எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நதி நனைவதில்லை ஒருமழைக் காலத்தில் உன்னோடு கரம் சேர்த்து...

நதி நனைவதில்லை

ஒருமழைக் காலத்தில்
உன்னோடு கரம் சேர்த்து
நாம் நடந்த அந்த நாட்களை
நீ மறந்து போயிருக்கலாம்
அது எனக்கு
இரவு நேரத்து நிலாக் காலம்
ஆகாயத்தில்
வான வியாபாரி
வைரங்கள் விற்ற போது
நானுன் மூக்குத்தி வெளிச்சத்தில்
மிளிர்ந்து ஜொலித்தேன்.....
அருவி எழுப்பிய ஜலதரங்கம்
ஏனோ என் காதுகளுக்கு எட்டாமல்
உன்கால் கொலுசொலியில்
காவியம் படித்தேன்......
சந்திரனும் சூரியனும்
சங்கமிக்கும் இடம்
உன்முக வட்டதில்தானே
ஒரு சிவப்பு குங்குமமாக
ஒரு மூன்றாம் பிறை நெற்றியாக ....
மூங்கிலின் வழவழப்பையும்
அதன் குழல் இசையையும்
கொண்டதால்தானே
நீவழுக்கிவழுக்கிச் சென்றாயோ .....
நாதமே....
எனக்குத் தெரிந்த ஐந்தாம் வேதமே ......
உன் சிரிப்பொலியில்
ஒரு புலவர் பாட்டிசைத்தார் ...
உன் கருவிழிப் பார்வையில்
ஒரு மனிதன் காந்தம் கண்டு பிடித்தான்....
நீயுமொரு திசைகாட்டி
நீ இருக்குமிடமெல்லாம்
வண்டுகள் உன்னை மொய்ப்பதால்
உன் எதிர் திசையில் தானே
பூங்காக்கள் இருக்கும்..
என் நந்தவனத்தில் நீஒரு நகரும் தேர் ...
என் சமுத்திரத்தில் நீ ஒரு வலம்புரிச் சங்கு ..
உன்மேனி பார்த்து நான் தலை வாருவதால்
என் வீட்டில் எதற்கு கண்ணாடி .....
நீ வந்த பிறகுதானே
என் வீட்டு மின் கட்டணம்
ஏகத்துக்கும் குறைந்தது ..
நீயே குளிரூட்டும் எந்திரம்
நீயே சுகந்தமாய் வீசும் தென்றல் மந்திரம் ....
மின்விசிறிகளும்
குளிர்சாதனப் பெட்டியும்
ஓய்வெடுத்து கொள்கின்றன ஒரு மாமாங்கமாய்
என்வீட்டில் .
பூச்சரம் சூட்டி பார்த்த என்னால்
பாச்சரம் சூட்டிப் பார்க்க புலமை இல்லையே ...
பக்கத்து புலவன் வள்ளுவனை துணைக்கழைத்தேன்....
அவனைப் போல் நானும் குழம்பினேன்......
அட -
என் வீட்டு தோட்டத்து குளத்தில்
எப்படி இரு நிலவுகள் வந்தன
நீ வந்த போது மட்டும்....

சுசீந்திரன்.

நாள் : 10-Nov-14, 10:38 pm

மேலே