தினேன். இறங்கினாள். அவள், நான் மீண்டும் பேசுவேன் என்று எதிர்ப்பார்த்திருக்கலாம். ஆனால் அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. மீண்டும் தாமிரபரணியைப் பார்த்தவாறு வண்டியை நகர்த்தினேன். கலங்கி ஓடிக்கொண்டிருந்த ஆறு சற்று தெளிந்திருந்தது.

அவள், நான் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றது வண்டியின் கண்ணாடியில் தெரிந்தது.

இனி அவள் கண்டிப்பா தற்கொலை செய்து கொள்ளமாட்டாள். மீண்டும் ஒருமுறை சந்தோஷமான தருணத்தில் அவளை சந்திப்பேன் என்ற எண்ணத்தில், நம்பிக்கையில் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன்...

- ஜெயன் எம். ஆம்

எழுதியவர் : - ஜெயன் எம். ஆம் (8-Sep-12, 3:22 pm)
Tanglish : saaral mazhai
பார்வை : 289

மேலே