ஆசிரியர்கள் - கே.எஸ்.கலை

இந்த
இரும்புத் துண்டை
தட்டி கூர்மையாக்கி
புத்தி எனும் கத்தி செய்த
பட்டறைச் சுத்தியல்கள் !

என் மழலை வயலை உழுது
மாசற்ற அறிவு விதை தூவி
சீர் கல்வி பயிர் வளர்த்து
மனிதனாக அறுவடை செய்த
பண்டித உழவர்கள் !

என்னை எனக்கு
அடையாளம் காட்டி
இமயம் தொட
ஏணிப் படியில் தூக்கி பிடித்த
தோழமைக் கரங்கள் !

இந்த வெள்ளைத் தாளில்
சித்திரம் வரைந்து
பார்போற்ற காட்சிப் படுத்திய
அறிவு மை தடவிய
தூரிகைகள் !

பத்தோடு பதினொன்றாய்
கொண்டு வந்து கொட்டப் பட்ட
கற்குவியல்களில் – எனைச்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகள் !

இந்த
மூங்கில் காட்டில்
அறிவுத் தென்றலால்
குழலிசைக்க துளையிட்ட
கரு வண்டுகள் !

வாழ்த்துச் சொல்ல
வயசுண்டா எனக்கு ?
வாழ்த்துச் சொல்ல
மொழியுண்டா உலகில் ?
வணங்கிச் செல்ல மட்டும்
இணங்கச் சொல்லும் மனசு !

இந்த
மழலையின்
விரல் முத்தங்கள்
என்றென்றும்
பரிசுத்தமாய் உங்களுக்கு !

(ஆசிரியத் தினத்திற்கு சமர்ப்பணம்)

எழுதியவர் : கே.எஸ்.கலை (6-Oct-12, 9:25 am)
பார்வை : 523

மேலே