தகப்பன் சாமி…….
அப்பா…
அய்யா…
தகப்பன் சாமி…
பூங்காக்களில்..
பிள்ளையின் கை விரலினை
தன் விரல்களுக்குள் சேர்த்து
ஆதரவாய் தன் மடியமர்த்தி
நிறைய வேடிக்கையும்
கொஞ்சம் வாழ்க்கையும்
பேசிக் கழிக்கும்
பைத்தியகாரத் தகப்பன்களை
கடந்து சென்றதில்லையா நீங்கள்?
இரு சக்கர வாகனத்தில்…
மார்போடு படர்ந்திருக்கும்
மனைவியின் கை மறந்து
முன் அமர்ந்திருக்கும்
பிள்ளையின்
உச்சந்தலையில் முத்தமிட்டு
இருவருக்குமான பயணத்தை
சுகமாக்கிப் போன
எந்தத் தகப்பனையும்
பார்த்ததில்லையா நீங்கள்?
என் வாழ்க்கையின்
முதல் விடுதிக்காப்பாளர் நீங்கள்…
என் ஒரு வழிப்பாதையின்
முதல் போக்குவரத்துக் காவலர் நீங்கள்….
என் கனவின்
முதல் கருக்கலைப்பு நீங்கள்…
பிள்ளையெனில்
வயசென்னப்பா வயசு..?
ஒரு தொலைக்காட்சி
விளம்பரத்தில்
பத்து விநாடி வந்துபொகும்
தகப்பன் அளவாவது
எனக்குள் வந்து போங்கள்…
எதேச்சையாய்
நிகழ்ந்து விட்டதொரு நமக்கான உறவை
வரமென்றே நான் கொண்டாட…!