திரும்பிப் பார்க்கிறேன் - முகவுரை
நான் எனது கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை திரும்பிப் பார்க்கும் தருணத்தில் இருப்பதால் சில படைப்புகளை இந்த தளத்தில் பதிவேற்ற விரும்புகிறேன்.
எனக்கு கணினி அவ்வளவாக செயல்படுத்தத் தெரியாததால், பிழைகள் ஏற்படுவது இயல்பு. அதிலும் இணையம் மற்றும் இந்த தளத்திற்கு புதியவன் என்பதால் அன்பர்கள் என் பிழைகளை பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் என் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் எனக்கு பல சுவையான அனுபவங்களும் உண்டு. பல கசப்பான அனுபவங்களும் உண்டு. அவற்றை பகிர்ந்து கொள்ள இடம் தேடி வந்தபோது இந்த தளம் கண்டு இளைப்பாற நினைத்து ஆங்காங்கே சிறு கற்களையும், மலர்களையும் சிதற விடுகிறேன்.
இவை அனைத்தும் பொழுது போக்குக்காக எழுதப்படுபவையே எனவே எவரும் உணர்ச்சி வயப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எனக்கு இலக்கிய உலகில் எதையும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வோ அல்லது புகழ் அடைய வேண்டும் எனும் உணர்வோ நிச்சயம் இல்லை என்பதை தெரிவித்து விடுகிறேன்.
எனது எழுத்தில் பொதுவாக எவரும் எதிர்பார்க்கும் வளமை (நடை, சொல்லாடல், எழுத்துக் கோர்வை, பண்பட்ட வெளிப்பாடு ஆகியவை) இருக்க வாய்ப்புகள் குறைவே என்பதையும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
முதிர்ந்த சிந்தனைகள் என்பதால் அவற்றை பல இடங்களில் செரிமாணம் செய்வது கடினமாக இருக்கலாம். மேலும் என் சிந்தனையின் வெளிப்பாடுகள் சற்றே காலத்திற்கு புறம்பட்டதாகவும் (outdated). பல இடங்களில் காலத்திற்கு அப்பாற்பட்டதாகவும் கூட (advanced) இருக்கலாம். இதை தீர்மானிக்க வேண்டியது படிப்பவர்களும் விவாதிப்பவர்களும் தான். பதிவேற்றும் நான் அல்ல.
கருத்துகளை ஏற்பது மட்டுமே என் வேலையாக இருக்கும். எதற்கும் என் எதிர் கருத்தை தெரிவிப்பது என் பணியாக இருக்காது.
மேலும் கருத்து என்பது அவரவர் அனுபவங்களை பொறுத்து அவரவரின் சிந்தனையின் வெளிப்பாடே. எனவே அதை மறுப்பதற்கோ, திருத்துவதற்கோ பதிவேற்றிய பிறகு எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை அறிந்து நான் இந்த பணியை தொடங்குகிறேன். கருத்துகளை பார்வை கொண்டபின், கருத்து தெரிவிப்பவரின் சிந்தனையை தொட்டு லேசான சலனத்தை ஏற்படுத்தியுள்ளேன் என்னும் அளவில்தான் எனது மனநிலை இருக்கும்.
ஏனெனில் எனது சிந்தனையை திருத்தும் நிலையிலோ அல்லது திருத்தினால் எவருக்கும் பயன் அளிக்கும் நிலையிலோ நான் இல்லை என்பது யதார்த்தமான நிலைமை. எனவே எனது பதிவேற்றங்கள் அனைத்தும் ஒருவழிப் பாதையாய் பயணிக்கும் எனும் கருத்து என்னிடம் உள்ளது உண்மை.
என் வாழ்க்கையில் நான் தடுமாறியதும் உண்டு, இடர்பட்டதும் உண்டு. வீழ்ந்து எழுந்த பல தருணங்கள் என் நினைவில் பதிவாகி உள்ளன.
என் இந்த வயதில் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கு இடம் தேடுவதைத் தவிர வேறு எதிர்பார்ப்புகள் மனதில் இருப்பதில்லை. எனவே எனது நோக்கமே என் மன உணர்வுகளுக்கு வடிகால் தேடும் ஒரு முயற்சியாகும். அதன் வெளிப்பாடே இந்த பதிவேற்றங்களாகும்.
இதில் எழுதி பதிவேற்ற வேண்டியிருப்பது (தட்டச்சு செய்வது, சரிபார்ப்பது, பிழைதிருத்தம் செய்வது) ஒரு கட்டாயமாக தெரிவதால், அதுவும் சில சமயம் சற்றே பாரமாக தோன்றுவது போல ஒர் உணர்வும் அவ்வப்போது எனக்குள் வந்து போவதும் உண்டு.
அதிலும் இந்த கணினியை செயல்படுத்துதல், தளத்தில் பதிவேற்றுதல், அதற்கு வரும் கருத்துகளை தொடர்ந்து நிர்வாகம் செய்தல் இவை அனைத்தும் சற்று பாரமாக உணரும் தருணங்களும் உண்டு. எனவேதான் எனது பதிவேற்றங்கள் ஒருவழிப் பாதையின் பயணமாய் இருக்க விரும்புகிறேன்.
ஆனால் அது கட்டாயமில்லை. கருத்துகளும் உரையாடல்களும் பாரமாக கருதப்பட நிச்சயமாக வாய்ப்பில்லை ஏனெனில் அதன் மூலம் நட்பு வட்டம் கிடைக்கிறதே….. பகிர்வதற்காக வந்தபின் பகிர்பவர்களை பாரமாக நினைக்க முடியுமா?.. பூமியில் விளையும் விதை.. பூமியையே பாரமாக கருத முடியுமா?
தொடரும்…..
சந்திரன் சேகர்