மாட்டிக்காமல் லஞ்சம் வாங்க...

லஞ்சம்-
அகராதியில்
அதன் பெயர் கைக்கூலி!
உழைப்புக்குத்தானே
கூலி கொடுப்பார்கள்
அப்படியிருக்க
கைக்கூலி பெற்றான் என்று
ஒப்பாரி எதற்கு....?
ஓலமிடுவது எதற்கு...?
உண்மையைச் சொன்னால்
உங்களுக்கு நிறைய
அள்ளிக் கொடுத்தால்
எங்களுக்குக் கொஞ்சம்
கிள்ளிக் கொடுக்கிறீர்கள்!
அதையும் வெளியே
சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
எங்களைப் போன்றவர்களால்தான்
உங்களுக்குப் பல ஆதாயங்கள்
அதை மறந்துவிட்டு
அடைகிறீர்கள் சிறையில்
இந்த நிலைக்கு யார் காரணம்...?
லஞ்சம் வாங்கும் நாம்தான்
வாங்கும் லஞ்சத்தில்
கொஞ்சம் பங்கு கொடுக்கும்
பக்குவம் வேண்டும்.
‘லஞ்சம் வாங்கு, பங்கு கொடு’
இந்த லட்சியம் கொண்டால்
பங்கம் வராது நம் தொழிலுக்கு.
அம்பது நூறு ஆயிரம் என்று
கையில் வாங்கினால் லஞ்சமாம்
லட்சம் கோடி என்று
பையில் வாங்கினால் ஊழலாம்
ஊழல்வாதிகள் சிறைக்குப் போனால்
தியாகி ஆகிவிடுகிறார்கள்
லஞ்சவாதிகள் சிறைக்குப் போனால்
கழிவறை கழுவச் சொல்கிறார்கள்
இந்த ஓரவஞ்சனை எதற்கு...?
லஞ்சத்தின் வரலாறு
மிக நீளமானது விசித்திரமானது
பிரபஞ்சத்தில் டைனோசர்கள்
சிலருக்கு (கடவுள்..?)
லஞ்சம் கொடுத்து
வேறு நல்ல கிரகத்துக்கு
(மனிதர்கள் இல்லாத...?)
மாற்றல் வாங்கிச்
சென்றுவிட்டனவாம்...ஹி..ஹி..
நிறையப் பிரபலங்கள்
லஞ்சம் கொடுத்துத்து
கிசு கிசு எழுத வைத்து
தங்கள் புகழை நிலை நாட்டுவார்கள்....
(நம்ம பிரபலங்களை
சொல்லவில்லை..
அவர்களிடம் பிரபலமாக
வேறு வழிமுறைகள் உண்டு
அது எதற்கு நமக்கு...?)
லஞ்சத்துக்குப் பல முகங்கள் உண்டு.
அது இல்லாத துறைகளே இல்லை
அதிலும் இந்த எழுத்தாளர்கள்
கள்ளன் என்று எழுதுவார்கள்
கையில் வாங்கி விட்டால்
நல்லவன் என்று முடிப்பார்கள்
இப்போதுகூட இங்கே ஒருவர்
நம்மைப் பற்றி எழுதுகிறார்
நல்லபடியாக எழுதுகிறாரா....?
எதுவும் புரியவில்லை....?
இந்த லஞ்சம் வாங்குவோர்
நல்வாழ்வு மாநாடு வந்திருக்கும்
என் உயிர் தோழர்களே....
மாட்டிக்காமல் லஞ்சம் வாங்க...
மறந்து விடாதீர்கள்-
‘லஞ்சம் வாங்கு, பங்கு கொடு’