காதுல சொன்னாக

சின்னதா ஒரு வீடு ,
இருக்க அதுல கொஞ்சம் எடம் ,
உள்ள எடம் இல்லாட்டியும்
வெளிய படுக்க...........
கட்டில் வேண்டாம் .... ஒரு பாய் !
பேச்சு தொணைக்கு...........
அவரு .
அவரு இல்லாத நேரத்துல
உள்ள போய் பாக்க டிவி .
அவக சாப்பாடே இல்லாட்டியும்
கட சாப்பாடு இல்லாம
கஞ்சியோ கூழோ ....
குளுந்த தண்ணி இல்லாட்டியும்
தூக்க முடியாததால ஒரு பான தண்ணி .
அடிக்கடி இல்லாட்டியும் எப்பவாச்சும்
ஒரு சேல எனக்கும்
வேட்டி அவருக்கும் .
தெனமும் இல்லாட்டியும்
வார கடசியில பேரன்பேத்திட்ட
பேச கொஞ்சம் நேரம் .
ஆயிர கணக்கா இல்லாட்டியும்
செலவுக்கு கொஞ்சம் காசு .
ரேசனுக்கு கடைக்கு போய் வர
அவருக்கு ஒரு சைக்கிள் .
மகட்ட பேச்ச ஒரு செல்லு
அப்பப்போ அதுல கொஞ்சம் காசு .
பழச நெனச்சு பாத்தா
வர்ற அழுகைய தொடைக்க கைக்குட்ட
அப்புறம் ......
ஒன்னும் வேண்டாம்
சாகுற வரைக்கும் அவர தவுர !