-காக்கைகள் கவனத்திற்கு..!!

அன்புள்ள
காக்கைக்கு....

மனிதனை புறக்கணித்து
மாற்றுக்கிரகம் தேடு;

இல்லையேல்,
இரண்டாம் இனமாய்
தெரிந்தே பலியாவாய்,

மூன்றாம் இனமாய்
முன்னேற்பாட்டுடன்
முறி படுவாய்...

கவனங்கள்;
கவனியுங்கள்...

கறைகொடியுடைய
வீட்டில் மறந்தும்
தரையிறங்காதே..,
இறங்கினால்
இனக்கலவரம்..!?

கொக்கிற்கும்
உங்களுக்கும்..!

பறந்து விடு..

உயிரைத்தின்று
உத்சவம் நடத்தும்
பெருவிழா
காண்பதெப்படி.?
கற்பித்தாலும்
கற்பிப்பான்..

பறந்து விடு..


நீதிக்கேட்டு
வீதியில் பறந்தால்
சாலைத்தேடி
சட்டம் வரும்.,
வீடு தேடி
தடியடி வரும்..
பின்,
சிட்டைப்போல்
பட்டுப்போவாய்..

பறந்து விடு..


உன்
பாட்டன் பறந்த
வீதியில்லை;
பரிவாய் பார்க்க
நாதியில்லை;
பின்,
பாதுகாப்புப்பெட்டகத்தில்
பக்குவமாய்
படமாவாய்...!

பறந்து விடு..


மூழ்கி குளிக்க
ஓடையில்லை;
குளித்து அமர
மரங்களும் இல்லை.,

கோவில்
கோபுரங்கள் கூட
அரசியல் அலுவலகமாய்....!

பறந்து விடு..


நீ
கல் போட்ட
பானையும் இல்லை;
கல் விழுந்த
தண்ணீரும் இல்லை;
கள்ளச்சாராயம் கூட
பாலித்தீன் பைகளில்...!

பானைத்தேடி
பறந்து விடு..


விடிவதற்குள்
பறந்து விடு;
விமான நெரிசல் ஆரம்பம்…!

மடிவதற்குள்
பறந்து விடு;
நாளை
இரும்புமரம்
கூட முளைக்கலாம்…!

தொடுவதற்குள்
பறந்து விடு;
கதிர்வீச்சுகள்
காத்திருக்கிறது...!

நேற்று அரிசி விற்பனை;
இன்று குழம்பு விற்பனை;
நாளை கோழியும் அழியும்...

நான்காம் நாள்..
நீ தான் இலக்கு..!

பறந்து விடு..


இன்னும்
சொல்லப்போனால்...

ஆண்
காக்கைகள்
ஆயுதமெடுக்கும்…!

பெண்
காக்கைகளுக்கு
பிரசவ வலி வரும்...!!

எங்கள்
ஆறாம் அறிவை
உங்கள்
வலப்பக்க
மூளைக்குள்
வலுக்கட்டாயமாய் திணிப்போம்..!

பின்,
உங்களுக்குள்ளும்
உளவாளி
செய்வோம்...!

உங்களையும்
மதம் பிரிப்போம்..!!

கடைசியில்,

காக்கைக்கும்
மனிதனுக்கும்
கலப்புத்திருமணமும் நடக்கும்...!!

எங்கள்
அறிவியலில்
எதுவும் சாத்தியம்..

பறந்து விடு..

நாளடைவில்
உங்கள் கூடுகளுக்கெல்லாம்
வரி விதிப்போம்.,

வாதாடினால்,
விசாரணைக்கு
கைதும் செய்வோம்.,

இரண்டு தலைமுறைக்கு
இழுத்தடித்து
தள்ளாடும் வயதில்
தள்ளுபடியும் செய்வோம்..

பறந்து விடு..

முடிந்தவரை
சொல்லி விட்டேன்..
உங்கள்
முடிவையும்
சொல்லி விட்டேன்..

சொல்லியதால்,
என் கவிதைக்கு
எழுத்தடங்கு உத்தரவும் வரும்..!

ம்ம்.....
உங்கள் உலகத்தை
கண்டறிய
புறப்படுங்கள் சீக்கிரம்.....

வானடங்கு
உத்தரவும்
வரப்போகிறதாம்...!



--வரிகள்..
க.ஷர்மா.

எழுதியவர் : க.ஷர்மா. (21-Aug-13, 11:12 am)
பார்வை : 4767

மேலே