அருள் புரிவாய் யா "அல்லாஹ்"!

ஆலம் படைத்து-நல்
அற்புதங்கள் மேல் படைத்து
ஜாலங்கள் செய்து காட்டும்
யா இறைவா உந்தனதன்
சுவர்க்கத்து பூஞ்சோலை
சோபனத்தை அடைவதற்காய்
மக்கத்து மண்ணில்
மா நாடு நடக்கிறது...........
எத்திக்கும் இருந்து மக்கள்-இறை
இல்லத்தில் ஒன்று கூடி-"அல்லாஹ்"
சக்திக்கு நிகரில்லை என்ற
சரித்திரத்தை அறிந்தொழுகி
தியாகத்தை நினைந்துருகி
தியானித்து இரவு பகல்
படைத்தவனை மன்றாடி
பாவத்தின் கறை நீர்ப்பார்
ஆபத்தில் விழாவாறு
"அல்லாஹ்"நீ அருள் புரிவாய்!
இறையோன் உந்தனதன்
ஏவலுக்கு அடிபணிந்து
"இப்றாஹீம் நபி"செய்த
ஈகைக்கு நிகரில்லை
"இஸ்மாயில் நபி"தந்தை சொல்
ஏற்றதற்கு இணையில்லை
போற்றுதல்க்கு பூவுலகில்
புண்ணிய தலமான
மக்கமா நகரிருந்து
மனமுருகி பிரார்த்திப்போர்
பிழைபொறுத்து காத்தருள்வாய்
பேராளன் யா"அல்லாஹ்"!
மண்ணிலிருந்து....,
மறைவதற்கு முன்பொருநாள்
"ஹஜ்ஜு"க் கடன் முடிக்க
"ஹரம் ஷரீப்"சென்று வர
இன்னும் உன் இல்லம்
ஏற "கல்பில்"எண்ணி
தீரா தாகத்தால்
தினமும் உனை தொழுது
புண்ணியம் செய்வோரை
புடம் போட்ட தங்கமென
கண்ணியம் செய்து நன்று
காத்தருள்வாய் யா"அல்லாஹ்"!
அரபுலகம் சூழ
அகிலத்து உன் அடியார்கள்
அனைவருமே படுகின்ற
அவஸ்த்தைகளை நீ உணர்ந்து
துயரத்தை அறிந்திறைவா
துடைத்தெறிந்து நாழும் நல்ல
உயரத்தை அடைய என்றும்
உதவிடுவாய் யா ரப்பே
அன்போடு அனைவருக்கும்
அருள் புரிவாய் யா"அல்லாஹ்"!
(."ஈத் முபாரக்"ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்.)
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.