உழவின்றி உலகில்லை
செங்கதிரோன் கதிர்குளிப்பில்
செங்கதிர்நெல் தலைகுனியும் பேரழகு
பேரழகின் சிற்பி அவன்
பொழுதோடு உறவாடி
உலகோர்க்கு உணவிடுவான்
"உழவன்" என்பதவன் பெயர் .
விசும்பின்துளி விரலிடையளவு
வடக்கிருந்தும் நீர்இல்லை.
தொழுதுண்டு பின் செல்ல
மனதுக்குத் தெம்பில்லை,
உழவு எருதுக் கொட்டகையில்,
மிச்சம் இரண்டு தலைக்கயிறு.
கழனி வயல் காணாது,
கட்டிடமாய் போட்டுவிட்டார் .
எருது ஏர்பூட்டும் மறைந்து
எந்திரத்தில் வேளாண்மை.
இருப்பதோ சிறிது நிலம்
நீருயரும் வழி அடைத்தார் .
விதை நெல்லில்
மரபணு மாற்றி விட்டார்
உணவு மறுப்போர் இல்லை
உழவை நினைப்போர் இல்லை.
இனி ஒருவிதிசெய்தல்வேண்டும்.
வான் மழையின் வரவை
சேமிப்பில் வைக்கவேண்டும்.
மரபுவழி விதை வங்கி
நிறுவிடல் வேண்டும்.
விளைநிலங்கள் வீடாக்கல்
தடுத்திட வேண்டும்.
உழவன் வாழ்வில் ஏற்றம்
செய்தல் வேண்டும்.
இதற்கு நல்வழியில்
'விஞ்ஞானம்' துணை
கொள்ளல் வேண்டும்.
(உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூம்
விட்டோம் என்பார்க்கும் நிலை. -குறள்1036)