கலவி வியாபாரி
வாட்டும் வாழ்க்கை இது,
வஞ்சனை போக்க வழியில்லையே...
வயதின் வாயில் வழியே,
நெஞ்சத்து வஞ்சம் போக்க வழி அதுவே...
என் யாக்கையெனும் அணையா திரி,
யார் எரித்தாலும் எரிந்திடுமே...
சேர்க்கை கொண்ட இரவுக்குப் பின்,
என்னைச் சேரும் ரூபாய் சேர்ந்திடுமே...
என் ஒற்றை சான் வயிற்றைக் காக்க,
ஊருப் பசியை இன்று தீர்த்தேனே...
ஈனமில்லை மானமில்லை,
என் சுவாசம் போகப் பார்த்தேனே...
மாலையில்லை மெட்டியில்லை,
மஞ்சம் மட்டும் சேர்ந்தேனே...
காதலில்லை காமமுண்டு,
கண்கள் பேச நேரமில்லை,
தேகப் பணி நேரம் விடுத்து...
வேலி நீக்கும் தாலியுமில்லை,
தேனும் பாலும் பருகிடவில்லை,
ஒருவன் மட்டும் கணவனில்லை,
தினமொரு கணவன்...
நாதியில்லா என் வாழ்வினிலே...
மானங்கெட்ட மங்கையானேன்,
மாசு படிந்த சமூகத்திலே...
இவளுக்கும் மனமொன்று உள்ளதென்று,
மதிக்க மறந்த தேசமிது...
பூவும் பொட்டும் மாதற்கு அழகு,
பூப்பெய்திய நாளில், அவள் சுகமும் அதுவே...
ஆனால்,
பெண்மைப் பிறவி பாவமென்பேன்,
பூப்பெய்திய நாளை வெறுத்து நிற்பேன்...
ஆடை துறந்த, எம் யாக்கை நோக்குவார்,
யாக்கை துறந்த, எம் உள்ளம் நோக்குவர் யாரோ...
பனி போல என் மீது படர்வர்,
பண்பு நோக்கி எனை அடைவர் யாரோ...
உனக்குப் பிடித்த சுகத்தை,
என்னில் எடுத்து...
என்னை முடித்த கதையை,
மற்றோரிடம் உரைத்து...
என் மானமென்பதை,
ஊர் முழுவதும் இறைத்து...
இழிந்தவளாய் ஆக்கிவிட்டாய் என்னை,
இழந்த மானத்தை நான் தேடுவதெங்கே...
நான் கலவி செய்யும் எந்திரமோ,
கண்கள் இங்கே கசக்கி நிற்கிறேன்...
கானல் நீராய் போகுது என் வாழ்க்கை,
கசியும் கண்ணீருக்கு விடைதான் என்னவோ...!!!
.
.
.
வலியினால் விரிசல் விட்ட இதயத்துடன்