தை மகளே வருக....( பொங்கல் கவிதைப் போட்டி )
தக தகக்கும் கதிர்போல தங்க மேனி தனை எடுத்து
தமிழ்மகளே தரணிவெல்ல தலை நிமிர்ந்தே வருக..!
தித்திக்கும் பொங்கல் என திருநகையை இதழ் எடுத்து
தை மகளே தமிழ் மகிழ கலை வடிவாய் வருக....!
மாக்கோலம் தாமரையாய் மாவிலைகள் தோரணமாய்
மார்கழிக்கு இளையவளே மனம் மகிழ வருக....!
மஞ்சள் குருத்தினிலே மங்கலக் கவி எழுதி
மாசிக்கு மூத்தவளே மாருதமாய் வருக....!
பூக்காலம் மலர்ந்திருக்க, பூவிதழ்கள் மணம் பரப்ப
பொன்மகளே புன்னகைத்து பூரித்தே நீ வருக...!
எதிர்காலம் சிறந்திருக்க எப்போதும் சிரித்திருக்க
எழில் மகளே நிறைவெனவே நிம்மதியாய் நீ வருக
செப்பு மொழி அனைத்திலுமே செந்தமிழே நிறைந்திடவே
சீர்மிகுந்த தைமகளே சிரித்தபடி நீ வருக...!
மெட்டு ஒலி சொற்றொடர்கள் மெல்லினமாய் இசைத்திடவே
மேன்மையுரு தைமகளே சொலித்தபடி நீ வருக...!
கட்டி வளர் கரும்பினிலே கவித்தமிழை சுவைத்திடவே
கருணைமிகு தை மகளே களித்தபடி நீ வருக....!
கொட்டி நிறை நெல் மணிக்குள், கொலுவிருந்து வாழ்த்திடவே
கொஞ்சு தமிழ் தை மகளே கொழித்தபடி நீ வருக...!
தத் தகிட, தக தகிட, தத்தகிட, தகிட
தத் தகிட, தக தகிட, தத்தகிட, தகிட
சரிக ரிக , ரிகம பம, கமப தப, தபம
சநித பத , நிதப மப , தபம கம, மகம