Althan- கருத்துகள்

கல்விச்சிறை

பன்னிரண்டாண்டு
பள்ளிக்கல்வி
கற்றுத்தந்ததென்ன?

அந்த அச்சடித்த எழுத்துக்களுக்கு
அர்ச்சனை
பாடிப் பாடியே
மூர்ச்சையானதுதான்
மிச்சம் .

புத்தகங்களில்
புதைந்து புதைந்து
புள்ளி விவரங்களால்
கொள்ளி வைக்கப்பட்டதுதான்
மிச்சம்.

மதிப்பெண்களுக்காக
அலைந்து அலைந்து
இயற்கையின் மடியிலிருந்து
இடறி விழுந்ததுதான்
மிச்சம்.

கம்பா!
உன் கவிகூட
எங்களுக்கு வலிதந்ததடா!

வள்ளுவா!
உன் வார்த்தை
எங்களுக்கொன்றும்
வாழ்வளிக்கவில்லையே!

ஏனெனில்,

அவை
கம்பு முனையில்
விழுங்கப்பட்டு
பேனா முனையில்
வாந்தி எடுக்கப்பட்டன.

கல்வியாளர்களே

சூரியனைப்பற்றி
சொல்லித்தந்தீர்களே
சூரியோதயதைக்
காணவிட்டீர்களா?

கடலலைகள் பற்றிக்
கற்றுத்தந்தீர்களே
கடலைத் தரிசிக்கக்
காலம் தந்தீர்களா?

பகல் முழுவதும்
விண்மீன்களைப் பற்றிப்
பாடம் நடத்திவிட்டு
எங்கள் இரவுகளைப்
புத்தகங்களுக்குள்
புதைத்துவிட்டீர்களே!

மரங்களுக்கு உயிருண்டென்று
போட்டிப்போட்டு நிரூபித்தீர்களே
எங்களுக்கும் உயிருண்டென்று
தெரியவில்லையா உங்களுக்கு?

எங்கள்
அழகியல் உணர்வுகளை
அழித்துவிட்டீர்களே.

எங்கள்
கலைச்சிந்தனைகளைக்
கலைத்துவிட்டீர்களே.

பெண்களுக்குப்பின்னால்
ஓடக்கூடாதெனச் சொல்லிவிட்டு
மதிப்
பெண்களுக்குப் பின்னால்
ஓடவிட்டுவிட்டீர்களே!

ரோஜாமலர் எங்களுக்கு
அழகில்லை
நீலமலைகள் எங்களுக்கு
வியப்பில்லை
அந்திவானம் எங்களுக்கு
அதிசயமில்லை

ஏனெனில்

எங்கள் மனத்தில் ஓடுவதெல்லாம்
(a+b)²=a²+b²+2ab.

சமீபத்தில்
கேள்விப்பட்டேன்.

மூன்று வயது
நான்கு வயது
பிஞ்சுகளும்
இக்கொடுமைக்கு
விதிவிலக்கில்லையாமே?

உலகத்து ஆண்களின்
விந்துகளிலும்
அகிலத்துப் பெண்களின்
அண்டங்களிலும்

ஒளிந்திருக்கும் உயிர்களே
கவனமாயிருங்கள்.

உங்கள் தாயின்
கர்ப்பப்பையில் கூட
கல்விச்சாலைகள்
தொடங்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன்,
ஆல்தன் ஆல்ஸ்டன்

உண்மையிலேயே இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் என்னைக்
காக்கையாக்கி விரட்டியது.
ஒவ்வொரு வரியும் உயிருள்ளது.
இக்கவிதை எத்தனை காலம் உங்கள் கவிதை கருவில் கிடந்து உதைத்ததோ?


Althan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே