"யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் "
மரத்துப்போன விழிகளும்
மரித்துப்போன நெஞ்சமும்
பேதை இவள் மணவாழ்வின்
ரணம் தரும் சுவடானது!
அக்கினி சாட்சி இல்லை
வேதியர் மந்திரமோதவில்லை
காதலை சாட்சி கொண்டு - எந்தன்
உற்றவனை கைபிடித்தேன்!
ஆயிரம் கனவுகளை
ஆசை நெஞ்சிலேந்தி
அன்பாளன் அவனோடு
வாழத்தலைப்பட்டேன்!
விதி என்னும் காலன் வந்து
சதி செய்யும் என் வாழ்விலென்று
பாவி இவள் அறியவில்லை
நான் பாவமேதும் செய்யவில்லை !
கடைத்தெரு போறேன் கண்ணே
கணப்பொழுதில் வருவேன் என்று
காதல் கணவன் சொன்ன வார்த்தை
என் காதில் நின்று ஒலிக்கிறது !
உறங்காத கண்களோடு
காத்திருந்தேன் விடியும் வரை
வீடுவந்தான் என்னவன்
காடு செல்லும் முயல்வோடு!
மாமிச வேட்கை கொண்ட
மனமில்லா காலனோரான்
துப்பாக்கி கையிலேந்தி
என் குங்குமத்தை கலைத்திட்டான்!
மங்கலம் தந்தவன் மீது
மனதோடு நான் கொண்டகாதல்
ரணமாய் கொல்கையிலே
நான் உயிரோடு மரணிக்கிறேன்!
"யாரை நான் பழிசொல்ல
மாண்டவர் மீள்வதுண்டோ....?"
யுத்த அரக்கனே ....!
உன் கோரப்பசியை நிறுத்திடு!
காதல் காவியம் பாட
காத்திருக்கின்றனர் பல காரிகைகள்.........
"யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் "