விடிகாலைப் பொழுது

கருப்பான வானத்தை
கலை நயமாய் நீலம் போட்டு
துவைத்துக் கொண்டிருந்தது
விடிகாலைப் பொழுது.!
நெடுவானின் நெத்தியில்
நெய் விளக்கொன்று
ஒளி மங்கிக் கொண்டிருந்தது
ஓசையில்லாமல்..!
மெளனத் தவம் கலைத்த
மண்மீது மெல்ல மெல்ல
மனிதக் குரல்கள் கேட்டன
முணுமுணுப்பாய்..!
இருள் போர்வை தனை
அருள் ஒளி கொண்டு
அகற்றிக் கொண்டிருந்தது
அவசரமாய் ஆதவனும்.!
சோம்பல் முறித்த மரங்களோ
இலை சிலிர்த்துச் சிரித்ததில்
ஆம்பல் மலரும் பூப்பதை
அடுத்த நாளைக்கு ஒத்திப் போட்டது.!
சிறகுகள் விரிக்காத பறவைகள்
சின்னச் சின்ன இசைப் பாடல்கள்
பாடிக் கொண்டிருந்தன
பாகவதவம் படிக்காமலே.!
புல்லின் மீது விடிந்த பின்னும்
புதுக் குழவி போல புரண்டுருண்டு
துயில் கொண்டிருந்தன
துளித் துளி பனித்துளிகள்.!
கண்ணைக் கசக்கி கீழ்வானில்
கதிரவன் எழுந்து கதிர் பரப்பி
காலை வணக்கம் சொல்லியது
காதுகளுக்கு கேட்காமலே.!
அம்மா பால்.! அம்மா பேப்பர்.!!
அடுத்தடுத்த குரலோசைகள்
பொறுப்பாக எழுப்பிக் கொண்டிருந்தது
அடங்காத அதிகாலை தூக்கத்தை.!