###தோழா வா....வேலை இருக்கு ,நமக்கு... பகுதி: 2 அகன் ##,##

தோழா வா....வேலை இருக்கு ,நமக்கு...பகுதி: 2
## அகன்,##

########################

கதவுக்கு மரம் வெட்டப்பட்டபோது
காடுகள் வெட்கப்பட்டன,
கோடரிப்பிடிகள் இதயத்தில்
குறுகுறுத்து குற்றம்..!
----- ஈரோடு தமிழன்பன்

##############################################

“எலே முருகா… ஒங்காத்தா சொகமாடா? சவுண்டலிப் பின்னுதாளா…வீராச்சாமி தாத்தா கேட்டார்.

“ம்ம்ம்… நெறைய… “ என்று சொன்னவன் ஒரு குச்சிக்குள் வேப்பம் பழ ஓட்டை மாட்டி வைத்து அடித்துக் கொண்டு இருந்தான்.

மேலே அண்ணாந்து பார்த்தார், சூரியக்த கீற்றுக்கள் மரத்தில் ஊடே பாய்ந்து கொண்டிருந்தன. குறுகுறுவென்ற பார்வையுடன் சுறுசறுப்பாய் ஓடியாடும் முத்தாலம்மா நினைவிற்கு வந்தாள்.
------------இது சென்ற பகுதி,

இனி............

காலை வேளை சூரியக் கதிர்கள் தங்கள் மேல் , வேப்பமரத்தின் ஊடே கசிந்து ,பட்டுக் கொண்டிருக்க வீராச்சாமியும் செண்பகமும் அமர்ந்திருந்தனர்.

அப்போது “வேணாம்யா… வேணாம்யா….”என்ற கதறலுடன் தங்கள் முதுகுக்குப் பின் ஒளிந்துக் கொண்ட முத்தாலம்மையை வினவினர்

“ ஏம்ளா இங்ஙன எதுக்குப் பதுங்கிறவ… ? ” என்று பின் பக்கம் கைத் துழாவினர் செண்பகமும்…வீராச்சாமியும்...அப்போது இருவரின் விரல்களும் உரசிக் கொண்டன….செண்பகம் நாணி சட்டென்று கை எடுத்தாள்….

பயத்தில் உறைந்திருந்த முத்தாலம்மையை இழுத்து தன் முன் நிறுத்தி வீராச்சாமி கேட்டார் ,

“என்ன சங்கதி..சொல்லு ”.

தூரத்தில் அவளின் தந்தை ‘தொப்புளான்’ கையில் ஒரு குச்சியுடன் ஏதோ கத்தியவாறு ஓடிவந்துக் கொணடு இருந்தான்…

“மாமா ….மாமா..என்ர அப்பாத்தா பேச்சைக் கேட்டிக்கிட்டு என்ர அய்யன் என்னெயெ அந்தா சீனு வெடி கொட்டாய்க்கு வேலைக்கு போக சொல்லுறாக..நான் அங்ஙனெ போகலை….

இந்தா பாரும் என்ர விரல்களை…சீக்குப் புடிச்ச கணக்கா தீஞ்சுப் போய் கிடக்கி...எஞ்சோட்டுப் புள்ளைக எல்லாம் என்ர கையை பார்த்து குட்டம் குட்டமின்னு நக்கல் பண்னுதாக…நான் சீனு வெடி கொட்டாய்க்கு போகலை….அந்தா என்ரய்யான் வாராக சொல்லிப்போடுங்க…”என்று கதறியவாறு மீண்டும் செண்பகம் முதுகில் பாம்பு போல் ஊர்ந்து தன்னை இருத்திக் கொணடாள் முத்தாலம்மை…

“ஏட்டி , மூதி பய மவளெ ,இங்கனே வாடி… மோட்டார் காரு வந்திடும்மிலா..சட்டெனு வா புள்ளே….அழும்படிக்காதேடி….” தொப்புள்ளான் கத்தினான்

"அய்யா வேணாம்ய்யா…நான் வேற சோலிக்குப் போறேன்யா…நான் படிச்சு டீச்சரு சோலிக்குப் போயி நெறையா துட்டு தாரேன்யா…இந்தா சோலி வேணாம்யா….” கதறினாள்.முத்தாலம்மை .தொப்புளான் கைகளை உதறி திமிறினாள்..

“எலே தொப்புளான் என்னதுக்கு வம்படிக்கிறவன்…படிக்கிற புள்ளே படிக்கட்டுமே….பொறவு உனக்குத்தாம்லெ சவுகிரியம்….” வீராச்சாமி முத்தாலம்மையை தன் பக்கம் இழுத்தவாறு பேசினார்.

“”என்ன மச்சான் இப்படி கேட்டுப் போட்டீரு..எதொ பஞ்சம் பொழக்க வந்தோம் உம்ம தயவாலெ ஒரு வேளை கம்பங் கூழு குடிக்கோம்…
மத்த மேப்படி செலவுக்கும் சீலைக்கும் என்ர கூலி தேறுமா…மூணு பொட்டை களுதகளை கரை சேக்கணூம்லா..
ஏவிளா.. குசுப்புத்தனம் பண்ணாமெ வாடி கோட்டிக்கார முண்டே”…தொப்புளான் பாய்ந்தான்

“மாமா …மாமா மேஞ்சீலை இல்லாததாலே அந்தா கங்காணி என்னைய மேலுக்கே பாக்கான்…எனக்கு தகிக்கி..நான் அங்ஙனே போகலை" ’அழுதாள்
முத்தாலம்மை

வீராச்சாமி அர்த்தத்தோடு செண்பகத்தை பார்க்க . செண்பகம் பேசினாள்..

“அண்ணே , வளர்ந்தவ சொல்லறது வாஸ்தவந்தேன்...இவ சோட்டுக்காரப் புள்ளைக எதுவும் அங்கிட்டு சோலிக்குப் போவாண்டாம்..பொறவு அந்தா மேக்கால கிடக்கிற நெலத்ல சவுண்டலி பயிர் விளைச்சு மாலை பின்னட்டும்…நீயும் ஏதாச்சும் ஊடு பயிர் போடு..டவுன்ல வாத்திச்சி அம்மணி கிட்டே கேட்டு முத்தாலம்மை மத்த பொட்டைப் புள்ளைக கூட நாலு எழுத்தும் படிக்கட்டும்….இனிமே நீ சேட்டை செய்யாம உன்ர சோலிய பாரு..”

அர்த்தத்தோடு செண்பகம் வீராச்சாமியை பார்க்க வீராச்சாமி தலையாட்டினார்…

ஏதோ முனகியவாறு தொப்புளான் போனான்.

சவுண்டலியும் ஊடு பயிரும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து நிறைய லாபம் கிடைத்தாயிற்று

பல பெண் பிள்ளைகள் படித்து டவுனுக்குப் போய் மேல் படிப்பும் படிக்கத் தொடங்கினர்.

முத்தாலம்மையின் திருமணத்திற்காக அந்த நிலத்தின் ஒரு பகுதியை செண்பகம் கொடுத்து விட்டாள்.

ஆற்றங்கரை ஓரம் இப்போது வெள்ளம் தடுக்கும் மர அரண் பெற்று விட்டிருந்தது..

.................................அந்த முத்தாலம்மையின் மகன் முருகன் வேப்பம் பழம் ருசியா என்று இன்று கேட்கிறான்…வீராச்சாமி தனக்கு வயதாகி விட்டதோ என்று முதன் முதலாக நினைத்துப் பார்த்தார். சுழல் போல நினைவுகள்அவரை பின்னிக் கொண்டன .அவரின் சிந்தனையை குழந்தைகளின் சலசலப்பு கலைத்தது…

“……லே ..ஓடுலெ…கடுவன் பூனை வருதிலா…வம்புக்கு இழுக்கும் லே…சுருக்கா போயிருவோம்……”

“சரிதேன்.....தாத்தா…பொறவு நாங்க வாரோம்….கடுவன் பூனை வருது… “

குழைந்தைகள் கூவியவாறு ஓடினார்கள்.

புரிந்தது வீராச்சாமிக்கு…வருவது யாரென்று.?

அனந்தராமன்.தான் அது…!!

தன் மகளைக் காப்பாற்றிய அமாவாசை மீது பொய்ப் பஞ்சாயத்து கூட்டி, ‘புளியம்மிளாறு’அடி வாங்கி தந்த அனந்தராமன் மீது பரம்பரை சினம் அவ்வூர் மக்களுக்கு. அனந்தராமனும் பரம்பரை பஞ்சாயத்து ‘பிரசிடென்ட்’..!

ஊரின் இளவட்டங்களுக்கும் அனந்தராமன் மீது வெறுப்பு.!! ஊரில்- எவரும் வீராச்சாமி போல –தன்னை உறவு முறையில் விளிக்க கூடாதென்று தடை விதித்த அனந்தராமன் இன்னமும் ஆண்டான்- அடிமை தத்துவம் பேசி திரியும் பத்தாம்பசலி.

தன்னை நோக்கி அனந்தராமன் அருகில் வர வர , வீராச்சாமியின் நினைவுகள் பின்னோக்கி விரைந்தன….

காத்திருப்போமா தோழர்களே….?

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (30-Sep-12, 5:21 pm)
பார்வை : 208

மேலே