20.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி..!

நிலவாக தொலைவானில் இருந்தாலும்
நாள்தோறும் உன்னை இரசிப்பேனே
ஆக அடி மண்ணில் நான்
புதைந்து போக மாட்டேனே என் உயிரே .!
---------------------சி.பொற்கொடி-----------

‘நாளை மறுநாள் புதுவருடப்பிறப்பு..நீங்கள் என்ன’.. என்று அதில் தொடங்கி எழுதப்பட்ட புதிய மசியுடன் கூடிய குண்டுகுண்டான அழகான கையெழுத்து தெரிந்தது.அது எழுதப்பட்ட நேர்த்தியிலிருந்து நிச்சயம் இது ஒரு பெண்ணின் கையெழுத்துத்தான் என்பது எனக்குப் புரிந்தது.

எனக்கு சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது.நம்மைக் கடந்துபோன பெண்களில் யாரோ ஒருவரின் வேலைதான் இது..இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே அக் காகித உருண்டையை மேலும் பிரிக்க முனைந்தேன். எனக்கு மட்டும் ஏன் எல்லாமே விசித்திரமாக நடக்கிறது..?.

இதுவரை பட்ட அனுபவங்களிலிருந்து,யாரையும் சபலப்படுத்தாமல்,அதற்கான சந்தர்ப்பங்களை தெரிந்தே அளித்துவிடாமல் மிகக் கவனமாக இருந்து கொள்ளவேண்டும்.இதனால்,நம்மைச் சார்ந்த யாருக்கும் மனதளவிலும் துன்பம ளிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்..! அதனால்தானே..இங்கு வந்தது முதல் யாருடைய கவனத்தையும் கவர்ந்துவிடாமல்,யாரையும் நேர் கொண்டு பார்க்காமல் தவிர்த்துவந்தேன்.இதனால் யாருடைய அடையாளயமும் மனதிற்குள் பதிந்துவிடாமல் தவிர்த்துவிட வேண்டும் என்று இருந்தேன். ஹூம் இன்னும் எத்தனை எத்தனை வேண்டுதல்போல “வேண்டும்கள்.”அத்தனையும் நாம் விரும்பாமலே,நமக்குத் தெரியாமலே சிதறிப் போகிறதே..! எனக்குள் விரக்தியும் வேதனையும் கொப்பளித்தன.

அப்போதுதான் என்னிடம் பாய்ந்துவந்த முருகேசன் அதனை வெடுக்கெனப் பறித்து, “இது எனக்கு வந்தது..” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொல்லியபடி,அதனை அப்படியே பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டான். அப்பாடா..! ஏதோ ஒரு நிம்மதி எனக்குள் பரவியது.முருகேசன் ஒரு ஆபத்பாந்தவனைப் போல எனக்கு அப்போது தென்பட்டான். “இதுகுறித்து உனக்கு மாலையில் சொல்கிறேன்..”என்றபடி அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.

நானும் எனது வேலையைத் துவங்கி விட்டேன்.ஆனால் முருகேசன் என்ன சொல்லப் போகிறான் என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. இங்கே பணியாற்றும் ஒர பெண்ணுடன் காதல்..! வேறென்ன இருக்கமுடியும்.? ஆனால் யார் அது.? மாலைவரை பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

எனது இயந்திரம் சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது.அதனோடு சேர்ந்து எனது மனமும்தான்.!.தாகீரா முதல் பூமா வரை நினைத்துக் கொள்ள எனக்கு நிறைய விஷயம் இருந்தது.புதிதுபுதிதாக கவிதைகளை எழுதுவதற்கு அந்த எண்ணங்கள் ஊற்றுக்கண்ணாகவும் இருந்தது.
இப்போதெல்லாம் இயந்திரத்தில் மாட்டப் பட்டிருக்கும் உதிரிபாகத்தில் தேவையில்லா தவற்றை அதற்கான உளி கொண்டு நீக்கும்போது, இயந்திரம் சுழலும் வேகம்..,உளி படுகின்ற இடைவெளியில் ஏற்படும் சப்தம் ஆகியவை, ஒருவகையில் சீரான தாளம் இடுவதுபோலத்தான் தோன்றிவருகிறது.அதுவே எனக்கு புதிய பாடலாக எதையேனும் சிந்திக்க வழிகாட்டும் தோழமை யாகவும் இருந்தது.
இப்போதும் அப்படித்தான்..இயந்திரத்தின் சுழற்சி ஏற்படுத்திய தாளம் ஏதோஒரு ராகத்தை, மனதிற்குள் ஓடவிட்டது.அதற்கிசைவாய் வார்த்தைகளைக் கோர்க்கிறேன்..,

கொஞ்சமோ பிரிவினைகள்
இந்த நாட்டில்..நம் சொந்த நாட்டில்..!
உள்ள மனிதரெல்லாம்
கள்ள மனமே கொண்டு
நல்லவாழ்க்கை மறந்து-தினம்
ஒழிகிறாரே இறந்து..!

மனிதன் தோன்றும்போது ஜாதிமதங்கள் இல்லையே
கடவுள்தோன்றி வந்தபின்னே தொடர்ந்த தொல்லையே..!
இருக்கின்ற மனிதர்க்கெல்லாம்
இறைவன்பேரைச் சொல்லியே..
சூழ்ச்சிவலை பின்னிவைத்தார்
உனக்கது உயிர்க் கொல்லியே..! -கொஞ்சமோ..

மண்டைக்காடு சம்பவங்கள் என்ன நியாயமோ..?
மனிதர்கூட மனிதர் தம்மைக் கொல்லலாகுமோ..?
கீழ்வெண்மணி நிகழ்ச்சியென்ன..
மனிதன் பெற்ற இகழ்ச்சியே..
மாந்தர் வாழ்வு மேம்படாத
முறைகள் தேவையில்லையே..! –கொஞ்சமோ..

--இயந்திரத்தில் மாட்டப்பட்டிருந்த உதிரிபாகத்தின் உருவம் முழுமையடைந்தபோது,பாடலும் உருவம் பெற்றிருந்தது.வழக்கம்போல் எனது நோட்டில் அதனைப் பதிவு செய்து வைத்துக் கொண்டேன். “டேய்..நீ..என்னடா..எழுதறே..?” இயந்திரங்களின் ஓசையைமீறி ஒலித்த,முருகேசனின் குரலில் வியப்பும் சந்தேகமும்…,‘அடச் சனியனே..இவன் எதுவும் தவறாக நினைத்துக் கொண்டானா..?’

“பொறுமை..பொறுமை..மாலையில் சொல்கிறேன்” சிரித்துக் கொண்டே பதிலிறுத்தேன்.

அன்று மாலையில் முருகேசனும் நானும் இணைந்தே நடந்து செல்கிறோம். ம்..சொல்லு.. உனது கதையை..! கேட்டேன்.
கம்பெனியில் பணியாற்றும் சுமதி என்ற பெண்ணைத் தான் காதலிப்பதாக அவன் சொன்னான்.மிக நல்லது.வாழ்த்துக்கள்.உங்கள் காதல் திருமணத்தில்தான் முடியவேண்டும். இடையில் என்னவெல்லாம் சிக்கல் இருக்கிறது..? என்று யோசித்துவிட்டாயா..? எனக்குள் ஏற்பட்டிருந்த ஜாக்கிரதை உணர்வால்தான் கேட்டேன்.

“ம்..ம்.ஒரு பிரச்சினையும் வருவதற்கு வாயப்பில்லை.அவளும் நானும் ஒரே ஜாதி,ஒரே மொழி..,குலம்கூட பொருத்தமானதுதான். அதனால் மிகச்சுலபமாக இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் இருக்கிறது. அதற்கான காலம் கூடி வரும்வரை காதலித்துக் கொண்டிருப்போம்.”

அடேங்கப்பா..அதிகம் படிக்காத முருகேசனிடம் என்ன ஒரு தெளிவு..,!.எதார்த்த உலகத்தை மிகநன்றாக அவர்கள் புரிந்து வைத்திருப்பதா கத்தான் எனக்குப் பட்டது.யாருக்கும் தொல்லை தராத,யாரும் பாதிக்கப்படாத வகையில் காதலும் திருமணமும் அமைவது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்.

“இது திட்டமிட்டுத்தான் நடந்ததா.?”

“முதலில் அவளைப் பார்த்தபோது எனக்குப் பிடித்திருந்தது.அதற்குப் பிறகு அவளைக்குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.எல்லாம் எனக்கு அனுகூலமாகவே இருக்கவே,தைரியமாக அவளிடம் சென்று எனது காதலைத் தெரிவித்தேன்.”

“ஆகா..முருகேசா..நீ அதிர்ஷ்டக்காரன்டா.,”

விடிந்தால்..புதுவருடப்பிறப்பு..மறுநாள் தொழிற் சாலைக்கு விடுமுறை என்பதால்,இரட்டிப்பு சம்பளத்தில்,கூடுதல் நேரம் வேலைசெய்வதற்கு அனைவருக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
ஐந்து மணியுடன் முடிகின்ற பணிநேரத்தை, அப்படியே இரவு ஒன்பது மணிவரை தொடர்ந் தோம். மணி ஒன்பதும் ஆனது.தங்கள் வேலையை முடித்த ஆண்களும் பெண்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புதுவருட வாழ்த்துக்களைச் சொல்லியபடி சென்று கொண்டிருந்தனர்.எனது வேலை முடிய சற்று தாமதம் ஆனது.எனக்காக முருகேசனும் காத்துக் கொண்டிருந்தான்.அதுவரை மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிச் சென்று கொண்டிருந்த பெண்களில் யாருமே,நான் புதிது என்பதாலும்,இதுவரை யாரையும் அறிமுகப் படுத்திக் கொள்ளவேயில்லை என்பதாலும்,ஒரு வார்த்தை..ஒரேயொரு வார்த்தைகூட எனக்கு புதுவருடத்திற்கான வாழ்த்துக்களைச் சொல்லவேயில்லை..! எனக்கு மிக அவமானமாகப் போயிற்று.
ஒரு மரியாதைக்குக் கூடவா வாழ்த்து சொல்லக்கூடாது..? என்ன மனிதர்கள் இவர்கள் என்று வெறுத்துப் போனேன்.!

-ஆதலினால் காதலித்தேன்.! மீண்டும் தொடர்கிறேன்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (23-Sep-12, 2:27 pm)
பார்வை : 293

மேலே