ஒரு நிமிடம் எனை உயிர் வாழ விடு
காரிருள் சூழ்ந்த காலநிலை அது
சூரியனுக்கும் சந்திரனுக்கும் சுத்தமாக இடம் இல்லை
மழை மேகமது சூழ்ந்திருக்க மனதிற்குள் லேசாய் ஈரக்காற்று
மௌனமாய் பெய்யத்தொடங்கிய மழை மணிக்கணக்காய் பெய்ய நினைக்கிறது
மழை நீர் மண்ணை முத்தமிட மரியாதை இல்லாமல் மடையன் நான் மட்டும் இடையில்
மழையின் சாரல் மனதிற்கு இதமாக இருந்தாலும் மடையன் இவன் எதற்கு என கேட்கிறது மழைத்துளிகள்
வேகமாக சென்று வீடு போய் சேர் என்பது போல
சுழன்றடிக்கும் காற்று கூட சொல்லாமல் சொல்கிறது எனக்கு
இத்தனைக்கும் இடையில் நான் மழைத்துளிகளை முத்தமிட்டவாறு மெதுவாக நடந்து செல்கிறேன்
இதுவரை என்னை பார்த்திடாத முகம்
இது வரை நான் பார்த்திடாத உருவம்
இவை இரண்டும் சேர்ந்து என் முன்னால் பெண்ணாக
வேகமாக வீசும் காற்றுக்கு கூட விட்டுகொடுக்காத அவள் குடை
என் முகம்அவள் காண இல்லை இல்லை அவள் முகம் நான் காண போடவில்லை தடை
குடையும் லேசாய் மனம் இரங்குகிறது மழைத்துளியும் அவளை நனைக்கிறது
அந்த இருளிலும் அத்தனை பிரகாசம் அவள் முகம்
நல்ல வேளை சிறகுகள் இல்லை அவளுக்கு
இருந்திருந்தால் தேவதைகளுக்கு இருந்திருக்காது வேலை
என்னை வேண்டாமென்ற நீ அவளை மட்டும் அணைத்துகொள்கிறாய்
கோபமாக கடிந்து கொண்டேன் மழையிடம் ஆனாலும் கொட்டித்தீர்க்கிறது மழை
யாராக இருக்கும் இவள்? தேவதைகள் கூட்டத்தில் ஒருவரை காண வில்லை சொர்க்கத்திலிருந்து
வருகிறது தகவல் என்னையுமறியாமல் என் மனதில் ஏதோ விலகல்
கண்டவுடன் காதல் வரும் கனத்த மழையிலும் காதல் வருமா?
அவள் கால்கள் மட்டுமல்ல மண்ணை தொடுவது அவள் கூந்தலும்தான்
ஈராக்கில் குண்டு போட்டால் தீவிரவாதியாம் என் இதயத்தில் குண்டு போட்ட நீ மட்டும் என்ன விதிவிலக்கா?
நீயும் தான் தீவிரவாதி காதல் தீவிரவாதி
கணப்பொழுது நேரத்தில் என் கண் பார்த்த தேவதையே கண நேரத்தில் உன் அருகில் நான் மட்டும்
மழையின் சாரல் மௌனமாய் அடிக்க
என் இதயம் மட்டும் சத்தமாய் துடிக்க
உலகம் அழிவதற்குள் ஒரு முறை என் காதல் சொல்லவிடு
அல்லது உலகம் அழிந்த பின் ஒரு நிமிடம் உயிர் வாழ விடு
உனக்காகவும் சேர்த்து ஒரு இதயம் துடிக்கிறது என்பதை சொல்வதற்காக
உலகத்திற்கு அல்ல உனக்கு மட்டும்