வைரமுத்து கவிதை (1- உலகம் உன்னை பார்த்து )

வணக்கம் எழுத்து தோழமைகளே !
படிக்க படிக்க திகட்டாதவை வடுகபட்டி கண்டெடுத்த வைரமாம் "வைரமுத்து " அவர்களின் கவிதைகள் .

பலர் படித்திருக்கலாம் பலர் படிக்காமல் இருந்திருக்கலாம் .படிக்காதோர் பயனுரவும் படித்தோர் மீண்டும் வரிகளை அசைபோட்டுக்கொள்ளவும் இதோ எனது குருநாதன் வைரமுத்து அவர்களின் படைப்புகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்.தொடர்ச்சியாக எனக்கு பிடித்த சில படைப்புகளை உங்களுக்காக அளிக்கிறேன் விரும்பிய தோழமைகள் படித்து பயனுற மட்டுமே..



உலகம் உன்னைப் பார்த்து ------

உன்னைப் பார்த்து உலகம்
உரைக்கும்
தன்னம்பிக்கை தளரவிடாதே !

இரட்டைப் பேச்சு பேசும்
உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே !

ஒவ்வொரு வாயிலும்
ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு !

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்கு சொல்கிறேன்
உள்ளத்தில் எழுது !

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை
லேகியம் என்றது !

திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமேலழகரை
வரச்சொல் என்றது !

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில்
குதிரை என்றது !

எலியட், நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம்
திருடியதென்றது !

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி
வழியுது என்றது !

அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்கு
கண்மை என்றது !

மேடையில் கால்மேல் காலிட்டமர்ந்தேன்
படித்த திமிர்தான்
பணிவில்லை என்றது !

மூத்தோர் வந்ததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் அல்ல
காக்கா என்றது !

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான்
கவனம் என்றது !

விரல்நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான்
ஆபத்து என்றது !

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன்
புதைந்தான் என்றது !

மூச்சுப் பிடித்து முட்டி முழைத்தேன்
தந்திரக்காரன்
தள்ளிநில் என்றது !

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான்
பாவம் என்றது !

மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கிவிட்டதா ?
மிருகம் என்றது !

பணத்தில் பொருளில் பற்றற்று இருந்தேன்
வறுமையின் விந்துவில்
பிறந்தவன் என்றது !

என்னை தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை
பூர்ஷ்வா என்றது !

சொந்த ஊரிலே துளிநிலம் இல்லை
இவனா ?
மண்ணின் மைந்தன் என்றது !

தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான்
பாமரன் என்றது !

கயவர் கேட்டார் காசு மறுத்தேன்
கறக்க முடியா
கஞ்சன் என்றது !

உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித்திறியும்
ஊதாரி என்றது !

மங்கயரிடையே மௌனம் காத்தேன்
கவிஞன் என்ற
கர்வம் என்றது !

பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன்
கண்களை கவனி
காமம் என்றது !

திசைகள்தோறும் தேதி கொடுத்தேன்
ஐயோ புகழுக்கு
அலைகிறான் என்றது !

நேரக்குறைவு நிறுத்திக்கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான்
கவிஞன் என்றது !

அப்படி இருந்தால் அதுவும் தப்பு ,
இப்படி இருந்தால்
இதுவும் தப்பு .

கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து
தானே குரைக்கும் .

உலகின் வாயைத் தைத்திடு அல்லது
இரண்டு செவிகளை
இறுக்கி மூடிடு !

உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகளை
மூடுதல் சுலபம்........................................................

எழுதியவர் : வைரமுத்து (29-Sep-12, 1:24 pm)
பார்வை : 15448

மேலே