பேருந்து நிறுத்த இரும்பு தூண்...
பேருந்து நிறுத்த இரும்பு தூண்...
ஒவ்வொரு கதையை நான் எழுதும் பொழுதும் அந்த கதையை படிப்பவர்கள் சிரிக்க வேண்டும், அழ வேண்டும் அதுதான் என் வெற்றி என்று நினைத்துதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் முறையாக இந்த கதையை நான் எழுதும் பொழுது என் கண்கள் கலங்கியது. ஒரு வேளை அந்த நிகழ்ச்சி என்னை அவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கலாம்.
நான் ஒரு மருத்துவர். மருத்துவம் உயிர் காக்கும் தொழில். இன்று வரை என் தொழிலை சிறப்பாக செய்து வருவதாக எல்லோரும் சொல்கிறார்கள். நானும் மனதார அதை நம்பிதான் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறேன். தொழில் என்று செய்யாமல் கடமையாக செய்து கொண்டிருக்கிறேன். அந்த மருத்துவத்தை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் உண்டு அதுதான் தொடர்ந்து நான் சொல்ல போவது.
ஒரு குழந்தை பிறந்த உடனேயே அவன் அல்லது அவள் என்ன ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்.
என் பெற்றோர்கள் என்னை ஒரு பொறியாளனாக மாற்ற வேண்டும் முடிவு செய்திருந்தார்கள். அதற்கு நான் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. அவர்கள் கனவிற்கு விடை கொடுக்கும் வண்ணம் பத்தாவது பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மாணவனாக வந்தேன். படிப்பில் அவ்வளவு சிறந்தவனாக விளங்கினேன். இருந்தாலும் எனக்கு இந்த சிறிய வயதிலேயே பான்பராக் பழக்கம் எப்படியோ பழகி விட்டது. ஒரு நாள் இரண்டு மூன்று பாக்குகள் அப்பா அம்மாவிற்கு தெரியாமல் வாயில் போட்டு மென்று துப்புவேன்.
அடுத்தது பன்னிரண்டாம் தேர்வுக்காக உடனே தயாராக ஆரம்பிக்க வேண்டும். அதற்காக கோடைவிடுமுறையின் ஒரு டூவிசன் செண்டரில் என்னை சேர்த்து விட்டார்கள். காலை முதல் மாலை வரை வரிசையாக வகுப்புகள் நடைபெறும் வகுப்புகள் முடிந்ததும் சிற்றூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் ஒரு பாக்கு வாங்கி வாயில் போட்டு விட்டு பேருந்திற்கு காத்திருப்பேன்.
அன்று திங்கள் கிழமை. நேற்றைய விடுமுறை முடிந்து மிகவும் சுறுசுறுப்பாக வந்த நான், வகுப்புகளை முடித்து விட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எப்பொழுதும் போல கடைக்கு சென்று ஒரு பார்பராக்கை வாங்கி வாயில் அடக்கினேன். இதை பார்த்த கடைக்காரர்,
"தம்பி...உனக்கு பதினஞ்சு வயசு இருக்குமா?"
"ஆமா அண்ணா" என்றேன்
"இந்த வயசிலேயே இந்த பழக்கம் எப்படி? உனக்கு எப்படி படிப்பு வரும்?"
"ஹ்ம்...படிப்பு வரும் அண்ணா...இது சும்மாதானே...ஒண்ணும் செய்யாது..."
என் பதிலை கேட்டவர் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அறிவுரை கூறிவிட்டாரென்று நான் ஒன்றும் அதை நிறுத்தி விடவில்லை. தினிமும் அவர் கடையிலேயே வாங்கி மென்றேன்.
பிறகு பேருந்து நிறுத்த இருக்கைக்கு வந்தேன். அன்று பேருந்து நிறுத்தம் மற்ற நாட்கள் போல் அவ்வளவு கூட்டமாக இல்லை. பேருந்துகள் வருவதும் செல்வதுமாக இருந்தது. கையில் கடிகார முள்ளைப் பார்தேன் நான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் அரை மணி நேரத்திற்கு மேல் இருந்தது. சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அருகில் சில கல்லூரி செல்லும் பெரிய அண்ணாக்கள் இருந்தார்கள்.
ஏதேதோ ஜோக்குகள் சொல்வதும் சிரிப்பதுமாக இருந்தார்கள் நான் அவர்கள் வேடிக்கை பார்ப்பதிலேயே என் நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. தீடிரென்று ஒருவன்,
"என்னடா இந்த நாத்தம்? வாந்தியே வரும்போல இருக்கு!"
அதற்கு இன்னொரொருவன்,
"டேய் அங்க பாரு...அந்த கிழவன்தான் அந்த பஸ்டாண்டிலேயிருந்து இங்க வந்துட்டான் போல.."
"ஆமாடா டூபை ஓப்பன் செஞ்ச்சிட்டாண்டா..."
"வாங்கடா அந்த பக்கம் போகலாம்..." என்றவாறு மூக்கை பிடித்து கொண்டு எழுந்து நகர்ந்தனர். எனக்கும் அதே மனித மலத்தில் துற்னாற்றம் குப்பென்று வீசியது மூக்கை பிடித்துக் கொண்டேன். மெதுவாக எட்டிப்பார்த்தேன். என் முன்னால் இருந்த ஒரு தூண் அவரை மறைத்துக் கொண்டிருந்தது. அந்த தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்கிறார் என்று தெரிந்தது. பின்னாடி தெரிந்த அவரில் அழுக்கு துணியே சொல்லியது, ஆதரவற்ற ஆளென்று.
என்னதான் செய்கிறார்? ஒரு வேளை மலம் களிக்கிறாரோ? அப்படி இருந்தால் மக்கள் வரும் வழி இது என்று ஓரமாக அழைத்து சென்று விட்டு விடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. எல்லாம் ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததுதான். துன்பப்படுகிறவற்களுக்கு உதவி செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று.
மூக்கை பிடித்தவாறு எழுந்து அந்த இரும்பு தூணின் முன்னால் வந்தேன். அவரை பார்த்த அந்த நொடி உண்மையில் நான் அதிர்ந்து போய் நின்றேன்.
வாயில் ஒரு ரப்பர் குழாயை வைத்து உறிந்து குடித்துக் கொண்டிருந்தார். முகத்தில் பாரம் குறைந்து நிம்மதி தெரிந்தது. பசி குறைந்த புன்னகை தெரிந்தது. ஆனால் கண்கள் மட்டும் கலங்கி கலங்கி அழுது கொண்டிருந்தது.
என்ன இது? அந்த குழாய் எங்கிருந்து வருகிறது? கண்களை குழாய் செய்லும் பாதை வழியாக நகர்த்தினேன். அது அடி வயிறு பகுதியில் துழைகளிட்டு அவர் உடம்பிற்குள் சென்றது.
அதைப்பார்த்ததும் என் மூக்கிலிருந்த கையை பட்டென்று என்னை அறியாமல் விடுவித்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ஒன்றும் மட்டும் புரிந்தது அவர் உடம்பிலிருந்து வரும் கழிவை அவர் உண்கிறார்.
"ஏன்..."
அந்த அவஸ்தையில் அவரிடம் எதுவும் கேட்க முடியவில்லை. பின்னால் வந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்தேன்.
அறுபத்து ஐந்து வயதிருக்கும் அவருக்கு, க்ஷவரம் செய்து குளித்து உடை மாற்றி பல மாதங்கள் ஆயிருக்கும் என்று தோன்றியது. கண்டிப்பாக இருப்பிடமும் பிறப்பிடமும் பேருந்து நிறுத்தமாகத்தான் இருக்கும்.
ஏன் இப்படி மக்கள் மாற்றப் படுகிறார்கள். கடவுளின் படைப்புகளின் குறைப்பாடுகளா? ஏதேதோ மனிதில் எண்ணிக் கொண்டிருந்தேன் அதற்குள் என் பேருந்து வந்தது. அவரை பார்த்தவாறே பேருந்தில் ஏறினேன். அவர் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார். கையில் அந்த குழாயை இறுக்கி பிடித்திருந்தார். அவர் கண்கள் மட்டும் இன்னும் கலங்கி தெளியவில்லை.
பேருந்து நகர ஆரம்பித்தது...நாற்றம் சொஞ்சம் குறைய ஆரம்பித்தது.
அடுத்த நாள் வகுப்பு முடியும் வரை எனக்கு வேறு எதுவும் மனதில் ஓடவில்லை. பான் பராக்கை வாயில் போட்டு விட்டு ஓடி வந்து அவர் இருக்கிறாரா என்று பார்த்தேன். அந்த தூணில் சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த குழாயை கையில் பிடித்து கொண்டிருந்தார்.
அன்று என் பேருந்து வரும் வரை அவர் தூக்கத்திலிருந்து எழவில்லை.
அடுத்த நாள் அவரிடம் கேட்டவிடுவது என்று முடிவு செய்து அவர் முன்னால் வந்து நின்றேன்.
"ஐயா..." அவரை அழைத்தேன், அவர் கண்டு கொள்ளவில்லை.
"ஐயா... உங்களைதான்..." மெதுவாக தலையை திருப்பினார்.
"ஐயா..." என்ன சொல்லு எனபதுப் போல் என்னைப் பார்த்தார்.
"இல்லை ஐயா... உங்களுக்கு என்ன பிரச்சினை...டியூப் வழியா என்ன குடிக்றீங்க...எதனால் இப்படி?..."
அதற்கு "ஹ..ஹாஹா..." என்று சிரிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் நேரம் அவர் முன்னால் நின்றேன், அவர் வாயிலிருந்து எதுவும் வராது என்று முடிவு செய்த பின்னர் அங்கிருந்து நகர்ந்தேன்.
அதன் பிறகு தொடர்ச்சியாக சில நாட்கள் தினமும் அவர் முன்னால் வந்து நின்று விட்டுதான் வீடு சென்றேன். அவரும் என்னை பார்ப்பார். சிரிப்பார், அந்த சிரிப்பில் அவ்வளவு வேதனை இருக்கும்.
ஒருவழியாக என் கோடை வகுப்புகள் முடிவிற்கு வரும் நாள் வந்தது. க்டைசி நாள்,
"அண்ணா..இனி உங்க கடையில் பாக்கு வாங்க மாட்னேன். இண்ணையோட கடைசி...கிளாஸ் முடியுது..." என்று சொல்லும் பொழுதும் தூரத்தில் அவர் படுத்திருக்கிறாரா என்று கண்கள் தேடியது.
அதை கவனித்த கடைக்காரர் "தம்பி...அவரு கதை உனக்கு தெரியணுமா?" என்று கேட்டார்.
"ஹ்ம்..."
"டெய்லி அவரு முன்னாடி போய் நிக்குற அதுதான் கேட்டேன்"
"சொல்லுங்க அண்ணா..அவருக்கு என்ன பிரச்சினை?"
"ஹ்ம்...ரெண்டு வருசத்திற்கு முன்னாடி அவரோட மூணு பசங்களும் அவரை உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருக்காங்க ஏதோ ரொம்ப செலவாகிற ஆப்ரேசன் போல இருக்கு. யாரு காசு குடுக்கிறதுன்னு அண்ணன், தம்பிகுள்ளால சண்டை வந்திருக்கு அவரு முன்னாலேயே சண்டை போட்டிருக்காங்க. நான் காசு கட்ட மாட்டேன் நீ கட்டுன்னு மாத்தி மாத்தி சொல்லி சண்டை போட்டிருக்காங்க. இதுக்கும் எல்லாரும் நல்ல வசதியாதான் இருக்காங்களாம். ரொம்ப உடஞ்சு போனவரு அவரு கையிலேயும் காசு இல்லாம மருந்தை தொடர முடியாம யார்கிட்டேயும் சொல்லாம இங்க வந்துட்டாராம்."
"என்ன பிரச்சினை அண்ணா அவருக்கு..."
"அவரால தானே டாய்லெட் போக முடியாது. அந்த டுயூப் வழியாதான் வெளிய எடுக்கணும். அதுதான் உறிஞ்சு குடிச்சிட்டு இருக்காரு..."
சத்தியமா சொல்லுறேன் இதை கேட்ட உடனே என் இத துடிப்பு அப்படியே நின்று விட்டது. யாரோ என் இதயத்தை அழுத்தி கசக்கி கோழி குஞ்சுசை கொல்வது போல் கொல்வதாக தோன்றியது.
மனித கழிவை மனிதன் அகற்றுவதை தடுப்பதற்கே சட்டம் உள்ள ஊரில் இப்படி ஒரு கொடுமையா? எனக்கு இதற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்று தோன்றியது.
ஒரு நரம்பில் ஆரம்பித்து ஒரு நரம்பில் முடியும் மனித உயிரில் என்னென்ன குறை பாடுகள், என்னென்ன வேறுபாடுகள்!
அந்த பெரியவர் அருகில் சென்று,
"ஐயா...என் அப்பா அம்மாகிட்ட சொல்லி உங்களை ஆஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போகவா?"
அதற்கும் அவர் சிரித்தார். "ஐயா...இதுக்கும் சிரிப்புதானா? இப்படி எவ்வளவு நாள் கையில டியூபை பிடிச்சிட்டு இருப்பீங்க?" என்று தளதளத்த குரலில் நான் கேட்டது அவருக்கு புரிந்திருக்கும் போல.
"ஹ்ம்...கையில இருந்து டூபை விட்டா நாத்தம் தாங்காமா நீயும் ஓடிப்போயிருப்பா?" இப்படி சொல்லிட்டு குமுறி குமுறி அழ ஆரம்பித்தார். அவர் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என் மனதில் ஆணி அடித்தது போல் பதுந்தது. நீ படிக்க வேண்டியது பொறியியல் இல்லைடா...மருத்துவம் என்று முடிவு செய்து விட்டு சென்றேன்.
இப்பொழுது அரசு மருத்துமனையில் வேலை செய்து கொண்டு தனியாக பத்து க்கிளினிக்கும் வைத்து ஏழை மக்களுக்கு சேவை செய்கிறேன்.
இன்றும் அந்த சிற்றூர் பேருந்து நிறுத்தம் சென்றால் அந்த இரும்பு தூணும் அந்த நோயாளி பெரியவரும் கண் முன்னே வந்து போவார்கள்.
மனது வலியால் கனத்து நிற்கும்.
-ஜெயன் எம். ஆர்