ராஜேஷ் லிங்கதுரை- கருத்துகள்

அருமை. தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளைத் திரட்டினால், அவற்றில் ஆண்களை நேரடியாகத் திட்டும் வார்த்தை ஒன்று கூட இருக்காது. இதுவே நாம் கடைபிடித்த பெண்ணடிமைத்தனத்துக்கு சாட்சி. அடிமைத்தளைகளில் இருந்து பெண்கள் மீண்டு வந்தாலும் இன்னும் அந்த வக்ர எண்ணம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் வலியை அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கோட்டிக்காரி, கோட்டிக்காரன் போல மேலும் சில வார்த்தைகளை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பாம்படம் என்ற சொல் அங்கு வழக்கில் உண்டு. பாட்டிமார்கள் அணியும் கம்மல் போன்றது, ஆனால் கம்மலை விட மிகவும் பெரியதாக இருக்கும். அதை அணிந்து காதே ஊஞ்சல் போல நீளமாக தொங்கும். இது போல இன்னும் பல வார்த்தைகள் உண்டு. பாம்படம் என்ற சொல்லை மறந்தது சற்று வருத்தமளிக்கிறது. வீட்டின் முதல் அறைக்கு ஊரில் தார்சா என்று பெயர். சென்னி என்பது சுத்தமான தமிழ்ச்சொல். சிலப்பதிகாரத்தில் சென்னி என்ற சொல் பய்னபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னி என்றால் உச்சந்தலை என்று பொருள். சென்னியைப் பெயர்த்து எடுத்து விடுவேன் என்று திட்டுவது வழக்கம். இன்று அந்த சொல் வழக்கில் இல்லை. செடிசேத்தை என்றால், பாம்பிரணை போன்ற பூச்சிகளைக் குறிக்கும் சொல். ஊரில் பாம்பிரணையை, சாம்பிராணி என்றுதான் சொல்வார்கள். கோடி என்றால் புத்தாடை என்று பொருள். கோடி என்ற சொல்லும் புத்தாடை என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. ஈரக்கொலை என்றால் நெஞ்சு என்று அர்த்தம். ஒடங்காடு என்றால் கருவேலங்காடு. மூதேவி என்ற சொல்தான் சுருங்கி மூதி என்றாகி விட்டது. கறுக்குமட்டை என்றால் பனைமட்டை.

தூத்துக்குடியில் பிறந்த ஒருவன் காதல் கவிதை எழுதினால் எப்படியிருக்கும் இருக்கும் என்ற கற்பனைதான் இந்த கவிதை. தூத்துக்குடியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதை. தூத்துக்குடி, திருநெல்வேலி தவிர பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு சில வார்த்தைகள் சற்று கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன். அர்த்தம் புரியாத வார்த்தைகளைச் சொன்னால் விளக்கமளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். கவிதையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-5P

தொலைக்காட்சிப்பெட்டியில் படம் பார்க்கிறோம். அலைக்கற்றைகளை உள்வாங்கிக்கொள்ளும் அமைப்பு தொலைக்காட்சிப்பெட்டியில் இருக்கிறது, அதனால் நமக்கு படம் தெரிகிறது. அலைக்கற்றை எல்லா இடங்களிலும் இருக்கிறது, ஆனால் அதனை உள்வாங்கிக்கொள்ள தொலைக்காட்சிப்பெட்டி வேண்டும். வெறும் அலைக்கற்றையால் ஒரு பயனும் இல்லை. அதேபோல், இந்த உடலுக்குள் உயிர் இருக்கும் வரைதான் உடலுக்கு மதிப்பு. உயிரால் தனியாக செயல்பட முடியாது, செயல்பட உடல் வேண்டும். உடல் இல்லாத ஒரு உயிருக்கு என்ன ஆற்றல் இருக்க முடியும். அதற்கு ஒரு சக்தியும் கிடையாது. கடவுள் என்ற ஒருவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று மதவாதிகள் சொன்னார்கள். அப்படியானால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் கடவுள்தான் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றுக்கு யார் மீது பழி சுமத்துவது என்று யோசித்து பேய் உருவாக்கப்பட்டது. உண்மையில் கடவுளும் கிடையாது, பேயும் கிடையாது. நிம்மதியாக தூங்குங்கள்.

எழுத்துப் பிழைகளைத் திருத்தும் முன்பே பதிலுரை பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. பிழைகளுக்கு மன்னிக்கவும்.

இதில் பார்ப்பன எதிர்ப்பு எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிவயோகி, திருமூலர் உடலில் புகுந்த பின்புதான் திருமூலருக்கு ஞானம் வருகிறது போல் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். நான் இங்கு கவிஞர் சாரலன் கூறுவதற்கு மறுமொழி கூறவில்லை. பொதுவாக திருமூலர் பற்றிப் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எனது பதிலுரையை அமைத்திருக்கிறேன். மேலும் பார்ப்பனர் என்று அல்ல, ஒரு சாதியை தன்னுடைய சாதியை விட கீழான சாதி என்று கருதும் ஒவ்வொருவரும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்தான், அவர்கள் எந்த சார்ந்தவர்களாக இருந்தாலும்.

மேலும் கடவுள்கள், சித்தர்கள் தொடங்கி சாதாரண மனிதர்கள் வரை பிராமணயமாக்குதல் என்று காலந்தோறும் நடந்து வரும் ஒன்றுதான். முருகன் குறவர் இனத்தை சேர்ந்தவன், அவனுக்கு ஏன் பூணூல் அணிந்தது போன்ற படங்கள் உருவாக்கப்படுகின்றன? சிவனுக்கு உருவமே கிடையாது என்பது நமது கோட்பாடு. ஆனால் சிவன் படம் உருவாக்கப்பட்டு அதற்கும் பூணூல் அணிவிக்கப்படுகிறது. பிள்ளையார் படத்தில் ஏன் பூணூல் ஏன்? தெரிந்தால் விளக்கவும்?

ஆதிசங்கரர், ராமானுஜர் துவங்கி பாரதியார் வரை, சூத்திரர் என்று முத்திரை குத்தப்பட்ட பலரை பிராமணர்களாக மாற்றிய வரலாறு நமக்குத் தெரியும். மேலோட்டமாகப் பார்த்தால், நல்லது செய்தது போலத்தான் தெரியும். ஆனால் மறைமுகமாகப் பார்த்தால் இந்த சாதி மாற்றம் என்பது ஆதிசங்கரர், ராமானுஜர், பாரதியார் ஆகியவர்களின் மேல்சாதி மனநிலையையே காட்டுகிறது. அவர்கள் எல்லா சாதியையும் சமதளப் பார்வையோடு அணுகுபவர்களாக இருந்திருந்தால் அவர்கள் சூத்திரர்களாக மாறியிருக்க வேண்டும். சூத்திரர்களை பிராமணர்களாக மாற்றுவதென்பது, உயர்சாதி மனநிலையன்றி வேறில்லை.

சாதி எதிர்ப்பு என்பது எல்லா மட்டத்திலும் தேவைப்படுகிறது. அதைப் பார்ப்பன எதிர்ப்பு என்று அந்த வட்டத்தை பெரியாரைப் போல நான் குறிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதே போல் இன்னொரு முதன்மையான செய்தியையும் பதிவு செய்ய விரும்புகிறேன். எல்லா ஆரியர்களும் பார்ப்பனர்கள் இல்லை, அதேபோல் எல்லா பார்ப்பனர்களும் ஆரியர்களும் இல்லை. குறுந்தொகையில்
"ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகைவெண்நெற் றொலிக்கும்." என்ற வரிகள் வருகின்றன. இது கயிற்றில் ஆடிப் பிழைப்பு நடத்தும் ஆரியர்களின் ஒரு பிரிவினரைக் காட்டுகிறது. ஆகவே ஆரிய எதிர்ப்பு என்றாலே பார்ப்பன எதிர்ப்பு என்ற பார்வை தவறு.

திராவிடம் தொடர்பாக நான் எழுதிய கட்டுரை. கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும். சமயம் வாய்க்கும் போது கட்டுரையைப் படிக்கவும்.

https://wp.me/p9pLvW-13

திருமூலருக்குப் பின் கூறப்படும் கதைகளில் எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் கல்வி கற்று திருமந்திரம் எழுதினால் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளாதா? ஒரு பார்ப்பனர் அவர் உடம்பில் நுழைந்த பின்தான் திருமூலருக்கு கல்வியறிவு வந்ததா? இது வர்ணாசிரம அதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் கதையே தவிர, கூடு விட்டு கூடு பாயும் வித்தையெல்லாம் திருமூலரிடம் நடந்ததாக நான் நம்பவில்லை. ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் படித்து திருமந்திரம் எழுதினான் என்றால் என் சமூகத்தின் அன்றைய கல்விநிலையை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதுதான் உண்மையும் கூட.

நிகழ்காலத்தின் நிதர்சனங்களையும், கடந்த காலத் தவறுகளையும் என்று நாம் மனதார ஏற்றுக்கொள்ளும்போதுதான் வருங்காலம் பற்றிய தெளிவு கிடைக்கும். பழம்பெருமை பேசுவதில் தவறவில்லை, அதே சமயம் வரலாற்றின் தவறுகளையும் சமநோக்கோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. தாங்களும் இதில் உடன்படுகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.

தாங்கள் சொல்வது உண்மைதான். நமது முன்னோர்கள் வாழ்ந்த உச்சத்தை ஒப்பிடும்போது, அதற்குப் பின்னால் வந்த தலைமுறையினர் புகழோடு வாழவில்லை என்பது உண்மைதான். அதற்கு சில காரணங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

முதல் காரணம், நமது மூவேந்தர்கள் முதல் குறுநில மன்னர்கள் வரை ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டது.

இரண்டாவது காரணம், 3 ம் நூற்றாண்டில் நம் நாட்டுக்குள் புகுந்த களப்பிரர்கள், தமிழ்நாடு முழுவதையும் 300 ஆண்டுகள் ஆண்டனர். 575 ம் ஆண்டு கடுங்கோன் பாண்டியன் ஆட்சியைக் கைப்பற்றும் வரை தமிழ்நாட்டில் நடந்தது கன்னடர் ஆட்சி.

மூன்றாவது, வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட சேர நாடு மலைகளால் கிழக்கு மேற்காகப் பிரிந்து கிடந்தது. ஆகையால், ஆரியர்கள் ஊடுருவி ஆரிய மொழி கலந்து மணிப்பிரளவம் என்ற மொழியை உருவாக்கி, பின்பு அதுவே மலையாளம் என்று ஆனது. பின்னர் சேரநாடு, கேரள நாடாகிப் போனது.

நான்காவதாக, பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனுக்குப் பின் சோழ நாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன் தெலுங்கு நாட்டைச் சேர்ந்தவன்.

பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்களுள் நடந்த தாயாதிச் சண்டைகளைப் (அண்ணன் தம்பி சண்டை) பயன்படுத்தி, விஜயநகரப் பேரரசின் கீழ் அமைச்சராக இருந்த விஸ்வநாத நாயக்கர் மூலம் நாயக்கர் ஆட்சியின் கீழ் மதுரை வீழ்ந்து கிடந்தது.

அதன் பின்னர் தஞ்சாவூரை சிவாஜி வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னர்கள் ஆண்டனர். ஆங்கிலேயர் வசம் வந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆக நமது நாடு அடிமைத்தளை இல்லாமால் விடுதலைக் காற்றை சுவாசித்து 1000 ஆண்டுகளுக்கு முன்புதான். சங்க காலத்தில்தான் தமிழ்நாடு முழுமையாக தமிழர் வசம் இருந்தது. அப்போதுதான் நம் இனம் பெருமை கொள்ளும்படி வாழ்ந்தது. அதன் பின்னர் அடிமைப்பட்டுக் கிடந்த ஆயிரம் ஆண்டுகளில் சில வரலாற்றுப் பெருமைகள் விதிவிலக்காக இருக்கலாம். இது என்னுடைய பார்வை.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்லணை காட்டியது, திருமாவளவன் என்று கரிகால் சோழன். 1000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் கோயில் என்று நான் குறிப்பிட்டது தஞ்சை பெரிய கோயில், அதை காட்டியது அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழன். வாதம், பித்தம், சிலேத்துமம் குறித்த செய்திகளை நான் திருக்குறளில் இருந்து குறிப்பிடுகிறேன். வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற செய்தியும் திருக்குறளில் இருந்துதான் குறிப்பிடுகிறேன். வானியல் அறிவு குறித்த தகவல்களும் நமது சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. இவற்றில் ஆரிய தகவல் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? மேலும் என்னைப் பொருத்தவரை ஆரியம், திராவிடம் இரண்டுமே தமிழுக்கு அந்நியமான வார்த்தைகள்தான்.

புஷ்பக விமானம் எல்லாம் அழகான கற்பனை, அதற்குப் பின்னால் அறிவியல் கற்பனை இருக்கிறதே தவிர, அந்தக் காலத்தில் விமானமே இருந்ததாகவோ, அல்லது விமானம் தயாரிக்கும் அறிவு இருந்ததாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் காலத்திற்கு ஏற்ற அறிவியல் வளர்ச்சி தமிழர்கள் நடுவில் இருந்தது அவ்வளவுதான். "வெள்ளத்தனைய மலர்நீட்டம்" என்பது செடிகொடிகளைப் பற்றி நமக்கு இருந்த அறிவு, வெள்ளத்தின் அளவுக்கேற்றவாறு நீர்த்தாவரங்கள் தங்கள் உயரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும் என்பதை, அறிவியல் உலகம் 18 ம் நூற்றாண்டில்தான் கண்டறிந்தது, ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொன்னார். வாதம், பித்தம், சிலேத்துமம் போன்ற மனித உடலின் கூறுகளை ஆராய்ந்த அறிவு தமிழர்களுடையது. வானியலில் கோள்கள் பற்றிய அறிவு தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் விண்வெளிக்கு செல்லும் அறிவு நமக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே அணை கட்டும் அறிவு நமக்கு இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் கோயில்களைக் கட்டும் அறிவு நமக்கு இருந்தது. தமிழர்கள் அறிவார்ந்த சமூகம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்றைய அறிவியலின் உச்சத்தை எல்லாம் அன்றே உருவாக்கினோம் என்று பொய்யான நம்பிக்கையை விதைப்பதில் ஒரு பயனும் இல்லையென்று கருதுகிறேன்.

“ஓன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”

இது தொல்காப்பியத்தில் வரும் பாடல். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆறு அறிவையும் விவரித்து சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு எடுத்துக்காட்டு. இது போல பலவற்றைக் கூறலாம். உங்கள் கேள்வி பொதுவாக இருப்பதால், எது போன்ற பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

நான்கு பரிமாணங்களைக் கடந்தவர்தான் கடவுள் என்றால், கடவுள் கட்டாயம் அஃறிணையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

கடவுள் இருக்கிறார், அவர்தான் அனைத்துக்கும் காரணகர்த்தா என்று நம்புபவர்களுக்கு ஒரு பதில் கேள்வி. அனைத்துக்கும் கடவுள்தான் காரணம் என்றால், உலகில் நடக்கும், இனப்படுகொலைகள், கற்பழிப்புகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு யார் காரணம். அதைத் தடுக்க கடவுள் ஏன் வரவில்லை.

நல்ல கட்டுரை. அகலிகை தவறு செய்தாளா இல்லையென்று முடிவு செய்ய ராமனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதென்பது நல்ல கேள்வி. ஆனால் முடிவில் "இன்று ராமனைக் குறைசொல்லிக்கொண்டிருக்கும் அத்தனை கணவர்களும் பிரமநாயகம்பிள்ளைகள்தான்" என்ற வார்த்தையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், ராமன் குறை சொல்ல வேண்டிய கதாப்பாத்திரம்தானே? தங்கள் கருத்தை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மிக்க நன்றி. மேலும் இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகள் படைப்பதற்கு எத்தனிக்கிறேன்.

தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.


ராஜேஷ் லிங்கதுரை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே