மார்ச்சு - 8

பாதை ஓரம்
ஒரு பேதை
பனையோலை
ஒன்றைத் தேடுகிறாள்...
ஒழுகும் குடிசையின்
ஓட்டையை இன்றாவது
அடைக்கவேண்டுமென்று...

கருவேல முள்ளொன்று
காயப்படுத்தப் பார்த்து - அவளின்
காலோடு தோற்றுப் போனது
வழக்கம்போல....

ஏனோ இன்று
கண்ணாடிச் சில்லொன்று - அவள்
காலோடு வென்றுவிட்டது

வழிந்த குருதியை
வெறுத்துத் துடைத்தாள்
இதயத்தில் வழிவதைவிட
இது ஒன்றும்
அதிகமில்லை...

"கடவுள் கண்திறந்தான்"
வேலியோரம் பனையோலையைப்
பார்த்து எடுத்தவள்
பார்க்காமல்விட்டதால்
முந்தானையோரம்
மொத்தமும் கிழிந்தது...
முள்ளில்பட்டு...

ஒட்டைக்குடிசைக்கு
ஒலை கிடைத்துவிட்டது
அடைப்பதற்கு... இனி
ஒட்டுத் துணி தேடவேண்டும்
தைப்பதற்கு...

பணிச்சுமை கூட....
அம்மா பழிச்சுமை
கூட்டிவைத்தாள்...
"35 வயசாச்சி
மூதேவி முள்ளுல
சேலையப்போட்டு
முந்தானையைக் கிழிச்சிருக்கு"

வாழ்விழந்த அம்மா
வசைபாடும்போது
வாசலில் வந்த தங்கை
கையைக் நீட்டிச் சொன்னாள்...
இந்தா அக்கா இனிப்பு...
இன்று மகளிர் தினம்....

எழுதியவர் : நெல்லை மணி (14-Sep-12, 8:43 pm)
சேர்த்தது : நெல்லை மணி
பார்வை : 164

மேலே