பாதையெங்கும் போதை முட்கள்
பாதையெங்கும் போதை முட்கள்
(கவிதை)
வானத்தை வளைக்கும்
வல்லமை கொண்ட வாலிபனே! நீ
வாடி விடாதே! வளைந்து விடாதே!
வாசனை வார்த்தைகளில்
விழுந்து விடாதே!
உன்
பாதையெங்கும்
போதை முட்கள் பார்த்து நட!!
நெருப்பை எரிக்கும்
நெஞ்சுரம் கொண்ட நேசனே! நீ
நெகிழ்ந்து விடாதே! நெளிந்து விடாதே!
நெருஞ்சி முள்ளினை
நாடிப் போகாதே!
உன்
பாதையெங்கும்
போதை முட்கள் பார்த்து நட!!
மலையைப் பிளக்கும்
மனோபலம் கொண்ட மாவீரனே!.. நீ
மாறி விடாதே! மயங்கி விடாதே!
மாய வலைக்குள்
மாட்டிக் கொள்ளாதே!
உன்
பாதையெங்கும்
போதை முட்கள் பார்த்து நட!!
காற்றை விரட்டும்
கனவேகம் கொண்ட கண்ணியனே! நீ
கவிழ்ந்து விடாதே! கலைந்து விடாதே!
கவர்ச்சிக் கனலில்
கருகி விடாதே!
உன்
பாதையெங்கும்
போதை முட்கள் பார்த்து நட!!
முகில் தினகரன்
கோவை.