சிந்தனையில் குறும்புகள்
“நீர்” எனும்
சொல்லுக்கு
பன்மை காண ஆசை!
உண்ணும் அரிசியில்
அவரவர் பெயர்
ஆண்டவன் எழுதியது—
இது வழக்கு சொல்!
கிடைத்த அரிசியில்
படைத்த உழவனின்
தனிப்பெயர் எழுதி
அடையாளம் காண ஆசை!
இறை நிலை தவறி
இறங்கிவந்து
தனி உயிர் தனையே
உற்று நோக்கி
ஒவ்வொன்றாய்
அடையாளம் காண ஆசை!
படைப்புகள் அதனில்
உழைப்பின் இழப்பை
முத்திரை குத்தி
அடையாளம் கண்டு
மரியாதை செய்ய ஆசை!
சுய திறம் மறந்து
செயல்நிலை கொண்டு
உயர்நிலை துறந்து
வாழ்நிலை கொள்ள ஆசை!
பார்வை கொண்டு
பகைஅணைத்து
வாகை சூட்ட ஆசை!
சுவடுகள் கண்டு
நடந்த கால்களை
என்
தலையில் கொள்ள ஆசை!
உறக்கத்தின்
தொடக்க வாசல் நின்று
மனதிற்கு
தாலாட்டு பாட ஆசை!
தண்ணீர் எனும் “நீர்”
இந்த
ஒற்றைச் சொல்லுக்கு
பன்மைப் பதம்
காண ஆசை!
இவை மங்காத்தாவின் குறும்பான ஆசைகள்!