எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் மாணவர்கள் : திரைப்படங்களை...

படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் மாணவர்கள் :

திரைப்படங்களை தீவிரமான கலை ஊடகமாக ஏன் இடது சாரிகள் கருதவில்லை? இடதுசாரி பார்வைகள் கொண்ட பீ.லெனின், ஜனநாதனின் படங்கள் திரைப்பட வடிவம் சார்ந்து இல்லாமலிருப்பது ஏன்.?

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் பதில் :

பொதுவாக இடது சாரிகள் மதத்தினை போதைப்பொருள் என்று கருதினார்கள். இதனை 'பிறழ்ந்த பிரக்ஞை' என்று சொல்வார்கள். அதைப்போலவே தமிழ்ச்சினிமாவைப் பற்றிய அவர்களது கண்ணோட்டம் என்னவென்றால், தமிழ்சினிமா இயல்பான வாழ்க்கைக்கு மாறாக கற்பனை சார்ந்த வாழ்வை முன்வைக்கின்றது. அதேபோல தமிழ்மக்களின் பிரச்சனைகளைச் சொல்லாமல் முற்றிலும் கற்பனாவாதமான வாழ்க்கையை தமிழ்சினிமா உலகம் படைப்பிக்கிறது. இந்தமாதிரியான சினிமாவிற்கு எங்கள் நேரத்தை செலவிட விரும்பவில்லை என்ற கருத்தோட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தார்கள்.

இந்தக் கருத்தோட்டம் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மட்டுமில்லை என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். ராஜாஜி திரைப்படங்களை நேர்மையான ஊடகமாக பார்க்கவில்லை. பெரியார் திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார். அதைப் போன்ற கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தவர்தான் காமராஜரும். தமிழக மக்களின் அரசியலை, அரசியலின் மூலம் வாழ்க்கையை மாற்றமுடியும் என்று நினைத்த தலைவர்கள் பலரும் இந்தச் சினிமாவை எதிர்மறையாகவே பார்த்திருக்கின்றார்கள்.

இந்த பார்வைதான் தமிழகத்தில் மார்க்ஸியவாதிகளுக்கும் இருந்தது. இதன் காரணம் என்னவென்றால், இந்த சினிமா என்பது பிறழ்ந்த பிரக்ஞையாக, கனவுலகத்தைப் படைப்பதாக, வாழ்விற்கும் சினிமாவிற்கும் சம்பந்தமில்லாமல் சுழல்கின்றது. இந்த மாதிரியான எதிர்மறை பார்வைகள் இடதுசாரிகளிடம் இருந்தது. அதனைத் தவறான பார்வை என்று சொல்வேன். முக்கியமாக, வெகுஜனக் கலைகளின் மீதான பார்வைகள் எங்களுடைய மார்க்ஸியவாதிகளிடம் அதிகமாக விவாதிக்கப்படவோ விமர்சிக்கப்படவோ இல்லை. ஜீவானந்தம் போன்றவர்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஜீவானந்தம் பெரும்பாலான சினிமாக் கலைஞர்களிடம் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக அவருக்கு சிலை வைக்க உதவியதில் எம்.ஜி.ஆரின் பங்குதான் அதிகம் என்று வரலாறு இருக்கிறது. அந்த அளவிற்கு ஜீவானந்தம் அனைத்து திரையுலகப் பிரபலங்களிடமும் தொடர்பு வைத்திருந்தார்.

பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட ஜீவாவின் கலை ஈடுபாட்டில் விருப்பமற்று இருந்தார்கள். அவர்களின் இந்த எதிர்மறைப் பார்வைக்கான காரணம் என்னவென்று கேட்டால், இந்தச் சினிமாவினால் ஒன்றையும் மாற்ற முடியாது, சினிமா எடுப்பதென்பது உருப்படியில்லாத வேலை. இதுதான் அவர்களின் எண்ணம்.

மிக முக்கியமாக, வெகுஜனங்களின் மீது சினிமா எந்தவிதமான மாற்றத்தை தோற்றுவிக்கிறது என்பதனை வெகுஜனகட கலைகளின்பாலான கிராம்ஸி அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டதன் வாயிலாகத்தான் உலகளவில் சினிமா பற்றிய விவாதங்கள் இடதுசாரிகள் மத்தியில் தோன்றியது. வெகுஜனக் கலைகளை எவ்வாறாக அணுகுவது? ஒரு இசையை எவ்வாறாக அணுகுவது? ஒரு நாட்டுப்புறப்பாடலை எவ்வாறாக அணுகுவது என்று விவாதிக்க ஆரம்பித்தனர். ஒரு இசை வடிவத்திற்குள்ளே, ஒரு நாட்டுப்புறப்பாடலுக்குள்ளே, பழமொழி என்று சொல்லப்படுவதில் கூட மேலாண்மை என்பது, அதிகாரம் என்பது செயல்படுகிறது. அந்த அதிகாரத்திற்கு எதிரான எதிர்ச்செயல்பாடுகள், ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுபான்மையினரின் எதிர்ச்செயல்பாடுகளும் சமவேளையில் அதனுள்தான் இருக்கின்றது என்று கிராம்ஸி வாதிடுகிறார்.

நீங்கள் பயனற்றது என்று சொல்கின்ற ஒரு வெகுஜனக் கலையில் கூட அதிகாரம் செயல்படுகிறது. அந்த அதிகாரத்திற்கு எதிரான எதிர்ச்செயல்பாடும் அதனுள்ளேயே இருக்கின்றது, நீங்கள் என்னதான் சினிமாவை கனவுலகு என்று சொன்னால்கூட, அந்தக் கனவுலகிலும் வெகுஜன மக்களின் வாழ்க்கைக்கான உண்மை இருக்கின்றது என்று கிராம்ஸி சொன்னார். அதாவது, அடிப்படை வாழ்வின் உண்மையை எடுத்துக்கொண்டு அதனையே மாற்றி கனவுலகமாகவும், எதார்த்தமின்மையாகவும் திரித்து சினிமாவுலகம் உங்களுக்கு காட்சிப்படுத்துகிறது. இது இப்படியாகத்தான் வெகுமக்களைப் பாதிக்கிறது என்றால், அவர்கள் மத்தியில் அவர்களது உளவியலை உருவாக்குறது என்று சொன்னால், இந்த வெகுமக்களின் விமோச்சனத்தில் நம்பிக்கைகொண்டிருக்கின்ற நீங்கள், மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற இந்தக் கலையை புறக்கணிக்கக் கூடாது.

இந்த வெகுஜனக் கலைக்குள் எப்படி அதிகாரமும், எதிரதிகாரமும் செயல்படுகிறது என்பதையும், எவ்வாறு உண்மை வாழ்க்கை, கனவாக உங்களுக்குச் சொல்லப்படுகின்றது என்பதையும் நீங்கள்தான் மக்களுக்குச் சொல்லவேண்டும். இதனைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். இதனைப்பற்றிய விமர்சனப்பார்வை உங்களுக்கு வேண்டும். இதனைவைத்து பல விவாதங்கள் உலக கம்யூனிஸ்ட்களின் மத்தியில் 70களில் எல்லா மட்டங்களிலும் நடந்தது. பொதுவாக வெகுஜன கலைகளையும், திரைப்படத்தையும் எவ்வாறு அணுகுவது என்று பல்வேறு விவாதங்கள் நடந்தேறின.

மூன்றாவது சினிமாக் கோட்பாட்டை உருவாக்கியவர்கள் மார்க்ஸிஸ்ட் கலைஞர்கள்தான். திரைப்படத்தில் அந்நியமாதல் கருத்தாக்கத்தை முன்வைத்து படத்தொகுப்பு சம்பந்தமாக சோதனைப்பூர்வமான முயற்சிகளைச் செய்துபார்த்த ’கோடார்ட்’, ஒரு மாவோயிஸ்ட்டாகத்தான் இருந்தார். அதேபோல மோண்டேஜ் நுட்பத்தை உருவாக்கிய ஐஸன்ஸ்டின் கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்தார். இதுமாதிரியான தொடர்ச்சிகள் உலகம் முழுவதிலும் இருந்தன. இதனடிப்படையில்தான் சினிமாவைப்பார்க்க வேண்டும் என்றவிதமான கண்ணோட்டம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வருவதற்கே மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது.

இப்போது சினிமாவின் வலிமையை கம்யூனிஸ்ட் கட்சிக்கள் உணர்ந்திருக்கின்றன. அறந்தை நாராயணனை எடுத்துக்கொண்டீர்களென்றால் தமிழ் சினிமாவின் வரலாற்றை முதன்முதலில் பதிவு செய்தவர். ஆய்வுப்பூர்வமாக அல்லாமல் அனுபவப் பூர்வமாக தமிழ்ச்சினிமாவிற்கான தகவல்களைத் தேடிச்சென்று ‘தமிழ் சினிமாவின் கதை’ எனும் புத்தகத்தை அவர் எழுதியிருக்கின்றார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்தான். இதனடிப்படையில் பார்த்தீர்களேயானால் கம்யூனிஸ்ட் கட்சியில் எதிர்ப்புகள் இருந்த அதே காலகட்டத்தில் வெகுஜனத்தை பிரதிபலிக்கின்ற கலை, வெகுஜன மக்களின் உளவியலைச் சென்றடையக்கூடிய கலைதான் சினிமா என்ற பார்வையும் இருந்தது..

வெகுமக்களின் விடுதலையில் நாம் நம்பிக்கை கொள்வோமென்றால், வெகுமக்கள் நேசிக்கின்ற இந்தக் கலைப்படைப்பின் மீது விமர்சனப்பூர்வமான விவாதங்களை நாம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்டுகளுக்கு தோன்றிற்று. இப்போதிருக்கின்ற முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்றவைகள் சினிமாவின் மீது ஓரளவிற்கு அக்கறை செலுத்துகின்றன. என்னைப்போன்றவர்கள் தொடர்ந்து இந்த விஷயத்தை வலியுறுத்துக்கொண்டு வருகின்றோம். எனது சிறுபிராயத்திலிருந்தே நான் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தேன். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் பல்வேறு அரசியல் சமூகப் பார்வைகளை என்னுள் உருவாக்கினார். இந்த அளவில் அவர்மீது எனக்கு மரியாதை இருக்கின்றது. அதேவேளையில் அவர் மீது கடுமையான விமர்சனமும் எனக்கு இருக்கின்றது.

பீ. லெனின் சார்ந்த சினிமாவிற்கு வருவோம். உண்மையில் சினிமா என்பது பயிற்சி சார்ந்த விஷயம்தான். அவர் அதியற்புதமான எடிட்டரும் கூட. ஆனால், ஒரு படம் நன்றாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொருளாதார வளம் இதில் முக்கியமானது. லெனின். படம் இயக்குகிற காலகட்டத்தில் உபகரணங்கள் எந்த விதத்தில் அவர்களுக்கு கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு ஜான் ஆபிரகாமின் இரண்டு படங்களை எடுத்துக்கொள்ளலாம். அவரின் அக்கிரஹாரத்தில் கழுதை படத்தைப் பார்த்தீர்களேயானால் ஒரு குடிசை எரிகிற மாதிரியான காட்சி இருக்கும். அது எடுக்கப்பட்ட விதம் பற்றிச் சொல்கிறேன் : குடிசை போன்ற மினியேச்சர் ஒன்றை உருவாக்கி அதனை தீக்குச்சியை வைத்து எரியவைப்பார்கள். தீக்குச்சியின் ஒரே பிளம்பில் அந்தக் குடிசை பற்றி எரியும். இன்றைக்கு அதேமாதிரி சினிமா எடுத்தீர்களென்றால் சிரிப்பாக இருக்கும். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஒரு குடிசை மாதிரியை உருவாக்குவதற்கு கூட அந்தப் படக்குழுவினருக்கு காசு இல்லை. அப்படி இந்த படத்தை மீண்டும் தகுந்த பொருளாதார தேவைகள் கொடுத்து மறு உருவாக்கம் செய்தால் அது அற்புதமான படமாக அமையும். ”அம்ம அரியான்” படமும் அதேபோல பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கின்ற படம்.


நன்றி : ” பேசாமொழி “ இணைய இதழ்

நாள் : 25-Jan-15, 9:10 pm

மேலே