முத்தாய்ப்பாக வாழ்ந்தவர்கள்

சிறுவயதில்
அம்மாவுக்கு செய்த
சிறு வேலையில்
தொடங்கியது

கைகளில் ரேகைகள்
ஒட்டி உள்ளது போல்
இதோ இச்சிறுவேலையோடு
ஒட்டிகொண்டது இவரது பொறுப்பு

விருந்தோம்பலை விருப்பமாக செய்து
உறவுகளிடம் நற்பெயரை
இவரின் உருமேல்
பச்சையாக குத்தியது

உறவுகளுக்கும் சொந்தங்களுக்கும்
தொடர்ந்த இவரது வேலை
தான் சந்திக்கும் அனைவரிடமும்
பிரவாகமெடுத்து நின்றது

இவரது தலைமுறையிலிருந்து
முந்திய இரண்டு தலைமுறைகளுக்குச்செய்த - வேலை
பிந்திய இரண்டு தலைமுறைகளுக்கும்
தொடர்ந்தது

தானும் உயர்ந்து
தன்னை சுற்றி உள்ளோரையும் உயர்த்தி
உதவிகள் பல செய்து
உதிர்ந்து போனவர்கள்

விவரம் தெரிந்த காலம் முதல்
விறகில் மூடும் காலம் வரை
வேலைகள் செய்து மடித்துப் போன
வேலைக்காரர்கள் இவர்கள்

வீட்டுக்காகவும் ,ஊருக்காகவும்
வேலைகள் பல செய்து
உண்மையாக வாழ்ந்து முடித்த
மூத்த அனுபவசாலிகள்

வாழ்க்கையில் எல்லா
உணர்வுகளையும் பிறருக்காக
அர்பணித்த
செவிலிகள்

முகமறியாது
முத்தாய்ப்பாக
வாழ்ந்து முடித்துவிட்டுப்போன -இவர்களுக்கு
விருதுகள் ஏதும் கிடையாது

ஏனெனில் இவர்கள்
சாதாரணர்கள்

இவர்களோடு வாழ்ந்தவர்களின்
கனவில் மட்டுமே வாழும்
இவர்களுக்கு
என்ன கொடுக்க போகிறோம்

நம்மைச்சுற்றி இதுபோல
நாம் நன்றிகடன்பட்டவர்களுக்கு
என்ன கைம்மாறு
செய்யப்போகிறோம்

உயிரோடு இவர்கள்
இருக்கும் போது
இவர்களுக்கு நாம்
என்ன செய்திருக்கிறோம்

இறந்த பின் அழுது மட்டும் -நம்
முகத்தை கண்ணீரால்
கழுவி விட்டு செல்லும் நாம்
இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்

வாய்ப்பு கிடைக்கும் போதாவது !

எழுதியவர் : சுகந்த் (31-Dec-12, 8:42 pm)
சேர்த்தது : சுகந்த்
பார்வை : 123

மேலே