அகர வரிசை தூதுக்கடிதம்

என் தம்பி சித்த மருத்துவரான டாக்டர்.வ.க.குருநாதன் பி.ஐ.எம் அரசுப்பணியிலிருந்து, 43 ஆம் வயதில் குடலில் புற்றுநோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 6 மாதம் கழித்து மற்ற உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டு 1997 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

அவர் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த பொழுது மிகுந்த நட்புடன் எல்லோரிடமும் பழகுவார். அவரை நண்பர்களெல்லாம் அண்ணா, தம்பி, மாமா, மாப்பிள்ளை, தாத்தா என்று உறவுமுறை சொல்லித்தான் அழைப்பார்கள். அப்படியாகப்பட்ட மாப்பிள்ளை ஒருவர் பாசமுடன் வரைந்த அகர வரிசையுடன் கூடிய தூதுக்கடிதம் கீழே:

அன்புள்ள மாமா அவர்களுக்கு உங்கள்

ஆருயிர் மாப்பிள்ளை வசந்தன் வரையும் மடல்.

இங்கு நான் நலம். தங்கள் நலமறிய அவா.

ஈராண்டு அடைந்த துன்பம் இவ்வாண்டு

உருண்டோடி விட்டதையா. மகிழ்ச்சி.

ஊரிலுள்ள அம்மா, அப்பா, அண்ணன், தம்பி

எல்லோரையும் கேட்டதாகக் கூறவும். தங்களை

ஏமாற்ற விரும்பாமல் சனிக்கிழமை இரவு

ஐயா! நான் இங்கிருந்து புறப்பட்டு

ஒருவனாக புகைவிடும் வண்டியிலேறி

ஓ! மாமா, தங்கள் ஊர் வருகின்றேன்.

ஔவிடம் முடிந்தால் புகைவண்டி நிலையம்
வரவும்!

இஃது என் தூது.

என் தம்பி குருநாதன் இசைச்சித்தர் சிதம்பரம் செயராமன் பாடல்களை அதே குரலில் பாடும் திறனுள்ளவர். வாரியார் போல பேசவும் செய்வார். புட்டபர்த்தி சாய்பாபா போல தலைமுடி சில காலம் வளர்த்து வந்தார். கல்லூரி மேடைகளில் அரசியல்வாதி போலவும் பேசுவார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-12, 10:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 163

மேலே