காலத்தால் தொலைந்தவன் !

வாழ்வு என்னுடையதென்ற
மமதையில்
கனவின் அசாத்தியங்களில்
மூழ்கியிருந்தேன்

பயம் காட்டி பூதமாய் நான்
பழகி விட்டார்கள் பாமரர்கள்
தலையாட்டி பொம்மைகள்
எனக்கு பின்னால்

அனைத்தையும்
அனுபவிக்க வேண்டும் என்ற அவா
காட்டுத்தீயாய் பற்றி
பாய்ந்து சீற
குருரங்களை வளர்த்து
கொடுமையாளனாய்
பட்டை தீட்டப்பட்டேன்

உங்களிடம் சொல்ல
எனக்கென்ன வெட்கம்...........,
யாசகர்களின்
பிச்சை பாத்திரங்களில் கைவிட்டு-தன்
கச்சை பைகளை நிறைத்தவன்

ஊருக்கென்று வந்த
உபயோகங்களை
சுப யோகங்களாகமாற்றி
சொந்தமாக்கியவன்

பிரபஞ்சத்தின் இறுதி நுனிவரை
ஆதிக்கத்தின் வேர்களை
இறுக்கவேண்டும் என்ற இறுமாப்பு
அடங்கா தாகமாய் பீறிட்டு
உள்ளுக்குள் ஊறி ஊற்றெடுக்க
முகத்தை யாரும்
அடையாளம்
கண்டுகொள்ள முடியாதபடி
கவனித்துக்கொண்டேன்

தொடக்கத்திலிருந்த கம்பீரம்
வலு இளந்த சிறு தொய்வு
திரும்பிப்பார்த்தேன்
எதுவும் இல்லாத ஒரு திடலில்
இருப்பது போல் பிரம்மை,
இல்லை இதுதான் இன்றைய உண்மை

சலனமற்ற நதியின்
மெல்லிய நகர்புபோல்
ஒரு வயதை இழுத்துவந்து
கடைசி தெருவில் விட்டிருந்தது காலம்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (27-Dec-12, 7:40 pm)
பார்வை : 113

மேலே