ஒரு மீனவ மனைவியின் குமுறல் !

வாங்கி தந்த மல்லிக பூ
வாசம் இன்னு மாறலியே
வச்சுவிட்ட குங்குமமு
நெத்தியில தீரலியே....!

ஆக்கி வச்ச அத்தனையும்
அப்பிடியே வச்சிருக்கே...
அத்தான் எங்க போனீங்க
அடிநெஞ்சு தாங்கலியே...!

மீன் புடிக்க போனவர
யார் புடிச்சி போனாரோ?
நா இங்க துடிக்கிறேனே
யாரவது பாத்திங்களா?

ஒங்க ரெத்தம் வயித்துக்குள்ள
ஓதச்சிக்கிட்டு இருக்கையில
ஏ ரெத்தம் எங்க போயி
மறஞ்சிக்கிட்டு இருக்கீங்க?

தப்பு செய்தி வந்துப்புட்டா
தாங்காது ஏ மனசு...
தயவு செஞ்சி அனுப்பிடுங்க
தாலி எனக்கு வேணுமுங்க...!

எப்புடியும் வருவீங்க
அது எனக்கு தெரியுமுங்க
வச்ச மல்லி காஞ்சாலும் – ஒங்க
வாச மல்லி காத்திருப்பே...!

வருஷம் பத்து ஆனாலு
வாசல்ல பாத்திருப்பே...
உசுரோட வந்துருங்க
ஒங்க புள்ள மொகம் பாக்க...!

எழுதியவர் : கே.எஸ்.கலை (2-Oct-12, 7:57 am)
பார்வை : 247

மேலே