மானுட வாழ்க்கை.......
ஆணும் பெண்ணும் காதல் கொண்டு,
ஒட்டிப் பிறந்த இரட்டையராய் மாறி,
ஒரு முக சிந்தனை பூண்டு,
காமக் களியாட்டமாடி.
இன்புற்று, இன்பம் தொட்டு,
உச்ச நிலையடைந்து,
இன்பநீர் ஊற்றெடுத்து,
அணை தகர்த்து,
கரை தாண்டி.
குடவாயில் புகுந்ததொரு துளி,
தன்னினத்தை தெரிவுசெய்து,
கரம்பற்றி, கசிந்து கசிந்து,
கருப்பையில் குடியேறி.
கருவுற்று, திண்ணமாய் உருபெற்று,
ஒரு உருப்படியாய் மாறி.
மூக்கும் முழியும்,
கிடைக்கபெற்று.
மூளையும் இயங்கக்கற்று.
கையும், காலும்
வளரப்பெற்று.
தாயின் வயிற்றை
வீங்க வைத்து.
நீரில் நீந்தி, நீந்தி,
பத்து மாதங்கள் காத்து கிடந்தது,
பனிகுடத்தை உடைக்க வைத்து,
பூமிப் பந்தில் எகிறி விழுந்து.
எனைக் கண்ட
தாயும் தந்தையும், மகிழ்ந்து குலாவி,
கொஞ்சிக் கொஞ்சிக் குதூகலப் பட்டு.
அன்னையின் முலைமாரில்
பசியாற்றி, சிரசை வளர்த்து.
தவழ்ந்து தவழ்ந்து,
மழலை சிந்தி,
நடையும் பழகி,
பேசக் கற்று,
வீதியடைந்து விளையாடக் கற்று.
பள்ளியடைந்து, பாடம் படித்து,
அறிவை பெருக்க,
புத்தகப் பொதியும் சுமந்து,
பேரறிவாளன் என பெயருமெடுத்து.
கற்றுத் தேறி பள்ளிகடந்து,
மேதாவியாக மேற்படிப்பும் படித்து.
வயிறைக் கழுவ,
வேலையும் தேடி,
வங்கியில் பணத்தை நிரப்பி,
மனையும் வாங்கி.
சேர்ந்து களிக்க
மாந்தரைத் தேடி,
மனதுக்கொத்தவளை மனைவியுமாக்கி.
பேறு பல பெற்று,
தேடித் தேடி பொருகள் சேர்த்து,
பிடித்தவை எல்லாம் சொந்தமாக்கி.
பணத்தின் பின்னால்
பித்துப் பிடித்தலைந்து,
பிணியுற்று.
உடலும் தளர்ந்து,
மதியும் கலங்கி,
கண்கள் சுருங்கி,
காதுகள் அடைத்து,
நாக்கும் மரத்து,
நாசி தடுமாறி,
காலும் துவண்டு,
கைத்தடி பற்றி,
அறுபதாம் பிராயத்தில்,
குடு குடு கிழவனாகி,
வதனமும் வதங்கி,
தேகம் கூனிக் குறுகி,
குரல்வளை குன்றி,
படுக்கையில் மலஜல கலித்து,
நாற்றமெடுத்து, நாதியற்று,
பிராணன் இழந்து,
எமன் வசம் சிக்கி,
உயிரை பிரித்து,
உடம்பை தவிர்த்து,
சவமென மாறி,
சிதையில் ஏறி,
தீயிக்கிரையாகி,
சதையும் உருகி,
எலும்பும் நொறுங்கி,
சாம்பலாய் போயினவே.......
இதுதான் மானுட வாழ்க்கை என்பதோ?