என்ன தோழரே

என்ன தோழரே

தொன்னூறு வயதாகும் என் தகப்பனார் படுத்து உறங்கி விழிக்கிறார். காலை 6 மணி. ’என்ன தோழரே, எழுந்திருங்கள்’ என்கிறேன். முகத்தில் கோபம் கொப்பளிக்க ’என்ன கிண்டலா’ என்ற முகபாவம் காட்டுகிறார்.

என் மகன் 40 வயது. காலையில் அலுவலகம் செல்லும்போது என்னைப் பார்த்து, ‘என்ன தோழரே, சௌக்கியமா?’ என்கிறான். நான் புளகாங்கிதம் அடைகிறேன். ஏனென்றால் அவன்தான் என் கடைசிக் காலத்தில் கஞ்சி ஊற்ற வேண்டும்.

நான் ஒரு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர். காலையில் வகுப்புக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவன் என்னைப் பார்த்து ‘என்ன தோழரே, சௌக்கியமா?’ என்கிறான். நான் அவனைப் பார்த்து பெருமிதம் கொண்டு பல்லை நறநறக்கிறேன்.

என் கல்லூரித் தலைவரைக் காணச் செல்கிறேன். ’என்ன தோழரே, என் விடுமுறை விண்ணப்பம் என்னாயிற்று’ என்கிறேன். ’போய்யா, நீயும், உன் விடுமுறையும், போய் வேலையைப் பார்’ என்கிறார்.

ஒரு வழக்கு விசயமாக காவல் நிலையம் செல்கிறேன். அங்குள்ள ஆய்வாளரைப் பார்த்து, ‘தோழரே, வழக்குப் பதிய வந்திருக்கிறேன்’ என்கிறேன். எதிரே உள்ள பெஞ்சில் உட்கார்’ என்கிறார். மாலை வரை பொறுமையாக அமர்ந்திருக்கிறேன். பலன் இல்லை.

அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதியைக் காணச் செல்கிறேன். ’என்ன தோழரே, நான் கேட்ட வட்டச் செயலாளர் பதவி எப்பொழுது தரப் போகிறீர்கள்’ என்கிறேன். ’போய்யா நீயும் வட்டமும். வட்டமும் கிடையாது, சதுரமும் கிடையாது’ என எரிந்து விழுகிறார்.

முதலமைச்சர் புரட்சித் தலைவியைக் காணச் செல்கிறேன். ’வணக்கம் தோழி, என் மகள் திருமணத்திற்குத் தலைமை தாங்க வேண்டும், உங்கள் தேதி கொடுங்கள்’ என்கிறேன். உதவியாளரை அழைத்து, ‘இந்த ஆளை இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த ஏரியாவிலேயே விடாதீர்கள்’ என்று விரட்டச் சொல்கிறார்.

போதுமடா சாமி, நான் தோழரே! தோழியே! என்று சமத்துவமாய்ப் பேசியதற்கு மரியாதை.

கடைசியாக, ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று, கலிங்கப்பட்டி வை.கோபால்சாமியைப் பார்க்க சென்னை, அண்ணா நகரில் அவர் இல்லத்திற்குப் போகிறேன். வீட்டை விட்டு வெளியே வருகிறார்.

என்ன தோழரே! கோபால்சாமி, நலம்தானா? என்கிறேன். வாங்க டாக்டர்.கன்னியப்பன், நாம் பாளையங்கோட்டை புனித சவேரியர் கல்லூரியிலேயே ஒன்றாய்ப் படித்த தோழர்கள் என்பதை மறக்காமல் என் வீடு தேடி வந்தீர்களே;

வணக்கம், வணக்கம், தோழர் வாழ்க! தோழமை வாழ்க! என்கிறார். மனம் மகிழ்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-12, 9:51 am)
பார்வை : 304

மேலே