தேர்தல்
தேர்தல்
(கவிதை)
நேற்று வரையிங்கு…
அதிகார இறைச்சிக்காய்
அரசியல் கழுகுகள் நடத்தும்
யுத்த காண்டமாய்;
தேர்தல்!
ஜனநாயகத்தின் சிறகு முறித்து
பண நாயகத்தின் பிடரி வருடும்
மயான காண்டமாய்
தேர்தல்!
இறந்தவனை உயிர்ப்பித்து
இரண்டு ஓட்டுப் போட வைக்கும்
மோடி வித்தையாய்
தேர்தல்!
விரல் நுனியில்
விதியைப் புதைக்கும்
வித்தியாச வாஸ்துவாய்
தேர்தல்!
காலம் கனியும்....
அன்று
பூசணம் பிடித்த
பழைய கோட்பாடுகள்
புதை குழிக்குள் சரியும்!!
புடைத்தெழும்
புதிய கோட்பாடுகள்
பூகம்பமாய் விரியும்!!
நுhறு சதவாக்கு
நுட்பமாய்ப் பதிவாக
வாக்களிக்கா குடிமகன்களுக்கு
அந்தமானில் சிறைவாசமெனும்
அதிரடி சட்டம் அமுலுக்கு வரும்!
காசுக்காய்
கள்ள ஓட்டளிக்கும்
களவாணிகளின்
கைவிரல் துண்டிக்கும்
கட்டாயச் சட்டம்
மிட்டாயாய் வரும்!
தொகுதி மறக்கும்
எம்.எல்.ஏ.க்களுக்கு
தெரு முனையில்
கசையடி வழங்கும்…
மனுக்களை மதிக்கா
மந்திரிக்கு
மயானக்காவல்
உத்தியோகம் அளிக்கும்…
கூட்டணி மாறும்
குள்ளநரித் தலைவர்க்கு
சாக்கடைப் பராமரிப்பு பணி
சாகும் வரை என்றாக்கும்…
கூர்மைச் சட்டம்
கூடிய விரைவில்;;;….
வரூம்ம்ம்ம்ம்ம்ம்..
ஆனா..
வராது!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
முகில் தினகரன்
கோவை.