சிறகுகள் சிதைக்கப்பட்ட பறவையின் கீதம்.

நீ உன் பொழுது போக்கிற்காக
படைத்தெடுத்த,அல்லது செய்த
ஒரு பண்டம் போலவே
கவலையை தரும் விதம் என்னை
கையாளுகிறாய்

எனக்கான வாழ்வு
உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாய்
செயல்களால் நீ
ஒப்புவிக்கின்றாய்
அளவு கடந்த உன் அவதானிப்புகள்
ஆயுள் முழுக்க அவஸ்த்தையாகி
விபரிக்க மொழியின்றி வேதனைகளாய்

குரலினை நசுக்கி விட்டு
பேச சொல்கிறாய்
கால் கட்டு போட்ட நீயே
நச்சரித்து எச்சரிக்கிறாய்
நடக்க சொல்கிறாய்
சிறகுகள் சிதைய சிறையில் தள்ளி
பறவென்று பணிக்கிறாய்

மனசு கனத்து
துயர் பகிர மொழியின்றி
மௌனத்தின் பாடலாய்
விரிகிறதென் கீதம்

வர்ணங்கள் குழைத்து
பூசி மினுக்கிய சிறை கூண்டில்
தள்ளி விட்டு சாத்தப்பட்ட
என் சுதந்திரத்துக்கு முன்னால்
நீ யொரு கைதியாய் நடமாடுகிறாய்

வானளவு உயர்ந்திருந்த
என் பிஞ்சு கனவுகளை
கலைத்து கத்தரித்தது
நீதானென்று என்னால்
நிருபிக்க முடியும் ஆனால்;
எனது நாகரீகம் நாகரீகமானது

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (15-Oct-12, 1:49 am)
பார்வை : 146

மேலே