உன் கண்ணீர்க் கடலில் நான்

என் உயிரே !
நீ கண்ணீர் வடித்து
என் கண்களை
குளமாக்கியது சரிதானா ?

என்றும் என் உள்ளத்து
உணர்வுகளை வெளிப்படுத்தும்
தன்மையுடையவன் நான்
என்பதனை நீ அறியாமல் போனாயோ ?

என் வார்த்தைகள்
உன் மனதை காயப்படுத்திவிட்டதோ ?
என்று என் மனம் கலங்கித் தவிக்கிறேன் !

நீ கண்ணீர் வடித்ததால்
நான் மட்டும் அல்ல
என் கற்பனையும்
என் சிந்தனையும் அல்லவா
கண்ணீர் விட்டுக் கதறுகிறது !

நீ கொல்லும்
தன்மையுள்ள கூற்றுவனோ
என்றஞ்சிப் பதறுகிறேன் !

நீ புரியாத புதிராக
மற்றவர்களுக்கு இருந்தாய்
ஏனோ இன்று எனக்கும்
ஆகிவிட்டாய் ?

நமக்குள் ஏற்படுகிற
சில மணிநேர மௌனம் கூட
நமக்குள் பிரிவினையை
உண்டுபண்ணி விடுகிறது
என்பதனை நீ அறியாமல் போனாயோ ?

நீ சிந்தும்
ஒவ்வொரு துளி கண்ணீரும்
என் இதயத்தில் இருந்து
வழிந்தோடும் இரத்தம்
என்பதனை நீ உணரவில்லையா ?

நீ கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு
என் இதயத்தில் இருக்கும் இரத்தம்
முழுவதுமாக வடிந்து விட்ட பிறகு
அது துடிப்பது எவ்வாறு ?

உன் கண்ணீருக்கு காரணமான
உன் எண்ணம் மாறும் காலம் வரும்
அப்போது நான் சொன்னது
உண்மை என்பதனை உணர்வாய்
என்று நான் அன்று சொன்னேன் !

அந்த நிகழ்வு
இன்று நடந்து விட்ட பின்பும் கூட
நீ அதனை உணராமல்
உந்தன் வார்த்தைகளால்
என்னை காயப்படுத்தி என் வலிகளை
நீ தாங்கி கண்ணீர் வடிக்கிறாயே !

கடல் போன்ற
உன் கண்ணீரில்
நான் இன்று தத்தளிக்கிறேன் !
நான் இனி கரை சேருவேனோ ? மாட்டேனோ?
என் உயிரே விடை சொல் ?

எழுதியவர் : தமிழன்பன் என்றும் புதியவ (29-Nov-12, 12:19 pm)
பார்வை : 181

மேலே