அம்மாவின் வெது வெதுப்பு..

அம்மாவின் வெது வெதுப்பு...
(கவிதை)

அம்மா....
கம்பளங்கள் கனப்பு தேடும் ஒரு
கடுங்குளிர் நாளில்
என் நரம்புகளின் நரம்புகள்
நடுக்க நர்த்தனம் பயில
உன் மடிச்சிறகின் அடியில்
கோழிக் குஞ்சாய் ஒதுங்கினேன்!
அன்று அடுத்த பிறவிக்கும் சேர்த்தே
அனல் தந்தாய்!

என் மதிப்பெண் பட்டியல் சகாராவானதில்
நடுமுதுகில் நடந்தேறியது
பிரம்பு ஒட்டகங்களின் அடி ஊர்வலம்!
அழுகைப் பிரவாகத்திற்கு அணை தேடியுன்
அருகாமை நாடினேன்!
அம்மா...உன் வெது வெதுப்பில்
என் கண்ணீரை ஆவியாக்கி
அழுகையை அஸ்தமிக்கச் செய்தாய்!

கொள்ளிவாய்ப் பிசாசுகளின்
கோரக் கதை கேட்டு
கனவில் மிரண்டு கால் சட்டை நனைக்கையில்
தள்ளிப் படுத்திருந்தவன் தாவி வந்துன்
புடவைப் போர்வைக்குள் புகழிடம் கொண்டேனே!
அம்மா.உன் வெது வெதுப்பில்
கொள்ளிவாய்ப் பிசாசுகளுக்கே
கொள்ளி போட்டாயே!

சூறைக் காற்று சுழற்றியடித்த
சாலைப் புழுதியென்
கண்ணுக்குள் களம் புகுந்து
உறுத்தல் உற்சவம் நடத்துகையில்
சேலைத் தலைப்பை உருட்டி ஊதி
தெய்வீக வெது வெதுப்பில்
விழிக்குள் தென்றலை விசிறி விட்டாயே!

உத்தியோகத் தேடலில் ஊர் ஊராய் முக்குளித்து
வெறுமைச் சிப்பிகளை மட்டும்
வாரியெடுத்த நான்
கன்னம் ஒடுங்கி கவலை நோய்க்கு
சந்தா கட்டிய போதுன்
ஒற்றைத் தொடையிலென்
தலையைச் சாய்த்து
அமிர்தம் பூசிய ஆறுதல் வார்த்தைகளால்
வருடி விட்டாயே!...அதில்.
மரகத நம்பிக்கையை மனத்துள் வளர்த்தாயே!

அம்மா...
அதிகாலைச் சூரியனின் அசைவற்ற சூடும்
அஸ்தமனச் சூரியனின் பசையற்ற சூடும்
உன் ஆலிங்கனச் சூட்டின் முன்
தோற்றுப் போன மல்யுத்த வீரர்கள்!

அம்மா...
நேற்று வரை “அம்மா” என்றுனை
அழைத்த நாக்கையின்று
“சவம்”என்று சொல்ல வைத்த
சதிகாரர் யாரோ?

என்
உயிர்ச் செடியின் ஆணிவேருக்கு
ஒத்தட உரம் தந்தவுன்
கரச்சூடு கரைந்து போன கதையென்னம்மா?

என்
உதிர அணுக்களை உற்சாகப்படுத்திய
வெல்வெட் வெது வெதுப்பு
வற்றிப் போன வாவியான வரலாறு என்னம்மா?

அம்மா...இனி
துயரத் தீர்த்தங்கள் எனக்கு
கவலைக் குளிர் தந்தால்
எந்த தெய்வம் வந்து வெது வெதுப்பு தரும்?

என்
கடப்பாரை சோகங்களை
குண்டூசியாக்கிக் காட்டிய கந்தர்வத்தாயே!
இனி
சுண்டெலிகளும் எனக்கு டைனோசர்களே!
சுள்ளெறும்புகளும் எனக்கு சுறா மீன்களே!
=====================================
முகில் தினகரன்
கோவை,

எழுதியவர் : முகில் தினகரன் (2-Jan-13, 9:28 am)
சேர்த்தது : mukil dinakaran
பார்வை : 124

சிறந்த கவிதைகள்

மேலே