பூச்சாண்டி

பூச்சாண்டி
(கவிதை)

விரல் சூப்பும் பிராயத்தில்
உணவுத் தொல்லைக்கு உடன்பட மறுத்து
உதட்டுக் கதவை இறுக்கி கொள்வேன்!
அம்மா சொல்வாள்
“பூச்சாண்டி வந்துடுவான் ஒழுங்கா சாப்பிடு”
அந்த வார்த்தையின் அருவருப்பில்
அடுத்த வினாடியே வாய் திறந்து
விழுங்கியிருக்கிறேன்!
ஆனால்..
ஒரு முறை கூட பூச்சாண்டி வந்ததேயில்லை!

பள்ளிப் பருவத்தில் பகலிரவு காணாது
கொள்ளை விளையாட்டில் கூத்தடிப்பேன்!
அந்தி வேளையில் விளையாட
அலுங்காமல் நழுவும் போது
அத்தைப் பாட்டி நிறுத்துவாள்
“இன்னேரத்துல போகாதே பூச்சாண்டி பிடிச்சுக்குவான்”
“திக்”கென்று பயந்து திரும்பியிருக்கிறேன்.
ஆனால்
ஒரு முறை கூட பூச்சாண்டி பிடிக்கவேயில்லை!

வசூலுக்குச் சென்ற அப்பா
வரட்டி முகத்துடன் வந்து சேர
நிலைமையுணர்ந்த அம்மா
நாசூக்காய் கேட்பாள்
“காயா?..பழமா?”
கடன் வாங்கியவன் கழுத்தறுத்ததை
அப்பா சொல்வார்,
“இதோ அதோன்னு பூச்சாண்டி காட்டுறான்”
ஆனால்
இதுவரை பூச்சாண்டி கண்ணில் படவேயில்லை!

எல்லோரையும் கேட்டேன்
“எப்படியிருக்கும் பூச்சாண்டி?ன்னு

காதலில் தோற்றவன் சொன்னான்
“காதலிதான் பூச்சாண்டி”
இல்லறத்தில் நொந்தவன் சொன்னான்
“பொண்டாட்டிதான் பூச்சாண்டி”
பள்ளி மாணவன் சொன்னான்
“கணக்கு டீச்சர்தான் பூச்சாண்டி”
கல்லூரிக் காளை சொன்னான்
“எக்ஸாம்தான் பூச்சாண்டி”
கவிஞன் சொன்னான்
“சமூகம்தான் பூச்சாண்டி”
அறிஞன் சொன்னான்
“அறியாமைதான் பூச்சாண்டி”
சட்டம் சொன்னது
“சிறைச்சாலைதான் பூச்சாண்டி”
நீதி சொன்னது
“சட்டம்தான் பூச்சாண்டி”

குழப்பக் குட்டையில்
குளித்தெழுந்த நான்
எனக்குள் ஊடுருவி
என்னையே தோண்டிப் பார்த்தேன்
எளிதாய்ப் புரிந்து கொண்டேன்
உள்ளிருக்கும் தாழ்வு மனப்பான்மைதான்
உண்மையான் பூச்சாண்டி என்று..
உடனே அதைத் துரத்தினேன்..
உயர்வு வந்து நின்றது
உற்சாகமாய் என்னருகில்.


முகில் தினகரன்
கோவை.

எழுதியவர் : முகில் தினகரன் (2-Jan-13, 9:29 am)
பார்வை : 148

மேலே