என்ன எழுதி என்ன ?
---- என்ன எழுதி என்ன ? ----
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயரினும் ஓம்பப் படும்.
மனம் வழுக்கும் வாழ்வை
வகுத்தான் வள்ளுவன்.
பாலியல் வன்கொடுமை.
போலிச் சாமி பின் தொடரல்
கூலி பணியாளன் கூழை பறித்தல்
ஊழல் பெருக்கம்
உயிர் கொலை
வளரும் இந்தியா...
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
இச்சகத்தினை அழித்திடுவோம்.
சொன்னான்
யுகத்தினை வென்ற பாரதி.
மலம் தின்னும் மனிதர்
எலிக்கறி உண்ணும் உழவர்
எச்சிலை சுரண்டும் சிறுவர்
பசியில் தெருவில் கிழவர்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காதத் தமிழென்று சங்கே முழங்கு
தங்கத் தமிழ் எழுதினான் தாசன்.
அழியும் மொழியிலோன்று - எங்கள்
ஆருயிர் தமிழென்று
அறிக்கை விடுகிறது ஐநா...
யாவும் ஊரே யாவரும் கேளிர்
சொன்னவர் கணியன் பூங்குன்றனார்
வாழும் ஊரில் அகதிகளாவீர் - மக்கள்
கதறி அழுது ஏங்கின்றனர்.
கண்ணோடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது, உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
மின்னும் காதல் வண்ணம் தீட்டி
எண்ணம் எல்லாம் எழுதினான் கம்பன்.
கருகலைப்பு அவசியப்படும் வரை
கையிருப்புள்ள கடைசி ஆணுறை
களையப்படும் வரை
கசப்பதில்லை நவீன காதல்.
உன் நரம்போடுதான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி - பேனா
பிரம்போடுதான் அடித் துரைத்தார்
பட்டுகோட்டை.
உனக்கு வாக்கபட்டவள் சேல போல
வாக்குரிம- அத
காசுக்கு விக்கும் ஈனபயலுக
தான் எரும.
பத்துப்பாட்டு கேட்ட தமிழன்
குத்துப் பாட்டு கேட்கிறான்
ஆவேசபடுகிறார் அப்துல் ரகுமான்.
கண்ணீர் விட்டு பாடு - நமக்கு
தண்ணீர் தட்டுப்பாடு - திரை
தலைவர் உருவம் குளிக்க
தாய்பசு பாலுற்றுதட
தலைமுறை.
நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும்
விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் என்ன நாங்கள் என்ன
எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?
வாளெடுத்து இதயம் கிழிக்கிறார்
வைரமுத்து.
பெண்ணுறுப்பு கிழித்து
பிள்ளை எடுத்து
வெளி எறியுதட
வெறி பிடித்த
மத இன சாதி கலவரம்.
பக்கத்து ஊரான் உடம்பை
பங்கிட்டு வெட்டுதட
இன்றைய தேதி நிலவரம்.
சரித்திரம் படிக்காமல்
சட்டையில் அச்சடிக்கும்
பொம்மையானார்
சேகுவேரா...
சாத்திரம் உடைக்காமல்
பின் தொடர்வதால்
பிணமானார் எங்கள்
ஈவேரா.
நாங்கள் எழுதி எழுதி
வெறும் புழுதி
பறந்தது போதும்.
இனி
அடைத்த கதவுகள்
உடைத்தெறிவோம்
புறாக்களேனும் பறக்கட்டும்.
வறட்சி ஒழிக்க - புது
முயற்சி எழுப்ப
புரட்சி புரட்சியென
முழங்கியது போதும்.
இனி புறப்படுவோம்
போராட...
தோழா
என்ன கொடிய சீற்றம்
வந்தாலும்
இவர்களுக்கு மறதி மறதி..
அட போடா
என்ன சமூக மாற்றம்
வந்தது ?
இவர்களுக்காக எழுதி எழுதி...
---- தமிழ்தாசன் -----