மாற்று சக்தி

------ மாற்று சக்தி -----


வலது கையில் ஓர் பிரம்பெடு
வா பெண்ணே புறப்படு
இடது கையில் ஓர் செருப்பெடு
இக்கணமே புது பிறப்பெடு

புதுமை பெண் நீயென்றும்
பூவல்ல அவள் தீயென்றும்
புளுகி கொண்டிருக்க
இனியும் என்னால் முடியாது.

பொறுமை நீ இழக்கும்வரை
பொதி மூடை சுமக்கும்வரை
அடி வானம்
விடியும் என்றால் விடியாது.

சாராய போதையில்
அம்மணமாக
சாலையில் கிடக்கும்
ஆண்மகன்
உன் நவநாகரீக ஆடையை
கலாச்சார சீரழிவு என்பான்.

வெட்டவெளியில்
பெண்களை கும்பிட்டு
சட்டசபையில்
ஆபாசபடம் கண்டு களிக்கும்
ஆணாதிக்க சமூகமிது.

பெண் உருவில் பொம்மை
கண் அருகில் இருந்தால்
கற்பழிக்க துணியும்
வக்கிர புத்தியுடைய
ஆடவர் உலகமிது

உரிமை கேட்டு
பிச்சை எடுத்தல்
இனி உதவாது. .

உன் கைகள் பட்டு
மருதாணி
வண்ணம் சிவந்தது போதும்.
ஆண்கள்
கன்னம் சிவக்கட்டும்.

உன்னை இழிவாய் பேசும்
நாய்கள் முகத்தில்
காரி உமிழ்ந்து தூற்றிடு.

பெண்ணை காம பொருளாய்
எண்ணுவோர் உடலில்
வாரி அமிலம் ஊற்றிடு.

உனக்கு தேவை
உதட்டு சாயம் அல்ல
உறைக்குள் கத்தி.

நீ நுழைய வேண்டியது
பூஜையறை அல்ல
ஒரு நூலகம்.

பாலியல் வன்முறையில்
ஈடுபடும் ஈனப்பிறவிகளுக்கு
ஊர் மத்தியில்
உறுப்பு அறுத்தெறிய வேண்டும்.

இந்திய சட்டமைப்பில் அதை
இணைத்திட வலியுறுத்தி
போராட்டம் நடத்திட வேண்டும்.

எந்த பெண்ணுக்கு
இன்னல் ஏற்பட்டாலும்
உடனே அணி திரட்டு.

இந்த மண்ணின்
மாற்று சக்தி
மகளிர் புத்தி
என்பதை நிலை நிறுத்து.

வன்புணர்ச்சி இல்லா
நிலை பிறக்க
உன் தலைமுறை
தலை சிறக்க....

முறுக்கிக்கொண்டு புறப்படு....
உன் விழிகளுக்கு மேலே
விளைந்திருப்பது
புருவம் அல்ல பெண்ணே...
மீசை !.....



-------தமிழ்தாசன்-------

எழுதியவர் : தமிழ்தாசன் (20-Dec-12, 2:06 am)
பார்வை : 224

மேலே