டாஸ்மார்க் பஞ்ச்

டாஸ்மார்க் பஞ்ச்

டாஸ்மார்க் பஞ்ச்(ஒரு மொக்கை கதை)...

எப்பொழுது ஆறு மணியாகும் என்று பார்த்து கொண்டே இருப்பான். ஆறு மணியை கடிகார முட்கள் தொட்டதும் வேக வேகமாக வண்டியை எடுப்பான். நேராக போகிற வழியிலிருக்கிற டாஸ்மார்க்குள் செல்வான். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வருவான். அவன் வெளியே வரும் கோலத்தை பார்த்தாலே தெரியும், அவன் எட்டு காலில் இல்லை பல நூறு காலில் வருகிறான் என்று. டாஸ்மார்க்குக்குள் நுழையும் பொழுது அலுவலகத்திற்கு எப்படி சென்றானோ அப்படியே மடிப்பு கலையாமல் இருப்பான். ஆனால் வெளியே வரும் பொழுது... அவன் எப்படி வெளியே வருகிறான் என்று அவன் இதுவரைக் கண்டதில்லை. அதன் பிறகு மீண்டும் குடி போதையில் வண்டியை பாம்பை விட மோசமாக ஓட்டி செல்வான். மொத்தத்தில் அகிலன் மாலையானால் மதுலோகத்தில் குடிமகன். கொஞ்சமில்லை, தினமும் ஒரு அரை பாட்டிலையாவது காலி செய்து விட்டுதான் வெளியே வருவான். அதுவும் எதாவது நண்பர்களை கிடைத்து விட்டால் அவன்தான் அகிலனை வீடு கொண்டு வந்து சேர்ப்பான்.

ஏன்டா குடிச்சு உடம்ப கெடுத்துகிறேன்னு கேட்க்கிற அவன் அப்பா, அம்மா மற்றும் நெருக்கமானவர்கள் யாருக்கும் என்ன காரணுமென்று இதுவரைக்கும் தெரியாது,
வயசு முப்பத்து ரெண்டு ஆகுதில்லை, மாசம் மாசம் எவ்வளவு சம்பாதிக்கிற எல்லாத்தை இப்படி குடிச்சு அளிக்கிறியேடான்னு பொலம்பும் அப்பாவிற்கும் தெரியாது.
ஐயா உங்க பையனுக்கு நல்ல வரன் ஒண்ணு வந்திருக்கு பார்க்கலாமான்னு கேட்கும் தரகரை கோபத்தில் அடிக்க செல்லும் அகிலனின் அப்பாவைப் பார்த்து சுற்றத்தார் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் தெரியாது. அத்தனை கேள்விகளும் அகிலன் மட்டும்தான் பதில்... அடிக்கடி மனசிற்குள் நினைப்பான்...தண்ணியடிப்பதை எப்படியாவது நிறுத்தி விட வேண்டுமென்று. ஆனால் அடுத்த நொடியே, நான் ஏன் வாழ வேண்டும் என்று மனசு மாறி விடும்.

இன்று புதன் கிழமை, மாலை ஆறு மணிக்கு அலுவலகம் முடியும் என்று எதிர்ப் பார்த்த அவனுக்கு வந்த திடீர் வேலையினால் மணி ஏழைத்தாண்டிதான் வெளியே வர முடிந்தது.

எப்பொழுதும் செல்வதை விட இன்று வேகமாக வண்டி பறந்தது. வாய் நம நமன்னு நமத்தது...

ஆதம்பாக்கம் டாஸ்மார்க் கொஞ்சம் சுத்தமாகவும், நிறைய கூட்டமாகவும் இருக்கும். ஒரு ஓரமாய் இருந்த மேசையைப்பார்த்தான். இதற்கு முன்னால் வந்து மது அருந்தி விட்டு சென்றவர்கள் விட்டு சென்ற பாட்டிலும் இதர குப்பைகளும் மேசை மேல் கிடந்தது. அதை தொடாமல் "சுரேஸ்...' என்று குரல் கொடுத்தவாறு இருக்கையில் அமர்ந்தான். சுற்றி முழுவதும் போதையில் உளரல் சத்தம் காதை கிளித்தது. ஆனால் அது அவனுக்கு புதிதாக இல்லை என்பதால் அவன் கவனம் அதில் செல்லவில்லை.

அந்த டாஸ்மார்க்கில் வேலை செய்யும் சுரேஸ் அகிலன் குரலை கேட்டதும் அருகில் வந்தான்,

"என்ன சார்...இன்னைக்கு இவ்வளாவு லேட்...."

"ஆமப்பா...சரி...ஒரு ஆஃப் மார்பியஸ்... அரை லிட்டர் செவன் அப்... ஒரு பாக்கெட் கிங்க்ஸ்..."

"சார்..சைடிஸ்...'

"எத்தனை தடவை உங்ககிட்ட சொல்லுறது..."

"சரி சார்... எப்பவும் சாப்பிடுற தலை கறியே எடுத்திட்டு வற்றேன்..."

"ம்ம்.. முதல்ல டேபிள்ள கிளீன் பண்ணு..."

"சரி சார்..." சுரேஸ் அவன் வேலையில் மூழ்கினான். அகிலன் மனம் மது அருந்தும் முன் தினமும் தன்னை நினைத்து வருந்தும்...

"ஒரு கெட்டப் பழக்கமும் இல்லாத இருந்த நான் இப்படி ஆயிட்டனே. . ."

கொஞ்ச நேரத்தில் சுரேஸ் கையில் மது பாட்டிலும் இதர பொருட்களுடனும் வந்தான்.

"தம்பி வெச்சிரு...."

"சரி சார்...எதாவது வேணும்ன்னா சொல்லுங்க..."

"தீப்பெட்டி..."

அகிலன் மது பாட்டிலை ஓப்பன் செய்து பிளாஸ்டிக் டம்பிளரில் காலளவிற்கு நிறைத்து அதுனுடன் குளிர்பானத்தை கலந்தான். பிறகு அதை அருந்துவதற்கு முன் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான். மூன்று நான்கு இழுப்பிற்கு பின் அதை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றி இடது கைக்கு கொண்டு சென்றான். மீண்டும் வலது கையில் மது டம்பிளரை எடுத்தான். எடுத்து வாயில் வைத்ததுதான் நேரம் பட்டென்று ஒருவன் அகிலன் கையில் வந்து விழுந்தான். மது டம்ளர் கையிலிருந்து எகிறியது. கோபத்தில் அவன் சட்டையை பிடித்து அடிக்க கையும் எடுத்து விட்டான்,

"சார்..அவன சாகடிங்க சார்...டெய்லி தாங்க முடியல..." அவனுடனும் இவனுடன் மது அருந்த வந்தன் போல் தெரிகிறது. கோபத்தில் திட்டி விட்டு வெளியே சென்றான் அவன் நண்பன். அதற்கு மேல் அவனை அடிக்க அகிலனுக்கு தோன்றவில்லை. அவனுக்கு என்ன பிரச்சினையோ...

"சார்...உக்காருங்க..." என்று எதிலிரருந்த இருக்கையை அகிலன் அவனுக்கு காட்டினான்.

"நீங்களும் என்னைப் போலதான் போல தெரியுது. சரக்கு இல்லாம தூங்க மாட்டீங்க போல...உங்க பேரு என்ன சார்...."

"பாஸ்கர்...சரக்கு இல்லாமலும் தூங்க மாட்டேன்...பொண்டாட்டி இருந்தாலும் தூங்க மாட்டேன்...ராட்சசி...ராட்சரி என்னை வாழ்கையே நரகமா ஆகிட்டா சார்..." போதையில் நாக்கு குளற குளறா சொன்னான் பாஸ்கர். இன்னும் கொஞ்சம் விட்டா அழுது விடுவான் போல தெரிந்தது. இதற்கிடையில் சுரேஸ் புது டம்பிளரை கொண்டு வைத்தான்.

"சுரேஸ் இன்னொரு டம்பிளர் கொடு...." என்று கேட்டவாறு கையிலிருந்த டம்பிளாரில் மதுவை ஊற்றினான்.

"சார் இதை குடிங்க..."

"வேணாம் சார்.."

"பறவாயில்லை சார்..." என்று அகிலன் டம்பிளரை பாஸ்கர் கையில் திணித்தான். அதை வாங்கிக் கொண்டான் பாஸ்கர்

"சார் நீங்க..."

"டம்பிளர் வரட்டும்...ம்ம... நீங்க சாப்பிடுங்க...."

பாஸ்கர் கண்களை மூடிக் கொண்டு கப் கப்பென்று அடித்தான். அடித்தவன் டம்பிளரை படார் என்று மேசையில் எறிந்து விட்டு ஓவென்று அழ ஆரம்பித்தான்.

"எப்படி இருந்தேன் தெரியுமா சார்... அவதான் வேணும் வேணும்ன்னு மூணு வருசம் சார்..ஓ..ஓஓஓஓ..." போதையில் பேச்சைவிட அழுகைதான் அதிகமாக வந்தது.

"அழாதீங்க சார்..."

பாஸ்கர் கண்களை துடைத்துக் கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தான்,

"பின்னாடி திருஞ்சேன்...இவரே...உங்க பெயரு என்ன?"

"அகிலன்..."

"ஓ..ஐ ஆம் பாஸ்கர்..." என்று கையை நீட்டினான் பாஸ்கர்.

இன்னும் ஒரு ரவுண்ட் கூட அடிக்கல, இப்ப ரொம்ப முக்கியம் இந்த அறிமுகம் என்று நினைத்துக் கொண்டான். இதற்கிடையில் சுரேஸ் புது டம்பிளரை எடுத்து மேசையில் வைத்தான்.

"அகிலன்... சார் எதுக்கு சார்??? உங்கள...இல்ல இல்ல...உன்னை நண்பான்னு கூப்பிடவா?"
இது எல்லாம் டெய்லி நடக்கிறதுதானே என்று அமைதியாக இருந்தான் அகிலன்.

"சொல்லுங்க பாஸ்கர்..."

"சொல்லுடான்னு சொன்னாதான் சொல்லுவேன்..."

"சொல்லுடா...இப்ப சொல்லு..."

"ஹெம் ஹெம் ஹெம்...." மீண்டும் அழ ஆரபித்தான்.

"பாஸ்கர்...ரொம்ப லவ் பண்ணுனேன்...கல்யாணம் வரைக்கும் சூப்பரா இருந்தா. அதுக்கப்புறம் அவ பண்ணுற வேலை இருக்கே..."

"என் பேரு அகிலன் நண்பா...உன் பெயருதான் பாஸ்கர்" என்று தவறை திருத்தினான் அகிலன்

"இண்ணைக்கு தண்ணி அடிச்சிட்டு போறேன் இல்லை. வீட்டுக்கு போனா அடிதான்...என்னாலயும் அடிக்க முடியும்... பாசம் சார்.. சாரி...பாசம் டா...தெளிவா போனா...சொல்லவே வெக்கமா இருக்கு...பழைய படத்தில எல்லாம் வற்றது மாதிரி சட்டைல முடி இருக்கா...மல்லி பூ வாசனை எல்லாம் வருதான்னு செக் பண்ணுறா...எப்ப பாரு சண்டை....யாரோடையும் பேச முடியல....எதுவும் பண்ண முடியல...ரெண்டு டைம் யாருக்கும் தெரியாம சாகலாம்ன்னு டிரை பண்ணுனேன் ஆதுவும் முடியல...உன்னால என்னடா முடியும்னு..."என்று மீண்டும் அழ ஆரம்பித்தான். இதற்குமேல் தாங்காது என்று அகிலன் முதல் சுற்று மதுவை எடுத்து வாயில் வைத்தான்.

"அழதா பாஸ்கர்..."

"உனக்கு என்ன பிரச்சினை நண்பா...அ..கி...உங்க பெயர சொல்லவேயில்லை பார்த்தீங்களா.."

"ஐயோ சாமி...எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை பாஸ்கர்....நீ மேல சொல்லு..."

"என்ன தப்பா நினைக்க கூடாது...இன்னொரு ரவுண்ட் ஊத்துடா..."

"இப்பவே ரொம்ப ஓவர்..
."
"எனக்கு வேணும்... இல்ல... அழ ஆரம்பிச்சிருவேன்..."

இவன் உண்மையா அழுறானா?.. இல்லை சரக்குக்காக அழுறானா? என்று மனதிற்குள் கேட்டவாறே அடுத்த சுற்றிற்கு மதுவை அவன் டம்பிளரில் ஊற்றினான் அகிலன்.

"சார்...ஒரு தடவை அவளை கொல்ல கூட டிரை பண்ணுனேன். ஆனா தப்பிச்சிட்டா...சத்தியமா அவ மனிசியே இல்லை. சாப்பாடு கூட கொடுக்க மாட்டேங்கிறா...சமைக்க சொன்னா ஹோட்டல வாங்க சொல்லுறா..."

இப்படி போதையில் அழுது அழுது எதேதோ சொல்ல ஆரம்பித்தான். அவன், அவன் மனைவியை பற்றி சொல்ல சொல்ல ஒரு பெண் ஒரு கணவனை இவ்வளவு கொடுமை செய்வாளா என்று எண்ண தோன்றியது. தோன்றியது என்ன எண்ணிக் கொண்டான் அகிலன். அவன் அழுது அழுது போதையில் மண்ணில் விழும் முன் அகிலன் மீதி மதுவை முடித்தான். அதற்குள் சுரேஸ்,

"சார் டைம் ஆயிடுச்சு சார்..."

"சரி பில்லை குடு...."

சுரேஸ் பில்லை அகிலனிடம் நீட்டினான். ஆனால் பாஸ்கர்,

"நண்ண்ண்பபா...பில் நான் தான் குடுப்பேன்...."

"சீ சும்மா இரு நான் பாத்துக்கிறேன்..."

"அப்படினா நான் கடையை விட்டு போக மாட்டேன்...' என்று தள்ளாடியபடி பாக்கெட்டிலிருந்து பர்ஸ்ஸை எடுத்து அகிலன் கையில் திணித்தான்.

"ஐயோ..ஒரு ஆப்ஃ அடிச்சபிறகும் போதை இல்லைடா சாமி..."என்று தலையில் அடித்துக் கொண்டு பர்ஸ்ஸைத் திறந்தான்.

"பாஸ்கர்...இதுதான் உன் ஒவ்ப்பா?...பாசமில்லைன்னு சொல்லுற...புடிக்கலேங்கிற...ஆனா பர்ஸ்ல போட்டோ எல்லாம் வெச்சிருக்ற?"

"இல்லை அதுக்கும் சண்டை போடுவா... நான் காசு செலவு செய்யும்போ எல்லாம் அவ இன்னும் சாகல உயிரோடதான் இருக்கிறேன்னு ஞாபகத்திற்கு வரணுமாம்...ராட்சஸிஸிஸி..." என்று இழுத்தவாறு தரையில் சாய்ந்தான்.

"பாஸ்கர் நீ கடவுள் டா...சாமிடா...." கண்கள் கலங்க சொன்னான் அகிலன். மேலும் அவனை அதே இடத்தில் விட்டு செல்ல அவனுக்கு மனசு வரவில்லை.

"சுரேஸ் இவனை கார் வரைக்கும் ஆக்கி குடு...." என்று இருவருமாக காரில் ஏற்ற, மெதுவாக வீட்டை அடைந்தான். பாஸ்கர் போதையில் உளறிக்கொண்டே வந்தான். முதல் முறையாக ஒருவனை அவன் தூக்கி வருவதைப் பார்த்து அம்மா அதிர்ச்சியில் நின்றாள்...இதுவரைக்கும் அகிலனைத்தான் யாராவது தூக்கி வருவார்கள்.

விடியற்காலையில் எனோ சேவல் வேறுவிதமாக கூவியது. எப்பவும் போல் இன்றும் எழுந்து அமர்ந்தான். அப்பொழுது காலை ஏழு மணியிருக்கும். பாஸ்கரும் அவன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான்.

"சார்..அகிலன்..."

"ஆமா...சார்...உங்க வீட்டிற்கே கூட்டிட்டு வந்துடீங்களா..."

"எத்தனை தடவ கேட்ட பிறகும் நீங்க உங்க அட்ரஸ்...சரி அதை விடுங்க..."

"இதுவரைக்கும் என்னை அப்படியே விட்டு போயிருவாங்க அகிலன். காலையில மூணு மணிக்கு எந்திருச்சு வீட்டுக்கு போவேன். பக்கத்திலதான் வீடு. ஆதம்பாக்கம்...நீங்க நல்லவரு..."

"சரி பிறஸ் பண்ணுங்க. ஒண் அவர் முன்னாடி கிளம்பிறேன்..உங்கள டிராப் பண்ணிட்டு போறேன்..."

"ஹ்ம்...ஒண்ணு கேக்கணும் நீங்க ராத்திரி என்னை ஏன் என்னை கடவுள்டான்னு சொன்னீங்க..."

"சும்மாதான்..."

"சும்மா எல்லாம் இருக்காது...."

"என் நிலைமையை பார்த்துதானே???"

"அதுவும் உண்டு..."

"அப்புறம்..."

"கண்டிப்பா சொல்லணுமா?"

"சொன்னா தெரிஞ்ச்சுப்பேன்..."

"உங்க ஒய்பை ஆறு வருசம் ஒண் சைடா லவ் பண்ணுனேன்... அவளை கல்யாணம் பன்ண முடியலேன்னுதான் தண்ணி அடிக்க ஆரம்பிச்சேன். உங்க மேரேஜ் ஆல்பத்தில பாருங்க நான் இருப்பேன்..."

இடையில் குறுக்கிட்ட அம்மாவைப் பார்த்து அகிலன்,

"அம்மா..இனி சத்தியமா தண்ணியடிக்க மாட்டேன்...அப்புறம் எனக்கு பொண்ணு பாருங்க" என்று கூறிவிட்டு பாஸ்கர் முகத்தை பார்த்தான் அகிலன்.

“அடப்பாவி தப்பிச்சிட்டியேடா..." என்று பாஸ்கர் சொல்லியது அகிலன் காதுகளுக்கு கேட்கவில்லை என்றாலும் மனதில் கேட்டது.

- ஜெயன் எம் ஆர்

எழுதியவர் : ஜெயன் எம் ஆர் (8-Sep-12, 3:37 pm)
பார்வை : 396

மேலே