இன்று ஒரு சொல் ‘பகரம்’
நண்பர் அஹமது அலியின் ’ஊனமுற்ற பெண்ணை பெண் பார்க்க வந்தார்கள்’ என்ற கவிதையை வாசித்தேன். நல்ல தரமான கருத்துக்களுடன் கூடிய கவிதை. வெளிப்படையாகப் பாராட்டிவிட்டு, என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்த தனிவிடுகையில் கேட்டிருந்தேன். நண்பர் அஹமது அலியின் பொறுப்பான பதிலில் இன்று நான் ஒரு சொல்லும், பொருளும் கற்றுக் கொண்டேன்.
’கற்றது கைமண்ணளவு’ என்பது எவ்வளவு பெரிய உண்மை. அவர் கவிதையில் ஒரு வரி, ’ஊனத்துக்கு பகரமாய் பணமாம்’ என்பதே. அதற்கு நான், ‘பகரமாய் என்பது புரியவில்லை. பரிகாரமாய் என்றிருக்க வேண்டுமா?’ எனக் கேட்டிருந்தேன். அவர் பாராட்டுக்கு நன்றி கூறிவிட்டு, பகரம் என்பது பதிலாய் (அ) இணையாய் என பொருள் பட கூறுவார்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.
நான் மீண்டும் தமிழ் அகராதியில் தேடிய பொழுது,
பகரம் என்பதற்கு
Spokesman (ஒருவருக்காக மற்றொருவர் பேசுவது/பகரம் பேசுநர்),
Substitute (மாற்று),
Alternate (மாற்று, பதிலி, ஒன்று விட்டொன்று),
Lieu (மாற்று, பதில்),
Replacement என்பதற்கு மாற்று, மாற்றமர்வாளர், மாற்று வைப்பு, பதிலி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இன்று ஒரு புதிய சொல்லும், பொருளும் கற்றதில் மகிழ்ச்சி.