பெண்ணுடல் என்னும் அரசியல்..!

பெண்ணுடல் என்னும் அரசியல்..!

"இறக்கும் முன்னர் மனைவி அருகே என்னை அனுமதித்தனர். அவளுடைய கையை பிடித்துக் கொண்டு கனத்த இதயத்துடன் ஆறுதல் கூறினேன்.அவள் சிறிது சிறிதாக இறப்பதை பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் கதறிய படி நின்றேன் . இந்தக் கொடுமை வேறு யாருக்கும் வரக் கூடாது. " இது ஏதோ தமிழ் திரைப்படத்தின் இன்ட்ர்வலுக்கு முந்தைய வசனம் அல்ல. அயர்லாந்தில் இறந்த சவீதாவின் கணவர் அவரது மனைவியின் கடைசி தருணங்களை பற்றி பகிர்ந்து கொண்ட போது சொன்ன வார்த்தைகள்.

ஒரு பெண்ணின் உடலுள் வளர்ந்த கரு ஏதோ காரணங்களுக்காக இறந்து விட்டாலும், எங்கள் மதக்கோட்பாடான கருக்கலைப்பு என்பது பாவம் என்கிற மதக் கொள்கை அந்தப் பெண்ணின் உயிரையே கொன்றாலும் மதக் கோட்பாட்டை மீறலாகாது என்கிற அயர்லாந்தின் கொள்கையைக் கண்டு நெஞ்சம் நடுங்கினபடி இருக்கிறது . இதை எழுதும் போது கை விரல்களிலும் அதன் நடுக்கம் தென்படுகிறது.

தற்போது சவீதாவின் மரணத்தைக் குறித்து மூன்று விசாரணைகள் நடைபெறும் என்று அயர்லாந்து அதிபர் எண்டா கென்னியும் இந்திய தூதரக அதிகாரிகள் சவீதா மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் என்று ட்வீட்டரில் இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் சயத் அக்பரூதீனும் தெரிவித்துள்ளனர். நடத்துங்கள். விசாரணை,வழக்கு,மனித உரிமை மீறல் குற்றசாட்டு., எல்லாம் நடக்கிறது என்று மக்களின் முன் பகிரங்க அரசியல் நாடகம் நடத்துங்கள்.

பெண்ணுடலின் அரசியல் காலகாலமாக சமுதாய கட்டமைப்பை மையப்படுத்தியே செலுத்தப்பட்டுள்ளது. அந்த சமூகம் ஆண் சமூகமாகவும் இருந்தே வந்திருக்கிறது. சமூகத்தின் ஒரு அங்கமான மதமும் ஆணின் பார்வையை முன்னிறுத்துவதாகவே இருக்கிறது. அவை கோட்பாடுகளாக நிறுவப்பட்டு பெண்ணுடலின் மேல் ரகசிய கட்டுப்பாடுகளை அவளையும் மீறியே புகுத்துகின்றது. மாதவிலக்கின் போது கோவிலுக்குப் போகக் கூடாது என்பதில் ஆரம்பித்து சகலத்திலும் பெண்ணுடலையும் அவை சார்ந்த மாற்றங்களையும் தீட்டாகவே தான் பார்க்கிறது.


நம்மில் எத்தனைப் பெண்கள் அவர்களின் விருப்பத்தோடு குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் ? திருமணமான எத்தனைப் பெண்கள் அவர்களின் விருப்பத்தோடு உடலுறவு கொள்கிறார்கள் ? கற்பு , கலாசாரம் என்று பேசும் இந்த தேசத்தில் தான் குடுமபப் பெண்கள் அவர்கள்: கண்வர்களாலேயே பணம் பெறாத விலைமாந்தர் ஆகிறார்கள். லட்சயவாதிகள் -பெரியார் முதல் -பெண்களின் கரப்பப்பையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று கூறியது இதையெல்லாம் முன்வைத்து தான். ஆணைப் போல முடி வெட்டிக் கொள்ளவும் ஆடை அணியவும் செய்வது தான் ஆண் சார்ந்த சமூகத்தோடான போராட்டமாய் இருந்தது. அங்கும் பெண்ணுடலை ஏற்கவோ அதனோடே அது சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கவோ எடுக்கப்பட்ட முயற்சிகள் மிகக் குறைவாகவே இருந்தது.

தங்கள் கர்ப்பப்பையில் ஒரு குழந்தையை சுமக்கும் விஷயம் பற்றிய தீர்மானத்தைக் கூட எடுக்க முடியாத சமூக சூழலில் வாழும் பெண்களுக்கு இன்னும் மதம் என்ற பெயரில் இப்படியான கொடுமைகள் நிகழ்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? அயர்லாந்து பற்றி கேள்விப்படும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. கருக்கலைப்பு செய்து கொள்ள என்றே பெண்கள் இங்கிலாந்து செல்வார்களாம். நான் என் வீட்டில் வைத்து கொலை செய்ய மாட்டேன். பக்கத்து வீட்டில் வைத்து செய்து விட்டு என் வீட்டில் வந்து வசித்துக் கொள்வேன் என்பது மாதிரியான இந்த விஷயத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

சில சொற்றொடர்களை ஏன் பெண்கள் பேசுகிறார்கள் என்று யோசித்திருக்கிறேன் . " அக்கா தங்கச்சியோட பிறக்கலயா ? " மாதிரியான சொற்றொடர்களில் இருக்கும் விரக்தியான வேதனை,சவீதாவின் மரணம் மாதிரியான சில நேரங்களில் எல்லோர் மனதிலும் தோன்றவே செய்கிறது. எண்டா கென்னியின் அல்லது சயத் அக்பரூதினின் மகளாய் இருந்தால் விசாரணைக்கும் ட்வீட்டடர் செய்தியாகவும் இந்தை அவர்களால் பாவிக்க முடியுமா? அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டிருந்தாலும் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1992ல் அயர்லாந்து சுப்ரீம் கோர்ட் தெரிவித்த சட்டக் கருத்து என்னாயிற்று? அதை அரசுகள் அமுல்படுத்தவில்லை என்பது எவ்வளவு துயரமானது. போப்பே கத்தோலிக்க நியதிபடி கருக்கலைப்பு அவசியமானால் செய்யலாம் என்று சொல்லியும் ஆண்டுகள் ஆயிற்று.

இந்தப் பாவிகளை சவீதாவின் அம்மா, அப்பா, கணவர் கூட மன்னித்து விடலாம். ஆனால் "நீங்கள் கபடதாரிகள் ! ஞாயிறன்று வேலைப் பார்க்கிறீர்களே ! உங்கள் எருது மற்றும் கழுதையை கட்டவிழ்த்து தண்ணீர் காட்டத்தானே செய்கிறீர்கள் "என்று ஞாயிறு வேலை செய்யக் கூடாது என்ற கோட்பாட்டில் இருந்த மக்களிடம் சொன்ன (லூக் 13:05) இயேசு கிறிஸ்து மன்னிக்க மாட்டார்.

கவிஞர் குட்டிரேவதி

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (19-Dec-12, 2:27 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 197

சிறந்த கட்டுரைகள்

மேலே