துப்புரவு தொழிலாளிகளுக்கு இந்த வரிகளைச் சமர்ப்பிக்கிறேன்
வாடகைக்கு வீடு கேட்டா
வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக
உன் சிறுநீர சுத்தம் செய்யும்
சேவகன் நான் கேட்டா - நீ
குடிநீரு தரமாட்ட
குத்தம் சொல்லி என்ன செய்ய .?
குப்பய கடக்கயில
கொமட்டுதுன்னு சொல்றீக - என்
பாட்டன் முதல் இந்த பாவி வரை
அதத்தான அள்ளுறோமுங்க
அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்
ஒடம்பு முழுக்க மப்பு ஏற
கொடங்கொடமா குடிக்கிறீக - எனக்கு
மூக்கு செல்லு செத்துப்போனா
குடிக்கிறத நிறுத்துவேங்க
மனித கழிவு பொறுக்காதேனு
மத்திய சட்டம் சொல்லுதய்யா - அத
மாநிலங்கள் மாத்திக்கலாம்னு
அதே சட்டம் கொல்லுதய்யா
உன்னைப்போல உலகத்துல
நானும்கூட ஒரு பொறப்பு - ஆனா
எனக்கு மட்டும் வாழ்கையில
ஏனோ இந்த பேரிழப்பு
அடிமை செய்யும் மானுடமே - உம்ம
அகந்தை கொஞ்சம் நிறுத்துமையா
நீ அழுக்குப்பட்டா குளிக்கப்போகும்
ஆஸ்தான மொதலாளி - நான்
குளிச்சுபுட்டு குப்பையள்ளும்
துப்புரவுத் தொழிலாளி ..!
அன்புடன்,
அகல்