தெரியாத ஒன்றைத் தேடி! 2

பூச்சரங்களாடும் வண்ணம் பூத்த தீயின் தோரணம்
தீச்சுவாலையோடு சீறித் தோன்றுமந்த விண்ணிலே
வீச்சுக் கொண்டு வானவீதி யோடி வந்த தீயொன்று
நீச்சல் போட்டு வான்குளிர்ந்து நிற்கும் பூமியானது

ஆன திந்தப் பூமிமாந்தர் ஆக்கவென்று தோற்றங்கள்
வானத்தோடு மண்ணுங்கொண்ட இரசாயனக் கூட்டுக்கள்
தானடைந்த சேர்வைகொஞ்சம் தாவிஏற்றம் கொண்டிட
மானிடத்தின் சக்திஊற்று மண்ணில் ஆரம்பித்தன

அத்தனைக்கும் ஆதிமூலம் ஒன்று வான சக்தியே
புத்தியோடு சேருமந்தப் பேரரும் ஓர் நூதனம்
சக்தியும் சிவனணைந்த தத்துவத்தைக் கண்டதும்,
இச்சா,ஞான, கிரியா சக்தி மானிடத்துள் ளாகின

எத்தகை இருந்தும் அந்தச் சக்திமூலம் ஒன்றதன்
தத்துவத்தில் ஆடுமென்னைச் சற்றுமே புரிந்திலன்
உத்தமம் மென்றெண்ணி எந்தன் உயிரளித்த தேவியை
புத்திரன் சினந்து மென்னைப் பெற்றதேன் என்றாகலாய்

யுத்தம் பூமி ரத்தவேட்கை கத்துமோலம் கதறிட
செத்தமேனி சிதறும் மூளை சென்று நாயிழுத்திட
ரத்தநாற்றம் கொண்டதேசம் கண்டுமே வினாக்களை
புத்தியற்ற மூடனிங்கு பேச்சிலே பிதற்றினன்

கத்தி கொண்ட வன் அடுத்துக் காணும்மேனி வெட்டிட
எத்துடிப்பு மின்றிக் கண்கள் ரண்டும் பொத்தி நிற்பதேன்
சத்தியத்தி னோடுநேர்மை சாத்வீகத்தை விட்டவர்
மொத்தம் பூமி தன்னதென்று மூர்க்கம் கொள்ள விட்டதேன்

உன்படைப்பில் நீதிகெட்டு ஒன்றையொன் றழிக்கையில்
என்னநீதி கண்டுநீயும் உள்ளம் கல்லென் றாவது
அன்னகோர மானிடத்துக் கான நீதி தண்டனை
இன்னும் நேர்மை காவல் சட்டம் உன்வழக்கி லில்லையோ

உன்கரத்தில் கொண்ட தீர்வு என்னவென்று கூறுவாய்
இன்னுமென்ன பூமிவாழும் எம்மவர்க் கிலக்கணம்
வன்மை செய்வர் தம்மைகேட்க வாழ்க்கைநீதி திட்டமும்
சொன்னதாயுமெந்த யாப்பும் உன்னிடத்தி லில்லையோ

பூச்சி தன்னைப் பல்லிஉண்ணும் போகும்குஞ்சை காகமும்
மூச்சிரைக்க ஓடும்மானை மூர்க்காய் சிறுத்தையும்
வீச்செடுத்து நீந்தும் மீனை வீறுடன் பெருஞ்சுறா
நாச் சிவந்து கொள்ளப் பற்றும் நாங்களும் துடிக்கிறோம்

வாழ்வுஎன்ன ’வல்லவற்கு வாழ்க்கை’ என்றுன் சட்டமோ
காழ்வுகொண்டு ஏழையென்ப காவுகொள்ள விட்டதோ?
தாழ்வு கொண்ட வர்தமக்கு தாங்கும் பூமி தன்னிலோர்
வாழ்வுஇல்லை யென்று வைத்ததாய் வகுத்த சட்டமேன்?

ஆகு முந்தன் நீதியென்ன அன்னையேஉரைத்திடு
போகுமிந்தப் பூமிதன்னில் பேச்சில் உள்ள நீதியும்
வேகுமிந்த சூழை வான்வெ றுத்துமோடிச் சுற்றிடும்
பூகோ ளத்து மாந்தர் வைத்த பொய்மை சட்டம் தீயிடு

வல்லவன்தன் வாழ்வுகொள் வனாகும் என்ப மட்டுமே
உள்ள நீதியென்று கூறு உண்மை யன்பு வெல்லுமாம்
பொய்புரட்டு பேசல்தீது. பெண்ணின்கற்பு என்பவை
மெய்யென்றில்லை மானிடாஏ மாந்தையோ சிரித்திடு

மாக்கள் போலும் கானகத்தில் மானிடத்துப் பண்புகள்
நீக்கி நீயும்வாழுஎன்று நேரெழுந்துச சொல்லிடு
பூக்கள்போலும் காணுமுள்ளம் பேய்களுக்குத் தீனியாம்
சாக்கடை நிகர்த்ததென்னில் சற்று மேன்மைஎன்றிடு

தீக்குள் போட்டதாம் குடும்பம் தாலிதர்மம் பிள்ளைகள்
காக்கவென்ற சட்டமில்லை காடையர்கள் கைக்கொள
ஆக்கு சட்டம் ஆடும்பூமி எங்கும் ஓடிபேச்சிடு
போக்கிலோடும் பூமிக்கொன்றும் யாப்புஇல்லைஎன்றிடு

வாக்கு சத்யம் வாய்மை யான, வாய்த்த தீயமக்களில்
போக்குக்கான தேசராஜ்யப் போர்வைஎன்று கூறிடு
பூக்குமிந்த சோலைகாணும் பூமிகொண்ட சாத்திரம்
ஆக்கும் சம்(பி)ர தாயங்கள் அனைத்தும் தேவை என்றிடில்

மல்லிகைமனங்கள் வாழ மண்ணில் ஏற்ற சட்டமும்
துல்லியத் தெளிந்தகொள்கை கொண்டு நீஇயற்றிடு
கல்லினுள்ளே இல்லைநீயும் கருணைகொண்டுவந்திடு
சொல்லை நீதிகாப்பவர் கரங்கள் ஓங்கச்செய்திடு

தொல்லையின்றி இன்பவாழ்வு தூய்மைபேணும் நல்மனம்
அல்லலின்றி ஆண்டுகள்நல் லானந்தித்த வாழ்வினை
மெல்ல வாழ்ந்து கண்டிடநற் காரியங்கள் செய்திடு
நில்லு சக்தி நீச உள்ளம் நெருப்பினோ டெரித்திடு

பூக்கள் பூத்துப் பொன்னிறத்து வானில் மஞ்சள் தீயெழ
தேக்கும் ரம்மிய மான இன்பம்சேர்த் தெல்லார்க்கும் பங்கிடு
ஆக்கிவைத்த நின்விதிக்கு ஆடவில்லை பூமிதன்
போக்கில் சுற்றுதென்னில் வான் கருங்குழிக்குள் தள்ளிடு!

எழுதியவர் : கிரிகாசன் (10-Sep-12, 8:59 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 149

மேலே