ஏமான்...

எங்கள் கிராமம் அழகாக இருந்தாலும் பெரும்பால வீடுகளை குடிசை வீடுகளாகத்தான் பார்க்க முடியும். சில வீடுகள்தான் மாடிக் கட்டிடங்களாக இருக்கும். அந்த கட்டிடத்துக்கு சொந்தக்காரர் பண்ணையார் வழியில் வந்த செல்லவந்தராக இருப்பார். அவர்தான் எல்லா நல்ல விசயங்களையும் எங்களுக்கு செய்து கொடுப்பார்.

அப்படி ஒருவர்தான் முகிலன். எனக்கு தெரிந்தவரை எங்கள் ஊரில் அனைத்து விவசாய நிலங்களுக்கும் சொந்தகாரர் அவர்தான். கண்ணுகெட்டும் தூரம் நம்ம சொத்துடா என்று எங்கள் தோளை தட்டி அவர் சொல்லும் பொழுது எங்களுக்கு பெருமையாக இருக்கும்.

அதுமட்டுமல்ல ஒரு பிரச்சினை என்றால் முன்னால் நிற்பார். அவர் முன்னால் வரவில்லை என்றாலும் நாங்கள் அவர் முன்னால் சென்று நின்றுவிடுவோம். எங்களுக்கு அவரை விட்டால் வேறு நாதியில்லை என்று நம்பிவருகிறோம். அவரும் எங்களை மதிப்பார். எந்த துரோகமும் அவர் செய்யவில்லை என்று நம்புகிறோம். அதற்காக அரசியல்வாதி என்று நினைத்துவிடாதீர்கள்.

அதற்கென்று வேறொருவர் இருக்கிறார். அவரை பார்த்தீர்கள் என்றால் முழு நேர அரசியல்வாதியாக மட்டுமே எங்கள் ஊரில் வாழ்கிறார். யாரிருந்தாலும் எங்களுக்கு முகிலந்தான் எல்லாம். எங்கள் ஊரில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட அவர்தான் போரட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்கிறார். அதே போல் எங்கள் ஊர் சாலைகள் எல்லாம் பழுதில்லாமல் சீராய் இருப்பதற்கும் அவர்தான் காரணம். எங்கள் ஊருக்கு அரசு பேருந்துகள் வரவில்லை என்றாலும் சின்ன மினி பஸ்கள் சந்துகளில் கூட வந்து எங்கள் நகரத்துடன் இணைக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் முகிலன்தான். எங்கள் மக்கள் இதுவரை அவரை பெயர் சொல்லி அழைத்து நான் பார்த்ததில்லை. ஏமானே என்றுதான் அழைப்பார்கள். அதாவது எஜமான் என்பது எங்கள் ஊர் தமிழில் ஏமான் என்று மாறிவிட்டது.

இப்படி எங்கள் ஊருக்காக பார்த்து பார்த்து செய்யும் அவரை எங்கள் மக்கள் சாமிக்கு இணையாகத்தான் பார்த்தார்கள்.

அதே போல நான் அனாதையாக இருந்தாலும் அந்த குறை தெரியாமல் வளர்த்திருக்கிறார். அதேப்போல் அவர் படிக்கவில்லை என்றாலும் என்னை நன்றாக படிக்க வைத்திருக்கிறார். இப்படி அதேபோல் அதேபோல் என்று ஆயிரம் அதேபோல் சொல்லலாம் அவரைப் பற்றி.

இதுவரைக்கும் எனக்கு எந்த வேலையும் கொடுத்ததில்லை. அவர் எப்பொழுது வேலை கொடுப்பார் என்று காத்திருந்திருக்கிறேன்...காத்திருக்கிறேன். இதில் எனக்கு இன்னும் வருத்தம் என்னவென்றால் அவரின் எந்த வேலைகளிலும் என்னை உதவிக்கு கூட அழைத்ததில்லை...

ஏன் என்னை எந்த உதவிக்காகவும் அழைக்கமாட்டேன் என்று இருக்கிறார் என்று எண்ணியிருந்த நேரம் அந்த வேலைச் செய்வதற்கான தருணம் வந்தது. மிகவும் சந்தாஷப்பட்டேன். எனக்கு ஒரே எண்ணம் மட்டும்தான் மனதில் இருந்தது. ஏமான் என்னிடம் கொடுக்கும் முதல் வேலை... சரியாக செய்து முடித்துவிட வேண்டும்.

வருடா வருடம் அவர் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஊர் மக்களை அழைத்து அவர்களும் மிகவும் சிறப்பான உணவு பரிமாருவார்கள். மக்களும் வாழ்த்திவிட்டு போவார்கள்.

இந்த முறை வாழ்த்த மட்டும் செய்யாமல் உதவியும் கேட்டனர்,

"ஏமானே...மழைக்காலம் வரப் போகுது. வீட்டு கூரை எல்லாம் வெயில்ல காஞ்சு போய் கிடக்கு. மழை பெஞ்சா வீடு ஒழுக ஆரம்பிச்சிரும். இலவச டிவி இருக்கு, மிக்சி இருக்கு, அரிசி இருக்கு ஆனா மேல மூடுறதுக்கு கூர இல்லை. எல்லாருக்கும் வீடு கட்டிக் கொடுக்க உதவி செய்யுங்க ஏமானே..."

"கண்டிப்பா..." என்று பதில் சொன்ன அவர் அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒரு யோசனையும் சொன்னார்.

"நான் உங்களுக்கு உதவி செய்ய தயாராகத்தான் இருக்கேன். அதற்காகத்தான் நான் கல்யாணம் கூட செய்யாமல் இருக்கிறேன். ஆனா...உடனே அரசாங்கம் எல்லாருக்கும் வீடு கட்டி கொடுக்கிறது அவ்வளவு சுலபமான விசயமில்லை. அதனால நான் சொல்லுறது போல நீங்க செஞ்சா நாம கண்டிப்பா ஜெயிக்கலாம். ரெண்டு வாரம் கஸ்டமா இருக்கும். அந்த ரெண்டு வாரமும் உங்களுக்கு தங்குறதுக்கும் சாப்பிடுறதுக்கும் நான் இடம் தயார் பண்ணித் தற்றேன். என்ன நம்புறீங்கனா...."

"ஏமானே உங்கள நம்பிதான் நாங்க எல்லாரும் இருக்கோம்...என்ன செய்யணும் சொல்லுங்க ஏமானே..."

"எப்படியும் உங்க வீட்டு கூரை எல்லாம் மாத்த வேண்டியதுதான். அதனால் உங்க பொருட்கள எல்லாம் எடுத்து என் தோட்டத்தில பத்திரமா வெச்சிருங்க. வெச்சிட்டு ஒரு வீட்டு கூரைக்கு தீ வெச்சிருங்க..."

இதை கேட்டதும் எல்லாரும் வாயில் கை வைத்தனர்.

"ஏமானே என்ன சொல்லுறீங்க..."

"எதுக்கு பதறுறீங்க...என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்ல...நான் உங்க நல்லதுக்குதான் செய்வேன்...அப்படி பண்ணுனாதான் அரசாங்கம் யோசிக்கும். குடிசை வீடுகள் காங்க்ரீட் வீடாக மாறும். ஒரு விபத்துமாதிரி காட்டிக்கிட்டா போதும். ஒரு நாள் அழுவோம்,. அடுத்த நாள் மறியல் பண்ணுவோம். அரசாங்கம் உடனே ஒத்துக்கும்...இப்பதான் எங்க பார்த்தாலும் மறியல் போராட்டமுன்னு இருக்கே..."

அன்று இரவே அந்த தெருவிலிருந்த நடு வீட்டில் தீ வைத்தனர். மக்களும் நன்றாகவே நடித்தனர். சுமார் நூறு குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.

முகிலன் போட்ட திட்டம் போல் அனைத்தும் நிறைவேறியது. இன்னும் சில மாதங்களில் வீடு கட்டித்தரப்படும் என்று அரசு அறிவித்தது. மக்களும் மிகவும் மகழ்ச்சியாக நடந்தனர். பிறகு எல்லா கூரையும் முகிலனே மக்களுக்கு சொந்த காசில் கட்டிக் கொடுத்தார்.

எல்லாம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு, அதுதான் நான் வேலைக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா. அன்றுதான், எஜமான் சில தாள்களை என்னிடம் கொடுத்து பட்டணம் போக சொன்னார். சில மைல்கள் கடந்து அந்த இடத்திற்கு சென்றேன்.

அங்கு ஒருவர் இருந்தார். அவர் இருந்த அந்த கடை ஒரு பொட்டி கடை அளவு கூட இல்லை. ஆனால் சுற்றிப்பார்த்தால் முழுவதும் ரப்பர் ஸ்டாம்புகளும் வித விதமான இயந்திரங்களும்தான். பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது.

"வாங்க தம்பி...ரொம்ப நாளுக்கு அப்புறம் ஏமான் அனுப்பி இருக்காரு போல இருக்கு!"

"ஆமா ஐயா...இந்த பேப்பரை எல்லாம் உங்க கிட்ட கொடுக்க சொன்னார்" என்று நான் அவரிடம் நீட்டினேன்.

"ஐம்பது அறுபது பெயரு இருக்கும் போல..." என்று சொல்லிக்கொண்டே நா முணு முணுக்க ஏதோ எண்ணிக்கொண்டார். எனக்கென்னமோ அவரைப்பார்க்கும் பொழுது ஏதோ கணக்கு போடுவது போல தெரிந்தது. அதை உறுதி படுத்தும் வகையில்,

"செலவாகும்..." என்று முடித்தார்.

"ஐயா...நான் கிளம்பவா?"

"இருப்பா...வாங்கிட்டு போ..." என்று சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்தார். நான் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினேன்.

ஒரு மணி நேரத்திற்கு மேல ஆனது. அவர் செய்தது ஒன்றும் புரியவில்லை என்றாலும் எனக்கு மீதிகள் புரிய தொடங்கியது. அவர் தாயாரித்தவைகளை ஒரு தாளில் கட்டி மறைத்து எனக்கு கொடுத்தார். என் சந்தேகங்களை உறுதி படுத்த தனியாக வந்து அதை திறந்து பார்த்தேன். அவர் முணு முணுத்தது போல ஐம்பது, அறுபது பேரில் நில பட்டயம் அச்சடிக்க பட்டிருந்தது. ஒருவர் பெயர் கூட எங்கள் கிராம மக்களை சேர்ந்தவர்களில்லை என்பது தெரிந்தது. நான் கொடுத்த வேலையை முடிக்க எங்கள் எஜமானரிடம் அதை ஒப்படைத்தேன்.

பிறகு ஒரு வாரமிருக்கும் மீண்டும் அவர் பட்டினத்திற்கு என்னை அனுப்பினார். இந்த முறை நிமிட நேரத்திற்கு மேல் அவர் என்னை காக்க வைக்கவில்லை. உடனே தயாராக இருந்த அந்த கோப்பை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

இந்த முறை இன்னும் எனக்கு அதிக அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கோப்பை திறந்து பார்த்தேன். அன்று பட்டையம் தாயாரித்த அத்தனை பேர் பெயரிலும் குடும்ப அட்டை உட்பட அனைத்து அட்டைகளும் அச்சிட்டு கொடுக்கப்பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அடுத்த ஒருவாரத்தில் "நம்ம ஊருக்கு நிலம் வழங்க அமைச்சர் வருகிறார். முதலில் நம் கிராமத்தை சேர்ந்த பத்து பேருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஐம்பது பேருக்கும் நிலம் வழங்க இருப்பதாக தெரிகிறது. மேலும் மீதியுள்ளவர்களுக்கு அடுத்த மாதம் அரசாங்கம் நிலம் வழங்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்..." என்ற செய்தி முகிலன் வழியாக பரவியது.

சொன்னதுபோல் பத்து பேர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நிலம் வாங்கினர், மேலும் ஐம்பது பேரும் புதிதாக தெரிந்தனர்.

இது முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிப்போனது. மக்களும் இன்று வரும் நாளை வரும் என்றும் காத்திருக்க ஆரம்பித்தனர். வீடு கிடைத்த அந்த பத்து பேரும் கூட இன்னும் அந்த நிலத்தில் எந்த வேலையும் ஆரம்பிக்கவில்லை.

இதற்கிடையில் என்மேல் எஜமானுக்கு முழு நம்பிக்கை வர ஆரம்பித்தது.

"தம்பி...நான்தான்... இண்ணைக்கு எங்க போறேன்னு தெரியும் இல்லை. நீதான் கூட இருந்து பாத்துக்கணும். மத்ததெல்லாம் அவர் பார்த்துப்பார்..."

அவர் என்றால் யார் என்பது அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது. அந்த பட்டினத்தில் பத்திரம் தயாரித்து கொடுத்த அவர்.

இந்த முறை கையில் பெரிய பை ஒன்று வைத்திருந்தார். இன்னும் சிலர் வந்திருந்தனர். அவர்கள் இவரிடம்,

"பின்னாடி எதுவும் பிரச்சினை வந்திராது இல்லை?" என்று கேட்க, "இது உங்களுக்கு புதுசில்ல...! அதுதான் இப்படி கேக்றீங்க...அதுவும் பணப் பட்டுவாடா முடிஞ்ச பிறகு" என்று தன் வேலை ஆரம்பித்தார்.

அந்த ஐம்பது பத்திரங்களையும் எடுத்து அதை வாங்கியர் பெயரில் மாற்ற வேண்டும் அந்த வேலையைதான் அவர் செய்து கொண்டிருந்தார் என்பது மட்டும் நன்றாக விளங்கியது.

"இதெல்லாம் சரி எப்படி அவங்க கை எழுத்து?"

நான் அவர்கள் உரையாடல் மற்றும் சைகைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

"அதுதான் சொன்னேன் நான் என்ன செய்றேன் மட்டும் பாருங்க போதும்.." என்று சொன்ன அவர் தன் பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். அதிலிருந்து ஒரு ரப்பர் ஸ்டாம்பை வெளியே எடுத்தார். அதை மையில் தேய்து பத்திரத்தில் அச்சிட்டார்... பிறகு பழைய கையெழுத்தையும் புதுக் கை எழுத்தையும் எடுத்து காட்டி,

"இதில எதாவது வித்தியாசம் தெரியுது?"

"அப்படினா...கையெழுத்து போட்டவன் வந்தா?"

"ஹா...ஹா...அவன் அந்த மாதிரி நூறு ரூபாய்க்கு எங்க வேணாலும் வருவான்..."

ஒரு வழியாக எல்லாம் முடிந்த பிறகு வெறும் கையோடு வீட்டை நோக்கி நடந்தேன்.எஜமான் சொன்னது என் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

"தம்பி நான் சம்பாதிக்கிறது எல்லாம் எதுக்கு...என் வளர்ப்பு மகனான உனக்கும், யாருக்கும் தெரியாம நான் டவுண்ல வெச்சிருக்கிற என் குடும்பத்திற்கும்தான்..."

இப்படி ஒரு வாழ்கை எனக்கு தேவையா என்று தோன்றியது.

இருந்தாலும் அவரை நம்பிதான் நான் இருக்கிறேன். நான் அனாதையாக நின்ற பொழுது எனக்கு உணவூட்டியவர். கல்வி ஊட்டியவர் அவரை எப்படி காட்டிக் கொடுக்க முடியும். ஒருவேளை அவர் என்னை தத்தெடுக்காமல் இருந்திருந்தால் படிப்பறிவில்லாமல் நானும் என் மக்களில் ஒருவராகத்தானே இருந்திருப்பேன்.

எதை மறப்பது? எதை நினைப்பது? என்று தெரியாமல், என் காதுகளில் பின்னாலிருந்து வரும் சத்தத்தை கவனிக்காமல் வீட்டை நோக்கி நடந்தேன். என் எஜமான், மக்களின் தலைவனாக,

"என் மக்களுக்கு வீடு ஒதுக்கும் வரை போராடுவோம்..." என்று மக்களுடன் கத்திப் போராடும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

இப்படி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

எழுதியவர் : ஜெயன் எம். ஆர் (8-Sep-12, 3:25 pm)
பார்வை : 288

மேலே