சாதியை ஒழிக்க முடியுமா..? அதெல்லாம் முடியாது..! ஏன்..?
பிராமணாள் கபே மட்டுமல்ல..'தேவர் மெஸ்' சையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தலித் மக்களிடம் அல்ல தலித் தலைவர்களிடம் தோன்றியுள்ளது. தருமபுரியில் 'நாயக்கன் கொட்டாய்' என்ற கிராமத்தில் 268 வீடுகளும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கிய பின் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வன்னிய பெண்ணை தலித் இளைஞன் திருமணம் செய்து கொண்டதே இந்த கலவரத்திற்கு காரணம். வன்னிய சாதியை கொண்டவர்கள் தலைமையில் இந்த கிராமம் அடித்து தீ வைக்கப்பட்டுள்ளது.
தொல் .திருமாவளவன் மருத்துவர் ராமதாசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட வன்னியர்களை கண்டியுங்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று. ஆனால் இருவரும் சேர்ந்தே பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். காட்டாக, ஈழப் பிரச்னை, முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி என்று.
தருமபுரி கலவரத்தில் மட்டும் இருவரும் நேரடியாக ஒன்றாக சேர்ந்து அங்குள்ள மக்களை அமைதிபடுத்த முன்வரவில்லை. வரவும் முடியாது. ஏனெனில் அது தான் உண்மையும் கூட.
இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு பத்தாயிரம் சாதிகள் இருக்கலாம், சற்று கூடக்கூட இருக்கலாம்.
சமீபத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியில் ஒரு வேன் மீது பெட்ரோல் குண்டா அல்லது என்ன வகையான குண்டுகள் என்று சரியாக தெரியவில்லை, அல்லது வெளியே சொல்லப்படவில்லை. தேவர் ஜெயந்தி உடை அதாவது மஞ்சள் சட்டை அணிந்தவர்கள் வண்டியை நிறுத்தி, வண்டிக்குள் வீசி இருக்கிறார்கள் குண்டுகளை. வெளியே வரமுடியாமல் உள்ளேயே பாதி வெந்தும் வேகாமாலும் இதுவரை ஒரு 13 பேர் இறந்து விட்டார்கள் கிட்டத்தட்ட வண்டியில் இருந்த சுமார் 23 பெரும் இறந்து விடலாம். இவை போக தனித்தனியான சம்பவங்களில் சுமார் ஒரு இருபது பேரும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் உண்டு.
காடுவெட்டி குரு அவர்கள், மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முன்னிலையில் மேடையில் பேசியபொழுது இவ்வாறு கூறினார்.வன்னியர் சாதிப் பெண்களை வேறு சாதி ஆண்கள் திருமணம் செய்தால், அவர்களை வெட்டித் தள்ளுங்கள் என்று.
பழ.கருப்பையா அவர்கள் தற்பொழுது.அ.தி.மு.க.வின் ச.ம.உ. கலப்புத் திருமணதிற்கு எதிராகவும், செட்டியார்கள் அதாவது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கலப்பு திருமணம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் கட்டுரை எழுதினார்.
கோவைப்பகுதியில் நிறைய கவுண்டர்கள் உள்ள கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை, கலப்புத் திருமணத்துக்கு எதிரான கருத்துக்களை பள்ளிப்பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்பொழுது தான் பள்ளியில் படிக்கும் பொழுதே, கலப்புத் திருமணம் தவறு என்று பதிந்து விடுமாம். இவைபோன்று எண்ணற்ற சம்பவங்களை பேச்சுக்களை தொக்குக்க முடியும் பெரியார் காலந்தொட்டு. எனவே மேற்கண்ட தலைப்பிற்கு வருவோம்.
கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் எந்த சாதியை பள்ளியில், கல்லூரியில், கலந்தாய்வு (பொறியியல், மருத்துவம் இன்ன பிற..) மற்றும் அரசு வேலை வாய்ப்பு, மற்ற பிற வாக்குச் சீட்டு அடையாள அட்டை என்று துவங்கி நில பட்டா வரை என்று மட்டுமல்ல நீதிமன்றங்களில், காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையில் எவ்வாறு குறிப்பார்கள் அல்லது குறிக்கப்படுவார்கள்..?
கலப்பு சாதி திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான வாய்ப்புள்ள தலித்துகள் அரசு சலுகையை பெற்று விடுகிறார்கள். சில தலித்து சாதிய தலைவர்கள் ஏனைய சாதிப் பெண்களை காதலித்து மணந்து கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாக இளைஞர்களுக்கு சொல்லுகிறார்கள். ஏனைய சாதிக்கார சில தலைவர்கள் அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்களை வாழவே விடக்கூடாது என்று தங்களது இளைஞர்களுக்கு சொல்லுகிறார்கள். இவையெல்லாம் சாதாரண ஜனங்கள் கேள்விகளாக கேட்கப்படுபவை. சில அறிவுசார் மக்களும் இதே போன்று கேள்விகளை எழுப்புகிறார்கள். இருக்கட்டும் இவையெல்லாம்.
சாதிகள் இந்து மதத்தில் மட்டும் தான் எண்ணப்பட முடியாத அளவில் உள்ளது. கிறித்துவத்தில் இல்லையா..? இஸ்லாத்தில் இல்லையா என்ற கேள்விகளை புறந்தள்ளி விட்டு, இந்து மதம் இருக்க வேண்டும் ஆனால் சாதிகள் ஒழிய வேண்டும்...? மாநில அரசும், மத்திய அரசும் சாதிகளை ஒழிக்க வேண்டும். சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று என்றாவது மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றி உள்ளதா..? அல்லது அப்படி ஏதும் உறுதிமொழி வழங்கியுள்ளார்களா..? மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ பெரும்பாண்மையான மக்களுக்கான அரசை நடத்துகிறார்களா..? அல்லது விரல் விட்டு எண்ணக்கூடிய பிரிவினருக்காக நடத்துகிறார்களா..? என்றெல்லாம் யோசிக்க மறுப்பதின் விளைவு தான் என்று கருதலாமா..?
தனி நபர்கள் கலப்பு திருமணம் செய்தால் சாதியை ஒழித்து விடமுடியுமா..? அல்லது தலித்துகள் மட்டும் கலப்புத் திருமணம் செய்தால் சாதிகளை முற்ற முழுக்க ஒழித்து விடமுடியுமா..? ( தனி நபர்கள் தான் சமூகம் என்றெல்லாம் சொல்லக் கூடாது.. அது நயவஞ்சர்களின் கூற்று அல்லது அறியாமையின் வெளிப்பாடு அல்லது இரண்டும்..! )
கால்பந்து மைதானத்தில் நீச்சல் போட்டி நடத்துங்கள் என்றால் எப்படி..?

