கசாப் எனும் கசப்பே !

கசாப் எனும் கசப்பே !
வாழ்த்துக்கள் !
சிறப்பான மரணத்தை
அருளிய காலனை
தொழுது கொண்டு
நரகம் அடைந்திருப்பாய் !
ஆம், நீ கிழித்தெறிந்த
உயிர்களை விட
நீ சிறப்பான சாவையே
தழுவியிருக்கிறாய் !
கண்ணிமைக்கும்
நேரத்தில் - பலநூறு
உயிர்களை சல்லடையாக்கி
உயிரை உடலிலிருந்து
வடிகட்டிய நீவிர்
மனித கருவா ? மருவா ??
என் பெற்றோர் கொடுத்த
உயிரை - என்னிலிருந்து
எடுக்க - கடவுளுக்கே
உரிமைகளில்லை - அந்த
கடவுளின் பெயராலெடுக்க
நீங்கள் யார் ?
அழுக்கான
உங்களின் மூளையை,
சலவை செய்ததால்
கொலைகளை - தவறிச்
செய்தாதாக செய்திகள் !
அதே சலவையை
இருமுறை செய்து - உன்
நான்கு உடன்பிறப்புகளை
ஒழிக்கச் சொன்னால்,
ஒழிப்பாயா ? ஒளிவாயா ?
நீங்கள் ஏவிவிட்ட - உயிரற்ற
தோட்டாக்கள் கூட,
ஒருமுறை யோசித்திருக்கும்,
பிஞ்சுகளை நெருங்க அஞ்சி !
மரணத்தின் நிழலை
உச்சரிக்கக்கூட தெரியாத
பூக்களை நசுக்க - எங்கிருந்து
பொங்கியது மரணவெறி !
மரணத்தின் மா"ரணம்"
உணர உங்களால் முடியாது !
மரண தண்டனைகள்
தவிர்க்கப்பட வேண்டியவை !
மேற்கண்ட இரண்டிற்கும்,
நீங்கள் மனிதனாகவும்
இருக்கவேண்டிய அவசியமுண்டு !
உயிர்களை ஊற்றி
குருதிச் சேற்றை கலந்து
அதையே சோறாக்கி
உண்டு மகிழ்ந்த உங்களுக்கும்
வக்காலத்து வாங்க
வாய்களுண்டு இங்கே !
ஓ... மனிதாபிமானிகளே !
பலநூறு உயிர்கள்
கொல்லப்பட்டபோது
படுத்துறங்கிய உங்கள்
மனிதாபிமானம் - விலங்காய்
மாறிய மனிதனை,
சட்டத்தின் விட்டத்திற்குள்
உட்படுத்தி உயிரெடுக்கும் போது,
வினாக்களை துப்பியபடி
துடித்து விழிப்பதேன் ?
ஓ... சட்டமே !
மேல்முறையீடு என்ற பெயரால்,
வாழ்நாள் கூட்ட வழி விட்டதேன் ?
உச்ச நீதிமன்றம் உடைத்து
ஊரெல்லாம் நட்டு வையுங்கள் !
நீதி ஊருக்கு ஊர் மாறுமா ?
நீதிபதிகளுக்கு தகுந்தாற்போல்
மாறுமெனில் - அது நீதியா ?
ஓ...காவல்துறையே !
எந்த அடியையும்
எதிரியைவிட - சற்றே
வேகமாய் வையுங்கள் !
கறுப்பாடுகள் களைந்து
வேகவையுங்கள் !
கைகளில் எதிரிகளின்
ரத்தகறைக் தவிர
வேறோர் கறைபடாமல்
காத்து கொள்ளுங்கள் !
காத்திருந்து கொல்லுங்கள் !
ஒ...மக்களே...!
நம்மில் பலரும்
மதத்தின் பெயரால்
பணத்தின் பெயரால்
உருமாறிய கசாப்பாய்
உலவிக் கொண்டிருக்கிறீர்கள் !
மனசாட்சிகள் இருந்தால்
எடுத்து மாட்டிக்கொள்ளுங்கள் !
ஓ...தீவிரவாதிகளே !
மூளையிருந்த இடத்தை
மூடி வையுங்கள்
சாத்தான் குடியேறுவான் !
உயிரின் வலியை
உங்களுக்கு உணர்த்த
எங்கள் பொறுமையை
போட்டுடைக்கவும்
தயங்க மாட்டோம் !
மிருகவதை சட்டங்களுக்குட்பட்டு
உங்களை கிழித்தெறியும்
காலம் வெகுதூரமில்லை !!!