இல்லாத தொன்றில்லை

இருக்குமா இல்லையா இருப்போர்தம்மில்
இருந்ததிது வொன்றாக இருந்தபோதும்
இருப்பதோ இல்லாமை இருந்துபார்நீ
இருப்பதிது வொன்றேயாம் இருப்போர் சொல்ல
இருப்பதோ இல்லையோ இருந்தாலென்ன
இருப்பதைக் காண்போமென் றிருந்தோர்பாதி
இருப்பதென் றில்லையா இருத்தலின்றேல்
இருப்பதும் போகுமென் றிருந்தோர் மீதி

இருப்பது இல்லாது இருக்குமொருவன்
இருந்தாலென் இல்லையென் றானலென்ன
இருப்போரை இல்லையென் றாக்குவேன்காண்
இரு பாரம் இவ்விடம் இருத்தலாகா
இரு பாரென் றிரும்பு வாள் இருகையேந்தி
இருந்திட்ட இடத்தினுள் இருக்கவந்தான்
இருப்போரும் இருந்தபோர் இல்லையென்று
இருத்திவிட இல்லாமல் இறந்துபோனார்

இருப்போரை எளிதாக இல்லையாக்க
இருபாதி யாக்கிட இன்னல் கொண்டார்
இருந்துபார் இருபாதி ஒன்றுமில்லை
இருக்கும்சுவ டிருக்காமல் இருக்குமென்றான்
இருந்தும் உயிரில்லையென் றாகும்போது
இரும்புமனம் கொண்டாலும் இருந்தவீரம்
இருப்பாக இருந்ததாம் இருந்ததன்றி
இருளென்னும் தீமைதனை இல்லையாக்க

இருக்கும் வழியறியாது இருந்தார் ஆனால்
இருந்தாலென் போனாலென் றெழுந்தசிலரால்
இருக்கும் மனவலிமையை எடுத்துஆள
இருட்டில்சில ஒளிதோன்ற , ‘இல்லையாமோ
இருப்பதோ என்றனை இருக்கு’தென்றார்
இருக்குதாம் என்றமுதல் இருப்பேயின்றி
இருந்திடக் காண்கிறார் இருப்பதாயின்
இருக்குதொரு எதிர்காலம் இல்லையாமோ

எழுதியவர் : கிரிகாசன் (27-Nov-12, 5:24 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 94

மேலே